SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ரிஸ்க்கான ஸ்டண்ட் காட்சி... ‘அன்பில் அவன்’ வெற்றி குறித்து அசோக் செல்வன் உருக்கம்!

‘அன்பில் அவன்’ படத்தை ரசிகர்களுடன் பார்த்த அசோக் செல்வன், கோவை ரசிகர்களின் கைதட்டல், விசில் மற்றும் கண்ணீர் தன்னை நெகிழச் செய்ததாகவும், நல்ல கதை கிடைத்தால் காமெடி படத்தில் நடிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

Written By R Balaji
Published: Oct 05, 2026, 02:58 PM IST | Updated: Oct 05, 2026, 03:04 PM IST
Join

கோவை அவிநாசி சாலையில் உள்ள பிராட்வே திரையரங்கில் ‘அன்பில் அவன்’ திரைப்படம் வெளியுள்ள நிலையில், நடிகர் அசோக் செல்வன் ரசிகர்களுடன் இணைந்து படத்தை பார்த்து ரசித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

கோவை தனக்கு மிகவும் பிடித்த நகரம் என்று தெரிவித்த அசோக் செல்வன், தனது சொந்த ஊர் ஈரோடு என்பதால் கோவை ரசிகர்கள் ‘அன்பில் அவன்’ படத்தை ரசிப்பது தனக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிப்பதாக கூறினார். இந்த படத்திற்காக சுமார் இரண்டு ஆண்டுகளாக படக்குழுவினர் கடுமையாக உழைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

படக்குழுவின் உழைப்புக்கு கிடைக்கும் பலன் என்பது பணம் மட்டுமல்ல என்றும், ரசிகர்கள் திரையரங்கில் கைதட்டி, விசில் அடித்து கொண்டாடுவதும், படம் நன்றாக இருக்கிறது என்று கூறுவதுமே மிகப்பெரிய பாராட்டாக இருப்பதாகவும் அசோக் செல்வன் குறிப்பிட்டார்.

கோவை திரையரங்கில் ரசிகர்கள் குறிப்பிட்ட காட்சிகளுக்கு சரியான நேரத்தில் கைதட்டி, விசில் அடித்து ரசித்தது தன்னை மிகவும் மகிழ்ச்சியடைய செய்ததாக அவர் கூறினார். அதேபோல், சில காட்சிகள் முடிந்தபோது ரசிகர்களின் கண்களில் கண்ணீர் இருந்ததை பார்த்தது உணர்வுப்பூர்வமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

ரிஸ்க்கான ஸ்டண்ட் காட்சி

‘அன்பில் அவன்’ படத்தில் இடம்பெற்றுள்ள ஆபத்தான சண்டைக் காட்சியை தானே செய்ததாக அசோக் செல்வன் தெரிவித்தார். கதாபாத்திரத்தின் நம்பகத்தன்மை ரசிகர்களிடம் உருவாக வேண்டும் என்பதற்காக அந்த சண்டைக் காட்சியை தானே செய்ய முடிவு செய்ததாகவும், அந்த காட்சிக்கு ரசிகர்கள் கைதட்டி பாராட்டியது மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாகவும் கூறினார்.

காதல், ஆக்‌ஷன் மற்றும் த்ரில்லர் என மூன்று விதமான அம்சங்களை உள்ளடக்கிய படமாக ‘அன்பில் அவன்’ உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஒரு குறிப்பிட்ட ஜானரில் மட்டும் பயணிக்காமல், மூன்று ஜானர்களும் இயல்பாக ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அசோக் செல்வன் விளக்கினார்.

படத்தின் பாடல்களும் சிறப்பாக அமைந்துள்ளதாக தெரிவித்த அவர், தொடர்ந்து தனக்கு நல்ல பாடல்களை வழங்கி வரும் இசையமைப்பாளர் கோவிந்தன் இப்படத்திலும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளதாக பாராட்டு தெரிவித்தார்.

மாறிவிட்ட ரசிகர்களின் எதிர்பார்ப்பு

தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பும் ரசனையும் தற்போது பெரிய அளவில் மாறியுள்ளதாக அசோக் செல்வன் கூறினார். நல்ல படம் என்றால் அதில் நடிக்கும் நடிகர் யார், படத்தின் பட்ஜெட் எவ்வளவு என்பதை தாண்டி, படத்தின் தரத்தை மட்டுமே பார்த்து திரையரங்கிற்கு வந்து ஆதரிக்கும் மனநிலை ரசிகர்களிடம் உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஓடிடி தளங்கள் மற்றும் வெளிநாட்டு திரைப்படங்கள் அதிகளவில் அறிமுகமாகியிருப்பதால் ரசிகர்களின் பார்வையும் விரிவடைந்துள்ளதாக கூறிய அவர், இந்த மாற்றத்திற்கு ஏற்ப தமிழ் சினிமாவும் தன்னை தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். தற்போது தமிழ் சினிமாவில் பல நல்ல திரைப்படங்கள் வெளியாகி வருவதாகவும், சமீபத்திய மாதங்களில் தமிழ் திரைப்படத்துறை நல்ல நிலையில் இருப்பதாகவும் அசோக் செல்வன் குறிப்பிட்டார்.

காமெடி படத்தில் நடிக்க ஆசை

முழுநீள நகைச்சுவை திரைப்படங்களை உருவாக்குவது தற்போது மிகப்பெரிய சவாலாக இருப்பதாகவும் அசோக் செல்வன் தெரிவித்தார். குறிப்பாக தனியாக ஒரு காமெடி டிராக் இல்லாமல் முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து படம் உருவாக்குவது கடினமாக இருப்பதாக அவர் கூறினார். அதே நேரத்தில், தனக்கு பொருத்தமான நல்ல கதை கிடைத்தால் நிச்சயமாக காமெடி திரைப்படத்தில் நடிக்க விரும்புவதாகவும் அசோக் செல்வன் தெரிவித்தார்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES