Young Age Men Explained: தமிழகத்தில் மொத்தம் 7.74 கோடி மக்கள் தொகை உள்ளன. இதில் 50 சதவீதம் பேர் ஆண்கள் உள்ளனர். அதாவது, 36,137,975 ஆண்களும், 36,009,055 பெண்களும் இருக்கின்றனர். தமிழகத்தில் பாலின விகிதத்தில் 1000 ஆண்டுகளில் 996 பேர் பெண்களாக உள்ளனர். இப்படியாக இருக்கும் நிலையில், கடந்தாண்டு (2025) பெண்களைவிட ஆண்களே அதிகளவில் உயிரிழந்துள்ளதாக ஆய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் பிறப்பு மற்றும் இறப்பு விவரங்களின் அடிப்படையில் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையின் காலாண்டு இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பதிவான உயிரிழப்புகளின் எண்ணிக்கை 6 லட்சத்து 93,207 என்றும், அவற்றில் ஆண்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 1860, பெண்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 91,347 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களை விட, 1,10,513 ஆண்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த இடைவெளி ஒரு லட்சத்திற்கு அதிகமாகவே இருந்து வருகிறது. 2023ஆம் ஆண்டில் பெண்களை விட 1.10 லட்சம் ஆண்களும், 2024ஆம் ஆண்டில் 1.07 லட்சம் ஆண்களும், 2025ஆம் ஆண்டில் 1.11 லட்சம் ஆண்களும் உயிரிழந்து இருக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக உயிரிழந்த ஆண்களில் 86%, அதாவது 94,792 பேர் 15 முதல் 64 வயது வரையிலானவர்கள் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
2018 முதல் 2022 வரை ஒவ்வொரு மாவட்டத்திலும் 15 வயது முதல் பெண்கள் இறப்பு விகிதத்தை விட ஆண்கள் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குடிமக்கள் பதிவு முறைமை (CRS) தரவுகளின் அடிப்படையில் இது தெரியவந்துள்ளது. குடிமக்கள் பதிவு முறைமை என்பது பிறப்புகள், இறப்புகள், கருவிலேயே இறப்புகளை தொடர்ச்சியாக பதிவு செய்வதற்காக இந்தியாவில் சட்டப்பூர்வமாக கட்டாயப்படுத்தப்பட்ட ஒரு முறையாகும். இதனால், ஒவ்வொரு குடும்பங்களும் தங்கள் தந்தையை மிக இளம் வயதிலேயே இழக்கின்றன என்றும் பெண்கள் சீக்கிரமாகவே தங்கள் கணவர்களை இழந்து கைம்பெண்களாக வாழ்கின்றன என்றும் தெரியவருகிறது.
2025ஆம் ஆண்டில் தமிழகத்தில் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட ஆண்கள் 9,167 இறந்துள்ளனர். பெண்கள் 4,461 பேர் இறந்துள்ளது பதிவாகி உள்ளது.
இந்த எண்களை பார்க்கும்போது, 54 வயது வரை பெண்களை விட ஆண்கள் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்து வரவது தெரியவந்துள்ளது. ஆனால், 70 வயதுக்கு மேல் எந்த ஒரு வேறுபாடு இல்லை. 2025ஆம் ஆண்டில் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட 6,93,207 இறப்புகளில் 2,80,856 இறப்புகள் மட்டுமே அதாவது 41 சதவீதம் மருத்துவ ரீதியாக இறப்புகள் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டில் நிகழ்ந்த உயிரிழப்புகளில் 41 சதவீதம் மட்டுமே மருத்துவமனைகளில் நிகழ்ந்துள்ளன என்பதால், அவற்றுக்கான காரணங்கள் மட்டுமே தெரியவந்துள்ளன. அவற்றில் ஆண்களின் உயிரிழப்புகளுக்கு சாலை விபத்துகள், தற்கொலைகள், மது மற்றும் புகையிலைப் பழக்கத்தால் ஏற்படும் கேடுகள், இதயம், சிறுநீரகம் போன்ற தொற்ற நோய்கள் சரியான நேரத்தில் கண்டறியப்படாதது ஆகியவை தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. மருத்துவமனைகளுக்கு வெளியில் நிகழ்ந்த உயிரிழப்புகளுக்கும் கிட்டத்தட்ட இவை தான் காரணங்களாக இருக்கக் கூடும் என்று அதிகாரப்பூர்வமற்ற வகையில் மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இதில் தினமும் 50 ஆண்கள் சாலை விபத்துகளால் உயிரிழக்கின்றனர்.
மேலும், தினமும் 50 ஆண்கள் தற்கொலை செய்கின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது. பல ஆண்கள் 40 வயது வரை முழு உடல் பரிசோதனை செய்வதில்லை என்றும் கூறுகின்றனர். அதே நேரத்தில், பெண்கள் கர்ப்ப காலத்தில் பரிசோதனை செய்கின்றனர். ஆனால், ஆண்கள் 40 வயது வரை பரிசோதனை செய்யாமல், நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படாமல் இருப்பதே அவர்கள் இளம் வயதிலேயே உயிரிழக்க காரணமாக இருக்கிறது என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆண்கள் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பதற்காக கூறப்பட்டுள்ள 4 காரணிகளுக்குமே மூல காரணம் மதுப்பழக்கம் தான் என்பது ஏற்கனவே நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கடந்த 20 ஆண்டுகளில் சாலை விபத்துகள், தற்கொலைகள் ஆகியவற்றில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது. இதற்கான முதன்மைக் காரணம் மதுப்பழக்கம் தான் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்பகுதிகளில் பெரும்பாலான குடும்பங்களில் வாழ்வாதாரம் ஈட்டுபவர்களாக ஆண்கள் தான் உள்ளனர். பெற்றோரை பாதுகாத்தல், குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட பொறுப்புகளை சுமக்க வேண்டிய கடமை அவர்களுக்கு இருக்கும் போதிலும், மதுவுக்கு அடிமையாவதால் அவர்கள் குறைந்த வயதில் உயிரிழக்கின்றனர்.
அதனால் அவர்களின் குடும்பம் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலை உருவாகிறது. பெண்கள் இளம்வயதில் கைம்பெண்களாக மாறுவது மட்டுமின்றி, குடும்பச் சுமையை ஒற்றை ஆளாக சுமக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே, தமிழக அரசு மதுவை ஒழிக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது. அதே நேரத்தில், ஆண்கள் தங்கள் முழு உடல் பரிசோதனை மேற்கொண்டு, அதற்கு சிகிச்சை முன்கூட்டியே துவங்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.