விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சமீபத்தில் சொகுசு கார் ஒன்றில் பயணித்தது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதற்கு முக்கிய காரணம் அந்த காரின் நம்பர் பிளேட் தான். அதாவது அந்த நம்பர் பிளேட்டில் TN 07 CM 2031 என்று இருந்தது. திருமாவளவன் திடீரென ஏன் அந்த காரில் வந்தார்? சமூக வலைத்தளங்களில் இது ஏன் கடுமையாக விமர்சிக்கப்பட்டது? இது தொடர்பாக திருமாவளவனின் விளக்கம் என்ன? உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
சென்னை பூந்தமல்லி அருகே உள்ள செம்பரம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் EVP Film City-யில் சமீபத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சமூக நீதியின் சகாப்தம் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், விசிக தலைவர் தொல். திருமாவளவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவர் TN 07 CM 2031 என்ற நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட சொகுசு காரில் வந்து இறங்கினார். இந்த காட்சிகள் தான் சமூக வலைத்தளங்களில் வேகமான பரவின.
இந்த நம்பர் பிளேட் கவனத்தை ஈர்த்ததற்கு மற்றொரு காரணமும் இருந்தது. கடந்த 2024ம் ஆண்டு வெளியான GOAT திரைப்படத்தில் நடிகர் விஜய் பயன்படுத்திய காரில் TN 07 CM 2026 என்ற எண் இடம் பெற்றிருந்தது. அதே பாணியில் TN 07 CM 2031 என்ற எண் இருப்பதால், இது 2031ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கலாம் என்ற விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்தன.
இதற்கிடையில் திருமாவளவன் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், அவர் அந்த நிகழ்ச்சிக்கு சென்றபோது அங்கு இருந்தவர்கள் ஒரு வாகனத்தில் ஏறி வருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். அதன் பேரில் அவர் காரில் சென்றதாகவும். அந்த வாகனம் படப்பிடிப்பு மற்றும் காட்சி பதிவுக்காக ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த கார் ஜாகுவார் ரகத்தை சேர்ந்தது என்றும், டெஸ்லா கார் அல்ல என்றும் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். இரவு நேரத்தில் காரில் ஏறியதால், அதில் இடம்பெற்றிருந்த நம்பர் பிளேட்டை தான் கவனிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திருமாவளவன் சென்ற காரில் இடம் பெற்றிருந்த TN 07 CM 2031 என்ற நம்பர் பிளேட் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், பலரும் அந்த எண்ணை வாகன பதிவு விவரங்களில் தேட தொடங்கினர். அப்போது TN 07 CM 2031 என்ற பதிவு எண் ஏற்கனவே வேறு ஒரு வாகனத்துடன் தொடர்புடையதாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால் ஒரு காரில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட எண்ணை எப்படி பயன்படுத்த முடியும் என்ற கேள்விகள் எழுந்தன.
இதையடுத்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்களும் விவாதங்களும் உருவாகின. குறிப்பாக ஒரு வாகனத்திற்கு ஒதுக்கப்பட்ட பதிவு எண்ணை மற்றொரு வாகனத்தில் பயன்படுத்துவது சட்டப்படி அனுமதிக்கப்படுமா என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் முக்கியமாக கவனிக்கவேண்டியது. திருமாவளவன்சென்றதாக கூறப்படும் காரின் நிரந்தர வாகன பதிவு எண் மற்றும் அந்த நிகழ்வின்போது காரில் வைக்கப்பட்டிருந்த நம்ப பீளேட் இரண்டும் ஒன்றா என்பதுதான்.
விசிக தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், திருமாவளவன் சென்ற கார் படப்பிடிப்புக்காக ஏற்பாடு செய்யப்பட்ட வாகனம். அதில் இடம்பெற்றிருந்த TN 07 CM 2031 என்ற எண், அந்த நிகழ்வுக்காக பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த எண்ணை அடிப்படையாக வைத்து எழுந்த சர்ச்சைகக்கும், அந்த காரின் உண்மையான பதிவு விவரங்களுக்கும் இடையே வேறுபாடு இருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
திருமாவளவன் இந்த காரில் வந்தது சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அதாவது, வென்றது 2 தொகுதிகளில்.. அப்படி இருக்கையில் முதலமைச்சர் ஆசையா? என சிலர் விமர்சித்தனர். இந்த விமர்சனத்திற்கு விசிக-வினர் எதிர்வினையாற்றி வருகின்றனர்.
அதேசமயம் இணையவாசிகள் சிலர் எம் பரிவாகன் செயலி வாயிலாக அந்த காரின் பதிவு எண்ணை சோத்தித்து பார்த்தனர். அப்போது அந்த எண் உண்மையில் 2018 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட ஒரு இருசக்கர வாகனத்திற்குரியது என்பது தெரியவந்தது,. இது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலி பதிவெண் கொண்ட காரில் விசிக தலைவர் திருமாவளவன் பயணித்தது சட்டப்படி தவறு என நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி விமர்சித்தனர்.
இந்த சர்ச்சை சமூக வலைதளங்களில் தீவிரமடைந்த நிலையில், விசிக தரப்பில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டது. கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ். பாலாஜி வெளியிட்ட விளக்கத்தில், திருமாவளவன் சென்றது அவருக்கு சொந்தமான கார் அல்ல என்றும், படப்பிடிப்புக்காக வாடகைக்கு எடுக்கப்பட்ட கார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்ற “திருமா 35: சமூகநீதியின் சகாப்தம்” நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக விசிக தரப்பு கூறியுள்ளது. இதில் திருமாவளவன் திறந்த கூரை கொண்ட காரில் வருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அந்தக் காட்சிக்காக படப்பிடிப்பு குழுவினரால் TN 07 CM 2031 என்ற நம்பர் பிளேட் வடிவமைக்கப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த India Media Works நிறுவனத்தினர் படப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் கார், அதன் ரகம் மற்றும் நம்பர் பிளேட் உள்ளிட்டவற்றை முன்கூட்டியே முடிவு செய்ததாகவும் விசிக தரப்பு தெரிவித்துள்ளது. எனவே, சமூக வலைதளங்களில் கூறப்படுவது போல அந்த எண்ணை கொண்ட நிரந்தர பதிவு செய்யப்பட்ட காரில் திருமாவளவன் பயணிக்கவில்லை என்பதே கட்சி தரப்பின் விளக்கமாக உள்ளது.
இதனால், TN 07 CM 2031 என்ற எண் உண்மையான வாகனப் பதிவு எண்ணா அல்லது படப்பிடிப்புக்காக தற்காலிகமாக பயன்படுத்தப்பட்ட எண்ணா என்பதுதான் இந்த விவகாரத்தில் முக்கியமான கேள்வியாக மாறியுள்ளது. விசிக தரப்பின் விளக்கப்படி, அது படப்பிடிப்புக்காக உருவாக்கப்பட்ட காட்சி அமைப்பின் ஒரு பகுதியாகும்.
வாகனங்களுக்கு வழங்கப்படும் பதிவு எண்களில் சில எண்கள் வாகன உரிமையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்யப்படுகின்றன. குறிப்பிட்ட எண் மீது அதிக ஆர்வம் இருக்கும் பட்சத்தில், அந்த எண்ணை பெறுவதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலையும் உள்ளது. இதுபோன்ற விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் பதிவு எண்கள் பொதுவாக Fancy Number என அழைக்கப்படுகிறது.
ஆனால் ஒரு வாகனத்திற்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள பதிவு எண்ணை மற்றொரு வாகனத்தில் நிரந்தரமாக பயன்படுத்த முடியாது. ஒவ்வொரு வாகனத்திற்கும் தனித்துவமான பதிவு எண் வழங்கப்படுகிறது. எனவே, ஒரு நிகழ்ச்சி அல்லது படப்பிடிப்புக்காக பயன்படுத்தப்படும் தற்காலிக நம்பர் பிளேட் மற்றும் வாகனத்தின் அதிகாரப்பூர்வ பதிவு எண் ஆகியவற்றை தனித்தனியாக பார்க்க வேண்டியது அவசியம்.