Tamil Nadu Rooftop Solar Subsidy: தமிழகத்தில் வீடுகளில் மேற்கூரை சூரிய மின்சக்தி நிலையங்கள் (Rooftop Solar) அமைக்கும் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மத்திய அரசின் நிதி உதவியுடன் கூடுதலாகத் தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பு மானியம் வழங்கி, அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை மானியம் பெற்றுத்தரும் புதிய திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசின் எரிசக்தித் துறை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் 2026-27-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசின் ‘பிரதம மந்திரி சூர்ய கர்: முஃப்த் பிஜிலி யோஜனா’ (PM Surya Ghar: Muft Bijli Yojana) திட்டத்துடன் இணைத்து புதிய மேற்கூரை சோலார் மானியத் திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சரால் அறிவிக்கப்பட்டது. வீடுகளில் சோலார் பேனல்கள் அமைப்பதன் மூலம் மின்கட்டணத்தைக் கணிசமாகக் குறைத்து இயற்கை எரிசக்திக்கு மாறுவதை ஊக்குவிக்க இத்திட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழகத்தின் தலைவர் தமிழக அரசுக்கு விரிவான கருத்துரு ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், வரும் 2027 மார்ச் 31-க்குள் தமிழகம் முழுவதும் உள்ள வீட்டு நுகர்வோரின் வீடுகளில் '1 லட்சம் மேற்கூரை சோலார் கட்டமைப்புகள்' அமைப்பதை இலக்காகக் கொண்டு, மத்திய அரசின் மானியத்திற்கு மேல் கூடுதலாக மாநில அரசின் மானியத்தை வழங்க அனுமதி கோரியிருந்தார்.
இக்கருத்துருவை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, எரிசக்தித் துறை மூலம் அரசாணை நிலை எண்: 102 (நாள்: 19.09.2026)-ஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் முதற்கட்டமாக 1 லட்சம் வீட்டு நுகர்வோர்களுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியுதவியுடன் கூடுதலாக மாநில அரசின் கூடுதல் மானியம் கீழ்க்கண்டவாறு வழங்கப்பட உள்ளது:
1 கிலோவாட் (Up to 1 kW): மாநில அரசு வழங்கும் மானியம் ரூ.5,000. மத்திய அரசின் ரூ.30,000 மானியத்துடன் சேர்த்து மொத்தம் ரூ.35,000 கிடைக்கும்.
2 கிலோவாட் (Up to 2 kW): மாநில அரசு வழங்கும் மானியம் ரூ.10,000. மத்திய அரசின் ரூ.60,000 மானியத்துடன் சேர்த்து மொத்தம் ரூ.70,000 கிடைக்கும்.
3 கிலோவாட் மற்றும் அதற்கு மேல்: மாநில அரசு வழங்கும் மானியம் ரூ.22,000. மத்திய அரசின் அதிகபட்ச மானியமான ரூ.78,000-உடன் சேர்த்து நுகர்வோருக்கு மொத்தமாக ரூ.1,00,000 (ஒரு லட்சம் ரூபாய்) முழு மானியமாக நேரடியாகக் கிடைக்கும்.
இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் திட்டக் கண்காணிப்புப் பணிகளைத் தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழகம் நோடல் ஏஜென்சியாகக் கண்காணிக்கும்.
திட்டத்தைச் செயல்படுத்தும் திட்ட மேலாண்மை முகமையாக தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை நியமிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் சோலார் தகடுகள் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டு, மின்வாரியத்தால் ஆய்வு செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த பிறகு, ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பு (IFHRMS) மூலம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கே நேரடியாக (DBT முறையில்) மானியத் தொகை வரவு வைக்கப்படும் என அரசாணையில் விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.