EPFO Wage Ceiling Hike: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கட்டாயப் பாதுகாப்பு வரம்பிற்குரிய மாத ஊதிய உச்சவரம்பை, தற்போதுள்ள ரூ. 15,000-லிருந்து ரூ. 25,000-ஆக உயர்த்துவதற்கு அரசு புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்த நடவடிக்கையின் மூலம், கூடுதலாக 51 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் வரம்பிற்குள் கொண்டுவரப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) ஊதிய வரம்பை ₹15,000-லிருந்து ₹25,000-ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை எடுத்துள்ள முடிவு, 'ஊழியர் வைப்புத் தொகையுடன் இணைந்த காப்பீட்டுத் திட்டத்தின்' (EDLI) கீழ் தகுதியுள்ள உறுப்பினர்களுக்குக் கிடைக்கும் ஆயுள் காப்பீட்டுத் தொகையை கணிசமாக அதிகரிக்கக்கூடும்.
₹15,000 ஊதிய வரம்பு:
தற்போது, அதிகபட்ச பலன் பின்வருமாறு கணக்கிடப்படுகிறது:
(₹15,000 × 35) + ₹1.75 லட்சம் = ₹7 லட்சம்
₹25,000 ஊதிய வரம்பு
ஊதிய வரம்பு ₹25,000-ஆக உயர்த்தப்பட்டால், மொத்த பலன் பின்வருமாறு அமையும்:
(₹25,000 × 35) + ₹1.75 லட்சம் = ₹10.5 லட்சம்
அதாவது, EPF இருப்புத் தொகையுடன் தொடர்புடைய பகுதிக்கான ₹1.75 லட்சம் என்ற தற்போதைய உச்சவரம்பைத் தக்கவைத்துக்கொண்டு, காப்பீட்டுப் பலனைக் கணக்கிடப் பயன்படும் ஊதிய வரம்பை மட்டும் அரசு மாற்றியமைத்தால், தகுதியுள்ள பயனர்களுக்கான EDLI காப்பீட்டுத் தொகை ₹7 லட்சத்திலிருந்து ₹10.5 லட்சமாக உயரக்கூடும்.
இதில், ₹1.75 லட்சம் என்ற பகுதியும் முக்கியமானது. EDLI விதிகளை மாற்றியமைக்கும்போது அரசு இந்தத் தொகையையும் அதிகரித்தால், அதிகபட்ச காப்பீட்டுப் பலனும் இன்னும் அதிகமாக இருக்கக்கூடும். இருப்பினும், ₹10.5 லட்சம் என்பது தற்போது ஒரு மதிப்பீடு மட்டுமே; இது உறுதிப்படுத்தப்பட்ட புதிய காப்பீட்டு வரம்பு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
EPFO ஊதிய வரம்பு உயர்வு 1 கோடி வரையிலான புதிய தொழிலாளர்களுக்குப் பயனளிக்கக்கூடும். EPFO ஊதிய வரம்பை மாதத்திற்கு ₹15,000-லிருந்து ₹25,000-ஆக உயர்த்துவதன் மூலம், கூடுதல் தொழிலாளர்களை கட்டாய சமூகப் பாதுகாப்பு வரம்பிற்குள் கொண்டுவந்து, 50 லட்சம் முதல் ஒரு கோடி வரையிலான புதிய பயனாளிகளுக்குப் பயனளிக்க முடியும் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா புதன்கிழமையன்று தெரிவித்தார்.
அமைச்சரவையின் முடிவுக்குப் பிறகு கருத்து தெரிவித்த மாண்டவியா, "இதன் மூலம் 50 லட்சம் முதல் 1 கோடி வரையிலான புதிய பயனாளிகள் பலனடைவார்கள் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம்," என்று கூறினார்.
செயல்படுத்தும் காலக்கெடுவைப் பொறுத்தவரை, விஸ்வகர்மா ஜெயந்தி தினமான இன்று (செப்டம்பர் 17, வியாழக்கிழமை ) முதல் இந்த ஊதிய வரம்பு நடைமுறைக்கு வரும் என்று அமைச்சர் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, புதன்கிழமையன்று, EPFO-வின் கீழ் கட்டாயப் பாதுகாப்பு வரம்பிற்கு உட்படுவதற்கான மாத ஊதிய வரம்பை ₹15,000-லிருந்து ₹25,000-ஆக உயர்த்துவதற்கு ஒப்புதல் அளித்தது.
"இது தற்போது EPFO-வின் பாதுகாப்பு வரம்பிற்கு வெளியே உள்ள எண்ணற்ற புதிய ஊழியர்களுக்கும் சமூகப் பாதுகாப்பு நன்மைகளை விரிவுபடுத்தும்," என்று அமைச்சர் மாண்டவியா ANI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இந்த உயர்த்தப்பட்ட வரம்பானது, ₹15,000 முதல் ₹25,000 வரையிலான ஊதியப் பிரிவில் உள்ள அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களைக் கட்டாய EPFO பாதுகாப்பு வரம்பிற்குள் கொண்டுவரும். அத்துடன், பொருந்தக்கூடிய விதிகளுக்கு உட்பட்டு, வருங்கால வைப்பு நிதி சேமிப்பு, ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் ஓய்வூதியப் பாதுகாப்பு மற்றும் EDLI-ன் கீழ் காப்பீட்டுப் பாதுகாப்பு ஆகியவற்றைப் பெறுவதற்கான வாய்ப்பையும் இது விரிவுபடுத்தும்.