Tamil Nadu Government: மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் தகுதியான பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சமூகப் பாதுகாப்பு திட்ட உதவித்தொகை (SSS Pension), இனி ஆதார் அடிப்படையிலான பணப்பரிவர்த்தனை முறையில் (Aadhaar Based Payment System) மட்டுமே வழங்கப்படும் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவுறுத்தியுள்ளது. இத்தகவலை வேலூர் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சமூகப் பாதுகாப்பு திட்டப் பயனாளிகளுக்கு இந்த மாதத்திற்கான உதவித்தொகை ஆதார் அடிப்படையிலான பணப்பரிவர்த்தனை முறை வழியாகவே வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு சில பயனாளிகளின் ஆதார் எண் அவர்களின் வங்கிக் கணக்குடன் முறையாக இணைக்கப்படாததால் (Aadhaar Seeding செய்யப்படாததால்), அவர்களுக்கான உதவித்தொகையை வங்கிக் கணக்கிற்கு அனுப்புவதில் தொழில்நுட்பச் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.
இம்மாத சமூகப் பாதுகாப்பு திட்ட உதவித்தொகை கிடைக்கப்பெறாத பயனாளிகள், உடனடியாகத் தங்களது சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைக்கு நேரில் செல்ல வேண்டும். அங்கு தங்களது வங்கிக் கணக்குடன் ஆதார் எண் முறையாக இணைக்கப்பட்டுள்ளதா (Aadhaar Seeding) என்பதைச் சரிபார்த்து, இணைப்பை உடனடியாக உறுதி செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வங்கி கணக்கில் ஆதார் இணைப்பது தொடர்பாகப் பயனாளிகளுக்கு எழும் சந்தேகங்களைத் தீர்க்கவும், தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் உதவிகளை வழங்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இந்த உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஆதார் இணைப்பு தொடர்பாக ஏதேனும் சிரமம் அல்லது சந்தேகம் ஏற்படும் பயனாளிகள், இந்த உதவி மையங்களை நேரில் அணுகி பயன்பெறலாம். ஆதார் எண் முறையாக இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு விவரங்கள் சரிபார்க்கப்பட்டு பதிவு செய்யப்பட்டவுடன், தகுதியுள்ள அனைத்துப் பயனாளிகளுக்கும் உரிய உதவித்தொகை தாமதமின்றி அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, விடுபட்ட பயனாளிகள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உடனடியாக ஆதார் – வங்கிக் கணக்கு இணைப்பைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.