Tamil Nadu Government : தமிழகத்தில் தொழில்முனைவோரை உருவாக்கவும், படித்த இளைஞர்கள் சொந்தமாகத் தொழில் தொடங்கி பொருளாதார ரீதியாக முன்னேறவும் தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், இல்லப் பராமரிப்பு பொருட்கள் மற்றும் தொழிற்துறை ரசாயனப் பொருட்கள் தயாரிப்பது தொடர்பான 3 நாட்கள் நேரடிப் பயிற்சி முகாம் சென்னையில் நடைபெற உள்ளது.
இப்பயிற்சி மூலம் பங்கேற்பாளர்கள் தேவையான செய்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு, உடனடியாகத் தங்களது சொந்த உற்பத்தித் தொழிலைத் தொடங்க முழு வழிகாட்டுதலும் வழங்கப்படுகிறது. அக்டோபர் 6 ஆம் தேதி முதல் அக்டோபர் 8 ஆம் தேதி வரை, அதாவது செவ்வாய் முதல் வியாழன் வரை 3 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த பயிற்சி நடக்கிறது.
இந்த பயிற்சியானது தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, EDII அலுவலகச் சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600 032 என்ற முகவரியில் நடக்க உள்ளது.
பயிற்சியில் கற்பிக்கப்படும் தயாரிப்புகள் - தினசரி பயன்பாட்டில் அதிக தேவை கொண்ட வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்குத் தேவையான பல்வேறு ரசாயனப் பொருட்களைத் தயாரிக்கும் முழு செய்முறைப் பயிற்சியும் இதில் வழங்கப்படுகிறது:
பாத்திரம் கழுவும் சோப் மற்றும் லிக்விட், துணி துவைக்கும் சோப் மற்றும் லிக்விட், துணிகளுக்கான பேப்ரிக் சாப்ட்னர் கண்டிஷனர், தரை சுத்தப்படுத்தி (Floor Cleaner), கிருமிநாசினி திரவம் (Dettol Type Formulation), கை கழுவும் திரவம், குடிநீர் தொட்டி சுத்தப்படுத்தும் திரவம், குழாய் அடைப்பு நீக்கும் பவுடர்,
தொழிற்துறை மற்றும் வாகன பராமரிப்புப் பொருட்கள்: கறுப்பு பினாயில், கட்டிங் ஆயில் மற்றும் கிரீஸ், இண்டஸ்ட்ரியல் சோப் ஆயில், தொழிற்சாலை தரை சுத்தப்படுத்தி, துருப்பிடிக்காத ஸ்டீல் மெட்டல் கிளீனிங் லிக்விட், கார் பாலிஷ்
ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சியின் நோக்கம்: வெறும் கோட்பாட்டு அறிவோடு நின்றுவிடாமல், பங்கேற்பாளர்கள் நேரடியாகத் தொழில் தொடங்குவதற்குத் தேவையான முழுமையான செயல்முறைப் பயிற்சி மற்றும் தொழில் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.
குறைந்த கட்டணத்தில் தங்கும் விடுதி வசதி: வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்து பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும், குறைந்த கட்டணத்தில் தங்கும் விடுதி வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி 'முதலில் வருபவருக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில் வழங்கப்படும்.
இப்பயிற்சியில் கலந்துகொள்ள முன்பதிவு செய்வது கட்டாயமாகும். ஆர்வமுள்ள தொழில்முனைவோர்கள் தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.editn.in வாயிலாக ஆன்லைனில் தங்களது பெயர்களை உடனடியாகப் பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்கள் மற்றும் பதிவுக் கட்டணம் குறித்த சந்தேகங்களை அறிந்து கொள்ள விரும்புவோர் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை 86681 02600 / 78069 18309 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.