தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்தவர் ஆகாஷ் (23). இவர் நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே மேல அரியநாயகிபுரம் கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரது மகள் சுஷ்மிதா (21) என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார்.
ஆகாஷ், சுஷ்மிதா இருவருமே பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளனர். 2 பேரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் 2 பேரின் பெற்றோரும் அவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எனவே, பெற்றோரின் எதிர்ப்பையும் தாண்டி, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர், ஆகாஷ் - சுஷ்மிதா தம்பதி தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவகாமிபுரம் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
ஆகாஷ் தோட்டத்தில் நெல்லிக்காய் பறிக்க செல்லும் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். சுஷ்மிதாவின் தந்தை முருகன் தனது மகள் திருமணம் செய்து வாடகை வீட்டில் வசித்து வந்தாலும், அவரை ஏற்றுக்கொண்டு சிவகாமிபுரத்தில் அவர் வசிக்கும் வீட்டுக்கு நேரில் சென்று அடிக்கடி பார்த்து வந்துள்ளார் என கூறப்படுகிறது.
அதேபோல், மகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்தும் வந்துள்ளார் என கூறப்படுகிறது. நேற்று (செப். 10) வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு ஆகாஷ் இரவு வீட்டில் தனது மனைவியுடன் இருக்கும் போது அங்கு சுஷ்மிதாவின் தந்தை முருகன் வந்துள்ளார்.
தனது மருமகன் என்றும் பார்க்காமல் திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆகாஷை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். தடுக்க முயன்ற சுஷ்மிதாவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்திருக்கிறது. பின்னர் முருகன் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார்.
பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், அங்கு விரைந்து சென்று போலீசார் 2 பேரையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு போராடிய ஆகாஷை மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தொடர்ந்து ஆபத்தான நிலையிலேயே சிகிச்சையில் இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை வலைவீசி தேடினர். இந்நிலையில், வீரவநல்லூர் பகுதியில் வைத்து அவரை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தனர். வேறு சமூகத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்துவிட்டார் என்ற ஒரு காரணத்திற்காக, மூன்று மாதங்களாக வன்மத்துடன் வந்துசென்று மகளையும், மருகமகனையும் ஆணவக்கொலை செய்ய முயற்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.