Tamil Nadu Government Omni Bus Inspection : விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை (செப். 14) கொண்டாடப்படுகிறது. இதனால் சனிக்கிழமை (செப். 12), ஞாயிற்றுக்கிழமை (செப். 13) என ஆகிய வார விடுமுறையுடன் நாளையும் அரசு விடுமுறை என்பதால் மொத்தம் மூன்று நாட்கள் தொடர் விடுமுறையாகும்.
தொடர் விடுமுறை முன்னிட்டு பலரும் சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். பேருந்து மற்றும் ரயில்தான் பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். பண்டிகை காலம் வந்துவிட்டாலே ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர் கதையாகிவிட்டது.
தற்போது தவெக ஆட்சி அமைந்திருக்கும் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றஞ்சாட்டி வந்தன.
இந்நிலையில், ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 4900 ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது என்றும்; வெளி மாநிலங்களில் இருந்து சுமார் 1000 ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டிற்குள் இயக்கப்பட்டு வருகிறது என்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து சுமார் 3000 ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வதற்காக இயக்கப்பட்டு வருகின்றன என்றும்; சுமார் ஒரு லட்சம் பயணிகள் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள் என்றும் அரசு அதன் செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் அதன் செய்தி குறிப்பில், "விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகளில் பொதுமக்கள் மற்றும் பயணிகளிடம் இருந்து நடைமுறையில் உள்ள கட்டணத்தை விட அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் பெறப்பட்டதை தொடர்ந்து, கடந்த மூன்று தினங்களாக, தமிழ்நாடு முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் (RTO) மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய குழு அமைத்து ஆம்னி பேருந்துகளில் சிறப்பு வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த மூன்று தினங்களில் தமிழ்நாடு முழுவதும் 3,512 ஆம்னி பேருந்துகள் தணிக்கை செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 639 ஆம்னி பேருந்துகளுக்கு தணிக்கை அறிக்கை மற்றும் இ-சலான் வழங்கப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.
இந்த சிறப்பு தணிக்கையின் போது, விதிமீறல்களுக்காக இணக்கம் 14 லட்சத்து 39 ஆயிரத்து 100 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும்; பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு தமிழ்நாட்டில் இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு செலுத்த வேண்டிய வரியாக 27 லட்சத்து 58 ஆயிரத்து 243 ரூபாய் வசூலிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.
இதன் மூலம், கடந்த மூன்று தினங்களில் மட்டும் ஆம்னி பேருந்துகள் தொடர்பாக வரி மற்றும் இணக்கக் கட்டணமாக மொத்தம் 30 லட்சத்து 77 ஆயிரத்து 243 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும்; இந்த தணிக்கையின் போது, நேற்றைய தினம் (செப். 12) அன்று, அதிக கட்டணம் வசூலித்ததாக கண்டறியப்பட்ட 11 ஆம்னி பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆம்னி பேருந்துகளில் ஆன்லைன் மூலம் பயணிகளால் பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டை வாகன உரிமையாளர் ரத்து செய்யும்பட்சத்தில் அந்த பயணிகளுக்கு மாற்றுப்பேருந்தில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படவேண்டும். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்து அனுமதிச்சான்று ரத்து நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும், விதிமீறல்களை கட்டுப்படுத்தவும் இந்த சிறப்பு வாகனத் தணிக்கை தொடர்ந்து தீவிரமாக செப்.16ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இனி வரும் நாட்களில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வரும்பட்சத்தில், அனுமதி ரத்து போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது.
புகார் தெரிவிக்க வேண்டிய கைப்பேசி எண் : 9384808333.
புகார் தெரிவிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி: tc.tn@nic.in