Tamil Nadu latest government rules : தமிழ்நாட்டில் திட்டமில்லாப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள், புன்செய் அல்லது தரிசு நிலங்களை வீட்டுமனைகளாகவோ அல்லது வணிகக் கட்டிடங்கள் போன்ற பிற வளர்ச்சிப் பயன்பாடுகளுக்கோ மாற்றுவதற்கு நகர் மற்றும் ஊரமைப்பு இயக்ககத்தின் தடையில்லாச் சான்றிதழ் பெறுவது கட்டாயமாகும்.
முன்பு இந்த அனுமதியைப் பெற விண்ணப்பதாரர்கள் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தையோ அல்லது மாநில அளவிலான நிர்வாக அமைப்புகளையோ எதிர்நோக்க வேண்டிய சூழல் இருந்தது. இதனால் விண்ணப்பங்கள் பரிசீலனை ஆவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனை எளிமைப்படுத்தி, பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் மனைப்பிரிவு உருவாக்குநர்கள் தங்களின் சொந்த மாவட்டத்திலேயே எளிதாக அனுமதி பெறும் வகையில், அதிகாரங்களை மாவட்ட நகரமைப்பு அலுவலர்களுக்கு வழங்கி நகர் மற்றும் ஊரமைப்பு ஆணையரகம் விரிவான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதிகாரப் பகிர்வு: மாவட்ட அளவிலேயே விண்ணப்பங்களைப் பரிசீலித்து முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளூர் அதிகாரிகளுக்கு வழங்கப்படுவதால், நிர்வாகத் தாமதங்கள் முற்றிலும் குறையும்.
விரைவான தீர்வு: பொதுமக்கள் தங்களின் பணிகளுக்காக மாநிலத் தலைமை அலுவலகத்திற்கு அலைய வேண்டிய அவசியமின்றி, மாவட்ட அளவில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளை நேரடியாகவும் விரைவாகவும் அணுக முடியும்.
ஒற்றைச் சாளர முறை: இடைத்தரகர்கள் இன்றி, அனைத்து ஆவணங்களும் முழுமையாக இணையவழியில் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்படும்.
1. இணையவழியில் விண்ணப்பம் மற்றும் ஆவணங்கள் சமர்ப்பித்தல்: விண்ணப்பதாரர்கள் நில வகைப்பாடு மாற்றம் மற்றும் என்ஓசி (NOC) கோரி தமிழ்நாடு அரசின் ஒற்றைச் சாளர இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஆவணங்களின் சரிபார்ப்புப் பட்டியல்படி அனைத்து ஆவணங்களும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
2. நேரடி கள ஆய்வு: ஒற்றைச் சாளர இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த பிறகு, சம்பந்தப்பட்ட மாவட்ட நகரமைப்பு அலுவலர் அந்த இடத்திற்கு நேரடியாகச் சென்று கள ஆய்வு மேற்கொள்வார். அந்த நிலத்தின் தற்போதைய கள யதார்த்த நிலை, சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் உத்தேசிக்கப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிக்கு அந்த நிலம் உகந்ததா என்பதை அவர் உறுதி செய்வார்.
கள ஆய்வு மற்றும் ஆவணச் சரிபார்ப்பில் திருப்தி அடைந்த பிறகு, மாவட்ட நகரமைப்பு அலுவலர் தனது முடிவை எழுத்துப்பூர்வ செயல்முறை ஆணையாக பதிவு செய்வார். அதில், விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் விண்ணப்ப எண், விண்ணப்பித்த தேதி, கிராமம், வட்டம், மாவட்டம், புல எண்கள் மற்றும் நிலத்தின் பரப்பளவு, பரிசீலிக்கப்பட்ட ஆவணங்களின் பட்டியல் மற்றும் நிலத்தை மாற்றுவது உகந்ததுதானா என்பதற்கான முடிவுகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்.
4. இணையதளத்தில் பதிவேற்றம் சிறப்பு பதிவேடு: மாவட்ட நகரமைப்பு அலுவலர் கையொப்பமிட்ட செயல்முறை ஆணையை ஸ்கேன் செய்து, ஒற்றைச் சாளர இணையதளத்தின் கள ஆய்வுப் பிரிவில் பதிவேற்ற வேண்டும். மேலும், அலுவலகத்தில் இதற்கெனத் தனியாகப் பராமரிக்கப்படும் பதிவேட்டில் அனைத்து விவரங்களையும் உடனுக்குடன் பதிவு செய்ய வேண்டும்.
சில குறிப்பிட்ட வகை அல்லது பெரிய திட்டப் பிரிவுகளின் கீழ் வரும் விண்ணப்பங்கள் தலைமை அலுவலகத்தின் வரம்பிற்குள் அமைந்தாலும், அவற்றிற்கும் மாவட்ட நகரமைப்பு அலுவலரே இணையதள ஆவணங்களைச் சரிபார்த்து, நேரடிக் கள ஆய்வை மேற்கொள்வார்.
பின்னர், தனது ஏற்பிசைவு மற்றும் பரிந்துரைக் குறிப்புடன் கூடிய செயல்முறை ஆணையை ஒற்றைச் சாளர இணையதளத்தில் பதிவேற்றி, அடுத்தகட்ட இறுதி ஒப்புதலுக்காகத் தலைமை அலுவலகத்திற்கு இணையவழியாக அனுப்பி வைப்பார்.
அலைச்சல் மிச்சம்: மாவட்ட அளவிலேயே கள ஆய்வும் சான்றிதழ் நடைமுறைகளும் முடிவடைவதால் தேவையற்ற காலதாமதம் தவிர்க்கப்படுகிறது.
வெளிப்படைத்தன்மை: விண்ணப்பத்தின் ஒவ்வொரு நிலையும் ஒற்றைச் சாளர இணையதளத்திலேயே பதிவு செய்யப்படுவதால், பொதுமக்கள் தங்கள் விண்ணப்பத்தின் நிலையை ஆன்லைனிலேயே கண்காணிக்க முடியும்.
வளர்ச்சிப் பணிகள் வேகம் பெறும்: நிலத்தின் பயன்பாட்டை மாற்றி அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனைகளாகவோ அல்லது தொழிலகங்களாகவோ அமைக்கும் பணிகள் எந்தத் தடையுமின்றி விரைவாக நடைபெறும்.