காஞ்சிபுரம் அருகே வெள்ளகேட் பகுதியில் மரம் வெட்டும் கூலித் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தவர் ஆனந்தன். இவரது மனைவி தேன்மொழி (35). இவர்கள் பணிபுரிந்த மரக்கிடங்கு உரிமையாளரான ஆறுமுகத்திடம் ₹20,000 கடன் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான தேன்மொழிக்கு தீவிர பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
அப்போது, வாங்கிய கடனைக் காரணம் காட்டி, அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மரக்கிடங்கு உரிமையாளர் மறுத்ததாகத் தெரிகிறது. இதனால் தங்கியிருந்த இடத்திலேயே பிரசவம் நடந்ததில், முறையான மருத்துவ உதவியின்றி தாயும் சேயும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தேன்மொழியின் உறவினர்கள் பொன்னேரிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், கணவர் ஆனந்தன் மற்றும் மரக்கிடங்கு உரிமையாளர் ஆறுமுகத்திடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.