தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து பொது சட்டம் ஒழுங்கு துறைக்கு விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன்மூலம் சட்டம் ஒழுங்கு தொடர்பான சில தகவல்கள் இனி ஆர்டிஐ சட்டத்தின் கீழ் வழங்கப்படாது என அறிவித்து தவெக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, காவல் மரணங்கள், துப்பாக்கிச்சூடு தொடர்பான அறிக்கைகள், சமூக - சாதிய மோதல்கள், மாணவர்கள், விவசாிகள், அரசியல் கட்சிகளின் போராட்டஙகள் தொடர்பான அறிக்கைகள், தகவல்களை இனி ஆர்டிஐ மூலம் பெற முடியாது என்ற நிலை ஏற்பட்டது.
அதேபோல், போராட்ட வழக்குகளை திரும்ப பெறுவதற்கான கோரிக்கைகள் உள்ளிட்டவை தொடர்பான தகவல்களையும் ஆர்டிஐ சட்டத்தின் மூலம் பெற முடியாது என கூறப்பட்டது. இதனால், தவெக அரசின் இந்த உத்தரவுக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் விசிகவும் கடும் எதிர்ப்பை தெரிவித்தது.
அதேபோல், மனித உரிமை செயற்பாட்டாளர்களும், மூத்த பத்திரிகையாளர்களும், அரசியல் செயற்பாட்டாளர்களும் தமிழ்நாடு அரசின் இந்த முடிவுக்கு தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
கடும் எதிர்ப்பை தொடர்ந்தும், பல்வேறு இயக்கங்களின் போராட்ட எச்சரிக்கையை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு இந்த அரசாணையை திரும்பப் பெறுவதாக முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அவரது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 24 உட்பிரிவு (4)-ன் கீழ், தமிழக அரசின் பொது சட்டம் - ஒழுங்கு துறைக்கு விலக்கு அளித்து, மனிதவள மேலாண்மை துறையால் வெளியிடப்பட்டிருந்த அரசாணை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
— CTR.Nirmalkumar (@CTR_Nirmalkumar) September 27, 2026
அந்த பதிவில், "தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 24 உட்பிரிவு (4)-ன் கீழ், தமிழக அரசின் பொது சட்டம் - ஒழுங்கு துறைக்கு விலக்கு அளித்து, மனிதவள மேலாண்மை துறையால் வெளியிடப்பட்டிருந்த அரசாணை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, "சட்டம் ஒழுங்கு தொடர்பாக 'தகவல்கள் ஏதும் கேட்க முடியாதென' , தமிழ்நாடு அரசின் பொதுத்துறை சார்பில் அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இது மனித உரிமைகளை நசுக்குவதற்கு வழிவகுக்கும். எனவே, அரசு இதனை உடனே திரும்ப பெறவேண்டுமென வலியுறுத்துகிறோம்" என விசிக தலைவர் திருமாவளவன் பதிவிட்டிருந்தார். விசிக தவெக அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் கட்சி என்பது கவனிக்கத்தக்கது.
சட்டம் ஒழுங்கு தொடர்பாக 'தகவல்கள் ஏதும் கேட்க முடியாதென' , தமிழ்நாடு அரசின் பொதுத்துறை சார்பில் அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இது மனித உரிமைகளை நசுக்குவதற்கு வழிவகுக்கும். எனவே, அரசு இதனை உடனே திரும்ப பெறவேண்டுமென வலியுறுத்துகிறோம். pic.twitter.com/4p2idGVugK
— Thol. Thirumavalavan (@thirumaofficial) September 27, 2026
அதேபோல், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரமும் தமிழ்நாடு அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அதில், "வெளிப்படைத்தன்மையான அரசு என்றால் தகவல் உரிமைச் சட்டத்தின் எல்லையை விரிவாக்க வேண்டுமே தவிர கட்டுப்படுத்துக் கூடாது.
துப்பாக்கிச்சூடு, காவல் மரணங்கள், சாதிய மோதல்கள் போன்ற முக்கிய தகவல்கள் மக்களிடம் இருந்து மறைக்கப்பட உள்ளன. தவெக அரசு இதனை திரும்பப் பெற வேண்டும்" கோரிக்கை வைத்திருந்தார். காங்கிரஸ் கடசியும் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளது. கூட்டணி கட்சிகளிடம் இருந்து அழுத்தம் அதிகமானதை தொடர்ந்து இந்த முடிவை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசு தனது உத்தரவை திரும்பப் பெற்றதை வரவேற்று காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினரும், முதலமைச்சர் விஜய்யின் நெருங்கிய நண்பராகவும் அறியப்படும் பிரவீன் சக்ரவர்த்தி அவரது X பக்கத்தில், உண்மை வலிமை என்பது குறைபாடற்ற தன்மையில் இல்லை, அதைச் சரிசெய்யும் துணிச்சலில் தான் உள்ளது என்று குறிப்பிட்டு அதை வரவேற்றுள்ளார்.
"உண்மை வலிமை என்பது குறைபாடற்ற தன்மையில் இல்லை, அதைச் சரிசெய்யும் துணிச்சலில் தான் உள்ளது"
மாண்புமிகு முதலமைச்சர் திரு விஜய் அவர்களின் தலைமையிலான த.வெ.க அரசு, பிற கட்சிகளின் கருத்துக்களுக்குச் செவிசாய்ப்பது மட்டுமின்றி, தேவைப்படும்போது அதைச் சரிசெய்யும் துணிச்சலையும் கொண்டுள்ளது… https://t.co/LuP9U2aUOO— Praveen Chakravarty (@pravchak) September 27, 2026
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, பிற கட்சிகளின் கருத்துக்களுக்குச் செவிசாய்ப்பது மட்டுமின்றி, தேவைப்படும்போது அதைச் சரிசெய்யும் துணிச்சலையும் கொண்டுள்ளது என்பதைத் தொடர்ந்து நிரூபித்து வருவதாக அவர் குறிப்பிட்டு பாராட்டுத் தெரிவித்தார்.