Subsidised LPG, Aadhaar Biometric Authentication : வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தும் கோடாணக்கோடி மக்களுக்கு மத்திய அரசு தரப்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டரை பெறுவதற்கு ஆதார் கட்டாயமாக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே, ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடிக்காத LPG வாடிக்கையாளர்கள் உடனடியாக இந்த செயல்முறையை நிறைவுசெய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்ட தகவல்படி, செப்டம்பர் 19ஆம் தேதி நிலவரப்படி நாட்டில் செயல்பாட்டில் இருக்கும் 27.43 கோடி வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் வாடிக்கையாளர்கள் ஆதார் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை ஏற்கெனவே நிறைவு செய்துள்ளன.
இது நாட்டின் மொத்த LPG வாடிக்கையாளர்களில் 89.9 சதவீதமாகும். ஏற்கெனவே ஆதார் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை முடித்தவர்கள் புதிதாக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டியதில்லை.
ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பை இன்னும் நிறைவு செய்யாதவர்கள் வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் மானிய விலையில் எல்பிஜி சிலிண்டரை புக்கிங் செய்ய முடியாது. முதலில் ஆதார் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை முடித்த பிறகே மானியத்துடன் கூடிய விலையில் சிலிண்டரை புக் செய்ய முடியும்.
ஆனால் ஆதார் பயோமெட்ரிக் அங்கீகாரம் செய்யவில்லை என்பதற்காக LPG சிலிண்டரே முன்பதிவு செய்ய முடியாது என்றில்லை. ஆனால், மானியம் கிடைக்காது. சந்தை விலையிலேயே சிலிண்டரை பெற வேண்டிய நிலை ஏற்படும். இதனால் கூடுதல் செலவே ஏற்படும்.
14.2 கிலோ எடையுள்ள வீட்டு எல்பிஜி சிலிண்டருக்கு தற்போதைய அரசின் மறைமுக மானியம் என்பது ரூ.210 ஆக இருப்பதாக பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜூன் மாதத்தில் இது ரூ.721 ஆக இருந்தது.
எல்பிஜி சிலிண்டர் டெலிவரி செய்யப்படும் நேரத்திலேயே பயோமெட்ரிக் அங்கீகாரத்தை நிறைவு செய்யலாம். அதேபோல், சம்பந்தப்பட்ட LPG விநியோகஸ்தர் அலுவலகத்திற்குச் சென்றும் இந்த செயல்முறையை மேற்கொள்ளலாம்.
மேலும் எண்ணெய் நிறுவனங்களின் மொபைல் செயலிகள் மூலமாகவும் ஆதார் பயோமெட்ரிக் அங்கீகாரம் செய்யும் வசதியும் உள்ளது.
Bharat Gas வாடிக்கையாளர்கள் Hello BPCL, Indane வாடிக்கையாளர்கள் IndiaonOil One, HP Gas வாடிக்கையாளர்கள் HP PAY செயலியை பயன்படுத்தி ஆதார் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை நிறைவு செய்யலாம்.
மானிய சிலிண்டர்கள் வர்த்தக பயன்பாட்டிற்கு திருப்பி விடப்படுவதை தடுப்பதும், போலியான அல்லது தகுதியற்ற சிலிண்டர் இணைப்புகளை கண்டறிவதும் இந்த ஆதார் அங்கீகார நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எனவே மானிய விலையில் அடுத்த LPG சிலிண்டரை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் அக்டோபர் 1ஆம் தேதிக்கு முன்பாக ஆதார் பயமெட்ரிக் அங்கீகாரத்தை நிறைவு செய்வது அவசியமாகிறது.