அதிமுக கோட்டையே தகர்ந்தது.. 5 மாதத்தில் 3வது இடம்.. அன்புமணி கடும் சாடல்!
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் தவெக வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் இந்த தொகுதிகளை கைப்பற்றிய அதிமுக இம்முறை மூன்றாவது இடத்துக்கு சென்றதாகவும் கூறப்படும் நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தவெகவுக்கு பாமக மறைமுக ஆதரவு அளித்ததாக விமர்சனங்கள் எழுந்த சூழலில், அன்புமணி அதிமுகவின் தேர்தல் செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்ததுடன், தவெக அரசின் அனுபவம் குறித்தும் பேசியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், இடைத்தேர்தலில் ஜனநாயக முறையில் நடைபெற்றது. கடந்த கால இடத்தேர்தல்களில் பணம், பரிசு பொருட்கள், மதுபானம், உணவு உள்ளிட்டவற்றை வழங்கி வாக்குகளை பெறும் நடைமுறைகள் இருந்தது. ஆனால் தற்போது நடைபெற்ற தேர்தலில் பணம் கொடுக்காமல் கட்சிகள் பிரச்சாரம் செய்து மக்களை சந்தித்ததாக அவர் தெரிவித்தார்.
அதிமுக சுயபரிசோதனை செய்ய வேண்டும் – அன்புமணி
இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெற்றிருப்பது அதற்கு கூடுதல் அரசியல் பலத்தை அளிக்கும். அதேநேரத்தில், 5 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக தற்போது மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழகத்தில் நீண்ட காலம் ஆட்சியில் இருந்த கட்சிகளில் அதிமுகவும் ஒன்று என்பதை குறிப்பிட்ட அவர், தற்போதைய தேர்தல் முடிவுகளை அக்கட்சி ஆராய்ந்து சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்றார். அதிமுகவை தவறான நோக்கத்தில் விமர்சிக்கவில்லை என்றும், நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே இந்த கருத்தை தெரிவிப்பதாகவும் அன்புமணி கூறினார்.
மேகதாது விவகாரம்: தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கர்நாடகாவுடனான காவிரி நீர்ப் பிரச்சினை குறித்து பேசிய அன்புமணி, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும் மீறி மேகதாது அணையை கட்டுவதில் கர்நாடகா உறுதியாக உள்ளது. தமிழகத்தில் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு தண்ணீர் கிடைப்பதில் ஏற்கெனவே சிரமங்கள் உள்ள நிலையில், அணை கட்டப்பட்டால் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேகதாது விவகாரம் தவெகவுக்கு மட்டுமே உரிய பிரச்சினை அல்ல; ஒட்டுமொத்த தமிழகத்தின் நலன் சார்ந்தது என்றும் அவர் கூறினார். இதற்காக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், கர்நாடகாவின் திட்டத்தை தடுத்து நிறுத்த அரசு முயற்சிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தவெக அரசுக்கு அனுபவம் போதாது
விஜய் தலைமையிலான அரசுக்கு நிர்வாக அனுபவம் போதாது என்று அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்தார். இருப்பினும், கடந்த காலங்களில் திமுக மற்றும் அதிமுக ஆட்சிகளில் பணியாற்றிய அதிகாரிகளே தற்போதும் நிர்வாகத்தில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். எனவே, தமிழகத்தின் முக்கியமான பிரச்சினைகளில் அரசு அழுத்தமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அமைச்சரவையில் இடம் கேட்கவில்லை
தவெக அரசிடம் அமைச்சரவையில் இடம் கேட்பதாக வெளியாகும் தகவல்களையும் அன்புமணி மறுத்தார். தவெகவிடம் தங்கள் கட்சி அமைச்சரவையில் இடம் கோரவில்லை என்றும், இனியும் கோரப்போவதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். இடைத்தேர்தல் முடிவுகள், அதிமுகவின் செயல்பாடு, மேகதாது அணை விவகாரம் மற்றும் தவெக அரசின் நிர்வாகம் ஆகியவை குறித்து அன்புமணி தெரிவித்த கருத்துகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.