SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

சென்னை தினக்கூலி தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு: ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

சென்னையில் தினக்கூலி ஊழியர்களுக்கு குட் நியூஸ். 87 வகையான பணிகளுக்கு புதிய சம்பள பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், யாருக்கு எவ்வளவு? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written By Karthikeyan Sekar
Published: Oct 13, 2026, 12:37 PM IST | Updated: Oct 13, 2026, 12:43 PM IST
Join

சென்னை மாவட்டத்தில் பல்வேறு அரசு, உள்ளாட்சி மற்றும் பொதுத்துறை சார்ந்த துறைகளில் பணியாற்றி வரும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு நாள் சம்பளத்தை உயர்த்தி மாவட்ட நிர்வாகம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. தொழிலாளர்களின் பணித்திறனை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தப்பட்டு, அதிகபட்சமாக நாளொன்றுக்கு ரூ.916 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உத்தரவில் மாற்றம் ஏன்? எப்போது முதல் அமல்?

சென்னை மாவட்டத்தில் 2026–2027 ஆம் நிதியாண்டுக்கான தினக்கூலி விகிதங்கள் குறித்து கடந்த ஜூலை 9 ஆம் தேதி மாவட்ட நிர்வாகத்தால் ஒரு செயல்முறை ஆணை வெளியிடப்பட்டிருந்தது. எனினும், தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை புதிய அரசாணையின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப, பணித்திறன் அடிப்படையில் தொழிலாளர்களின் பிரிவுகளைத் துல்லியமாக வரையறை செய்வதற்காக அந்த உத்தரவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் இந்தத் திருத்தப்பட்ட உத்தரவை வெளியிட்டுள்ளார். இந்த புதிய ஊதிய உயர்வு கடந்த 05.10.2026 முதல் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

புதிய சம்பளப் பட்டியல்:

சென்னை மாவட்டத்தில் உள்ள சுமார் 87 வகையான பல்வேறு பணிகளுக்கு, அவர்களின் பணித்திறன் Skilled, Semi-Skilled, Un-Skilled அடிப்படையில் தினக்கூலி திருத்தப்பட்டுள்ளது. அதன் முழுமையான விவரம்:

உயர் திறன் பிரிவு: அதிகபட்ச நாள்கூலியாக ரூ.916 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தலைமை கம்போசிட்டர், வயர்லெஸ் சூப்பர்வைசர், லைஃப் கார்டு உள்ளிட்ட சிறப்புப் பணிகளைச் செய்பவர்கள் இடம்பெற்றுள்ளனர்.  

Skilled Category தொழில்நுட்பம் மற்றும் கைவினைப் பணிகளில் தேர்ந்த தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.877 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஆட்டோ எலக்ட்ரீசியன், கார்பெண்டர் முதல் நிலை, பிரிக் லேயர் முதல் நிலை, பிளாக் ஸ்மித் முதல் நிலை, எலக்ட்ரீசியன், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், வயர்மேன், ஸ்டோன் கட்டர் முதல் நிலை, டிங்கர் முதல் நிலை உள்ளிட்ட சுமார் 20 வகையான பணிகள் அடங்கும்.  

Semi-Skilled Category: அரை திறன் கொண்ட தொழிலாளர்களுக்கு நாளுக்கு ரூ.839 ஊதியம் வழங்கப்படும். பார்பர், பைண்டர், சமையலர், கோப்ளர், சலவைத் தொழிலாளி, டெய்லர், மர வெட்டுபவர், ஸ்டோன் கட்டர் இரண்டாம் நிலை, டிங்கர் இரண்டாம் நிலை உள்ளிட்ட 25 வகையான பணிகள் இந்தப் பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.  

இடைநிலை, தொழில்நுட்ப உதவியாளர் பிரிவு: வாகன ஓட்டுநர்கள், உதவி சமையலர், தட்டச்சர், ஜூனியர் அசிஸ்டெண்ட், செக்சன் ரைட்டர், ஹேமர் மேன், டஃபர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.800 தினக்கூலியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

அடிப்படை பணிப் பிரிவு - Un-Skilled Category: உடல் உழைப்பை முதன்மையாகக் கொண்ட அடிப்படைப் பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.762 ஆக ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் அலுவலக உதவியாளர் அட்டெண்டர், கிளீனர், தோட்டக்காரர், துப்புரவுப் பணியாளர்கள், ஸ்வீப்பர், வாட்ச்மேன், செக்யூரிட்டி, சர்வர், பெல் பாய், கேஷுவல் மற்றும் நார்மல் லேபர்கள், வாட்டர் பாய், கலாசி உள்ளிட்ட 30 வகையான பணிகள் அடங்கும்.  

தனி நபர் சேவைகளுக்கான கட்டண விவரம்:

தினக்கூலி மட்டுமல்லாமல், துறை சார்ந்த தனி நபர் பயன்பாட்டுச் சேவைகளுக்கான கட்டணங்களும் திருத்தப்பட்டுள்ளன. அதன்படி, தனி நபர் ஒருவருக்கு ஷேவிங் செய்ய ரூ.54, முடி திருத்தம் மற்றும் ஷேவிங் ரூ.157 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பறந்த சுற்றறிக்கை:

இந்தப் புதிய தினக்கூலி நடைமுறையானது சென்னை மாநகராட்சி, திடக்கழிவு மேலாண்மைத் துறை மற்றும் மாவட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து அரசு சார்பு அலுவலகங்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட இந்த ஊதிய விகிதங்களை உடனடியாக அமல்படுத்தி, தொழிலாளர்களுக்கு நிலுவையின்றி உரிய கூலியை வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  

விலைவாசி உயர்ந்து வரும் சூழலில், சென்னையின் அடிமட்டத் தொழிலாளர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த ஊதிய உயர்வு நடவடிக்கை, தினக்கூலி ஊழியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES