SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

மத்திய அரசு பெண்களுக்கு வழங்கும் ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை விதிகள் மாற்றம்! explained

central government : பெண் தொழில்முனைவோர்களுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.2 லட்சம் சிறப்பு ஊக்கத்தொகை பெறுவதற்கான விதிமுறைகளில் முக்கிய மாற்றங்களைக் கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

Written By Karthikeyan Sekar
Published: Sep 08, 2026, 05:54 PM IST | Updated: Sep 08, 2026, 06:02 PM IST
Join

central government : தமிழ்நாட்டில் பெண்களை தொழில்முனைவோர்களாக மாற்ற, மாநில அரசு செயல்படுத்தும் சிறப்புத் தொழில் நிதியுதவி திட்டங்களைப் போலவே, மத்திய அரசும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்று, பிரதமர் பாரதிய ஜனௌஷதி பரியோஜனா திட்டம். இத்திட்டத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகையான 2 லட்சம் ரூபாய் பெறுவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது மத்திய அரசு.

மத்திய அரசின் மக்கள் மருந்தகம் எனப்படும் பிரதமர் பாரதிய ஜனௌஷதி பரியோஜனா (PMBJP - Pradhan Mantri Bhartiya Janaushadhi Pariyojana) திட்டத்தின் கீழ், மலிவு விலையில் தரமான ஜெனரிக் மருந்துகளை விற்பனை செய்யும் ஜன் ஔஷதி மையங்கள் நாடு முழுவதும் திறக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் சிறப்புப் பிரிவினர் வரிசையில் வரும் பெண் தொழில்முனைவோருக்குத் தொடக்க நிதியுதவியாக அரசு வழங்கி வரும் ரூ.2 லட்சம் ஒருமுறை சிறப்பு ஊக்கத்தொகைக்கான தகுதி விதிகளில் மத்திய அரசு மிகப்பெரிய சீர்திருத்தத்தைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.

1. தற்போதைய நடைமுறை மற்றும் புதிய விதிமுறை என்ன?

தற்போதைய நடைமுறை: இத்திட்டத்தின் கீழ் இதுவரை எந்தவொரு பெண்ணும் ஜன் ஔஷதி மையத்தைத் தொடங்க விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர் மருந்தாளுநர் கல்வி படிக்கவில்லை என்றாலும், உரிமம் பெற்ற வேறு ஒரு மருந்தாளுநரைத் தனது கடையில் சம்பளத்திற்கு பணியமர்த்தி இம்மையத்தை நிர்வகித்து, அரசின் ரூ.2 லட்சம் மானியத்தைப் பெற்றுக்கொள்ள வழிவகை இருந்தது.

புதிய விதிமுறை: மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள மருந்தியல் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் பணியகம் தயாரித்துள்ள புதிய வரைவு விதிகளின்படி, ரூ.2 லட்சம் நிதியுதவி பெற விரும்பும் பெண், கட்டாயமாகத் தானே ஒரு பதிவு செய்யப்பட்ட மருந்தாளுநராக இருக்க வேண்டும். அந்த மையம் அவரது சொந்தப் பெயரிலேயே தொடங்கப்பட்டு, அவரால் மட்டுமே நேரடியாக நடத்தப்பட வேண்டும். பிற மருந்தாளுநர்களை வேலைக்கு வைத்துக்கொண்டு வெறும் முதலீட்டாளராக மட்டும் செயல்படும் பெண்களுக்கு இந்த ரூ.2 லட்சம் சலுகை கிடைக்காது.

2. இந்த அதிரடி மாற்றத்திற்கான முக்கிய காரணங்கள்

பினாமி உரிமையாளர்களைத் தடுத்தல்: அரசு ஆய்வில், பல இடங்களில் ஆண்கள் தங்களுக்குக் கிடைக்காத ரூ.2 லட்சம் கூடுதல் சலுகையைப் பெறுவதற்காகத் தங்கள் குடும்பத்துப் பெண்களின், அதாவது மனைவி அல்லது உறவினர் பெயரில் பெயரளவில் விண்ணப்பித்துவிட்டு, கடையை முழுக்க முழுக்க ஆண்களே நிர்வகித்து வருவது தெரியவந்துள்ளது. இந்த இடைத்தரகர் மற்றும் பினாமி முறையை முற்றிலும் ஒழிப்பதே இதன் தலையாய நோக்கம்.

பெண் மருந்தியல் பட்டதாரிகளைத் தொழில்முனைவோராக்குதல்: இந்தியாவில் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் டி.பார்ம் (D.Pharm), பி.பார்ம் (B.Pharm) உள்ளிட்ட மருந்தியல் படிப்புகளைப் படித்துவிட்டு வெளியேறுகின்றனர். அவர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்கி, தொழில்முனைவோராக மாற்ற அரசு முன்னுரிமை அளிக்கிறது.

வர்த்தக சேவை: கல்வித் தகுதியுடைய மருந்தாளுநரே நேரடியாக உரிமையாளராக இருந்து கடையை நடத்தும்போது வர்த்தக லாப வரம்பு மற்றும் விற்பனை உயரும், மருந்து விநியோகத்தின் தரம் மற்றும் பொறுப்புணர்வும் அதிகரிக்கும் என அரசு துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

3. நிர்வாக நடைமுறை மற்றும் காலக்கெடு

கால அவகாசம்: இத்திட்டத்தின் அசல் நிதியாண்டு சுழற்சி மார்ச் 2025-உடன் முடிவடைந்த நிலையில், இது செப்டம்பர் 30, 2026 வரை இடைக்கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சரவை ஒப்புதல்: பொது நிதியைச் செலவிட மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் அவசியமாகும். எனவே, செப்டம்பர் 1 ஆம் தேதி PMBI தலைமை நிர்வாக அதிகாரி வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, இதற்கான புதிய முன்மொழிவு அமைச்சரவையின் இறுதி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களுக்கான கட் ஆஃப்: செப்டம்பர் 30, 2026-க்குள் பெறப்படும் விண்ணப்பங்களுக்குத் தற்போது நடைமுறையில் உள்ள பழைய தகுதி விதிகளே பொருந்தும். செப்டம்பர் 30, 2026க்குப் பிறகு (அக்டோபர் முதல்) பெறப்படும் விண்ணப்பங்களுக்குப் புதிய விதிமுறை கட்டாயமாக்கப்படும். அதாவது, விண்ணப்பிக்கும் பெண்ணே பதிவுசெய்த மருந்தாளுநராக இருந்தால் மட்டுமே ரூ.2 லட்சம் உதவித்தொகை அனுமதிக்கப்படும்.

4. தற்போதைய புள்ளி விவரம்

நாடு முழுவதும் 2027ஆம் ஆண்டிற்குள் 25,000 ஜன் ஔஷதி மையங்களைத் திறக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் ஏற்கனவே 20,000-க்கும் மேற்பட்ட மையங்கள் வெற்றிகரமாகத் திறக்கப்பட்டுச் செயல்பட்டு வருகின்றன. தற்போது செயல்பட்டு வரும் மையங்களில் 8,000-க்கும் அதிகமான மையங்கள் பெண்களால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

இப்புதிய விதிமுறை அமலுக்கு வரும்போது, பெண்களின் பெயரில் ஆண்கள் பயன் பெறும் போலி முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். அதே நேரத்தில், முறையாக மருந்தியல் படித்துத் தகுதி பெற்றுள்ள இளம் பெண் பட்டதாரிகள் சொந்தக் காலில் நின்று மருந்தகங்களை வெற்றிகரமாக நடத்தி சமூகத்திற்கும் பயனளிக்கும் ஒரு ஆரோக்கியமான சூழல் உருவாகும்.

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES