தனியார் ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கட்டாய வரம்பிற்குள் வருவதற்கான மாத ஊதிய உச்சவரம்பை 15 ஆயிரம் ரூபாயில் இருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் முன்மொழிந்தது. இந்நிலையில், மத்திய அமைச்சரவை இன்று இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தது.
2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டுவரை EPFO-வின் மாத ஊதிய உச்ச வரம்பு எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இதைத் தொடர்ந்து மாத ஊதிய உச்ச வரம்பு 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், தற்போதும் அதே நடைமுறையை பின்பற்றி ஊதிய வரம்பு உயர்த்தப்பட்டதாக தெரிகிறது. ஊதிய உயர்வு, வருமானம் அதிகரிப்பு, முறைசார் வேலைவாய்ப்புகள் காலப்போக்கில் விரிவடைந்தது உள்ளிட்டவற்றை கருத்தில்கொண்டே இந்த ஊதிய வரம்பு 25 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
▪️#Cabinet approves enhancement of EPFO wage ceiling from Rs.15,000 to Rs.25,000 per month.
▪️The decision is expected to bring more than 51 lakh additional employees within the ambit of mandatory EPFO coverage.
▪️The annual Government outgo is estimated at about Rs.11,339… pic.twitter.com/Tx7jR0O2n7— PIB India (@PIB_India) September 16, 2026
இதன்படி 51 லட்சத்திற்கும் அதிகமான கூடுதலான ஊழியர்களை கட்டாய EPFO வரம்பிற்குள் கொண்டுவருவதன் மூலம் இது தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பை விரிவுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போதைய ரூ.15 ஆயிரம் என்ற வரம்பின்படி பார்க்கும்போது, ரூ.15 ஆயிரத்தை மாதச் சம்பளமாக பெற்று வேலைக்குச் சேரும் ஊழியர்கள், தானாகவே EPF வரம்பிற்குள் கொண்டுவரப்படுவதில்லை. இதனால் அவர்களுக்கு கட்டாய வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் மற்றும் அதுதொடர்பான காப்பீட்டுப் பாதுகாப்பு ஆகியவை கிடைக்காமல் போக நேரிடுகிறது.
எனவே, தற்போது இந்த வரம்பை 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்துவதன் மூலம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை ஊதியம் பெறும் கணிசமான எண்ணிக்கையில் இருக்கும் ஊழியர்கள் சட்டப்பூர்வமாக EPF அமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு சமூக பாதுகாப்பை பெறுவார்கள்.
இந்த திருத்தத்திற்கு பிறகு அரசின் ஆண்டுச் செலவு சுமார் ரூ.11 ஆயிரத்து 339 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதுவே அடுத்த 5 ஆண்டுகளில் இதற்கான மதிப்பிடப்பட்ட செலவு சுமார் ரூ.56,696 கோடியாகும்.
கடந்த 2014ஆம் ஆண்டில் ஊதிய வரம்பு ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்பட்ட பின்னர், முறைசார் வேலைவாய்ப்புகள் விரிவடைந்தது மட்டுமின்றி ஊழியர்களுக்கான வருமானமும் அதிகரித்து வந்தன. பல்வேறு மாநிலங்களிலும், துறைகளிலும் குறைந்தபட்ச ஊதியமும் தற்போது ரூ.15 ஆயிரத்தை எட்டியிருக்கிறது.
எனவே, EPFO கட்டாய வரம்பிற்கான மாத ஊதிய உச்சவரம்பு ரூ.25 ஆயிரமாக உயர்த்தியிருப்பதன் மூலம் வேலைவாய்ப்பை முறைப்படுத்துவதற்கும், பணியாளர்களைத் தக்கவைப்பதற்கும் நீண்டகால ஓய்வுக்காலப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஊதிய உச்சவரம்பை உயர்த்தும் இந்த முன்மொழிவு அமைச்சகங்களுக்கு இடையிலான விரிவான ஆலோசனைகள் மூலம் பரிசீலிக்கப்பட்டு ஜூன் 16ஆம் தேதி அன்று நடந்த கூட்டத்தில் செலவின நிதிக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டது.
EPFO அமைப்பில் சுமார் 7.68 லட்சம் நிறுவனங்களின் மூலம் சுார் 7.98 கோடி உறுப்பினர்கள் பங்களிப்பு செய்து வருகின்றனர். EPS திட்டமானது சுமார் 82 ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியத்தை வழங்கி வருகிறது.