LPG Cylinder New Rule: வீட்டு உபயோக LPG சிலிண்டர்களுக்கு வழங்கப்படும் மானியத்தைப் பெறுவதற்கு பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2026 அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் இந்த புதிய நடைமுறையின் கீழ், பயோமெட்ரிக் சரிபார்ப்பை முழுமையாக முடித்த நுகர்வோருக்கு மட்டுமே மானிய விலையில் ரீஃபில் சிலிண்டர்களை முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அரசு வழங்கும் எல்பிஜி மானியம் உண்மையான மற்றும் தகுதியான குடும்பங்களுக்கு மட்டுமே சென்று சேர்வதை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும். போலி மற்றும் தகுதியற்ற இணைப்புகளை நீக்குவதற்கும், வீட்டு உபயோகத்திற்கான மானிய சிலிண்டர்கள் வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டிற்கு தவறாக மடைமாற்றப்படுவதைத் தடுப்பதற்கும் இந்த ஆதார் இணைப்பு வழிவகுக்கும்.
இதுவரை பயோமெட்ரிக் சரிபார்ப்பை வெற்றிகரமாக முடித்துள்ள வாடிக்கையாளர்கள் மீண்டும் இதைச் செய்ய வேண்டிய அவசியமில்லை, அவர்களுக்கு வழக்கம் போல் மானியத்துடன் கூடிய சிலிண்டர்கள் தொடர்ந்து கிடைக்கும். இதுவரை சரிபார்ப்பு செய்யாதவர்கள், பயோமெட்ரிக் நடைமுறையை நிறைவு செய்த பிறகே மானிய விலையிலான சிலிண்டர் முன்பதிவு வசதியைப் பெற முடியும்.
நுகர்வோரின் வசதிக்காக இந்த சரிபார்ப்பை மேற்கொள்ள பல்வேறு எளிய வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன:
சிலிண்டர் விநியோகத்தின் போது: ரீஃபில் சிலிண்டர் வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும்போதே, சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனத்தின் மொபைல் செயலியைப் பயன்படுத்தி டெலிவரி ஊழியர் மூலம் உடனடியாக பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடிக்கலாம்.
விநியோகஸ்தர் அலுவலகம்: வாடிக்கையாளர்கள் தங்கள் பகுதி கேஸ் ஏஜென்சி அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்றும் சரிபார்ப்பை மேற்கொள்ளலாம்.
மொபைல் செயலிகள் மூலம்: வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்தபடியே எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலிகள் வாயிலாக சுய இ-கேஒய்சி (e-KYC) செய்து கொள்ளலாம்:
இண்டேன் வாடிக்கையாளர்கள் – IndianOil ONE
பாரத் கேஸ் வாடிக்கையாளர்கள் – HelloBPCL
ஹெச்பி கேஸ் வாடிக்கையாளர்கள் – HP PAY
பயோமெட்ரிக் செய்ய விருப்பமில்லாதவர்களுக்கு மாற்று வழி
பயோமெட்ரிக் சரிபார்ப்பை மேற்கொள்ள விரும்பாத அல்லது முடியாத நுகர்வோருக்கும் காஸ் சிலிண்டர் வழங்கப்படும். ஆனால், அதற்கான விருப்பத்தை எண்ணெய் நிறுவனங்களின் இணையதளம், மொபைல் ஆப், வாட்ஸ்அப் சாட்பாட் அல்லது ஐவிஆர்எஸ் (IVRS) மூலம் பதிவு செய்ய வேண்டும். இத்தகைய வாடிக்கையாளர்களுக்கு மானியம் இல்லாத சந்தை விலையில், விநியோகக் கையிருப்புக்கு ஏற்ப 5 கிலோ அல்லது 10 கிலோ சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும்.
2026 செப்டம்பர் 19 நிலவரப்படி, நாடு முழுவதும் 27.43 கோடி நுகர்வோர் பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடித்துள்ளனர். முன்னதாக 2026 ஜூன் 30 ஆக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு, வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் அவகாசம் தரும் வகையில் பலமுறை நீட்டிக்கப்பட்டு, இறுதியாக செப்டம்பர் 14 வரை வழங்கப்பட்டது. விழிப்புணர்வை ஏற்படுத்த 12 கோடிக்கும் அதிகமான எஸ்.எம்.எஸ் மற்றும் வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள், சிறப்பு முகாம்கள், விளம்பரங்கள் மூலம் எண்ணெய் நிறுவனங்கள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் அடக்க விலையை விட மிகக் குறைந்த விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. 2026 செப்டம்பர் மாத நிலவரப்படி, 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டருக்கு அரசு மறைமுகமாக சுமார் ரூ.210 மானியமாக வழங்குகிறது. 2026 ஜூன் மாதத்தில் இது சிலிண்டருக்கு ரூ.721 ஆக இருந்தது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் நிதிச்சுமையை ஈடுகட்ட அரசு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கி வந்தாலும், 2026 ஆகஸ்ட் 31 நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்களின் இழப்புத் தொகை ரூ.62,000 கோடியைத் தாண்டியுள்ளது. எனவே, உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே மானியம் சென்று சேர்வதை உறுதிசெய்வது அவசியமாகிறது.
மானியத் தடையைத் தவிர்க்க, நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள விடுபட்ட அனைத்து நுகர்வோரும் 2026 அக்டோபர் 1-க்குள் பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பை முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எல்பிஜி சேவைகள் மற்றும் கூடுதல் தகவல்களுக்கு 1800 2333 555 என்ற கட்டணமில்லா உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.