கோவை ஜி.என். மில் பகுதியில் உள்ள கொங்குநாடு கல்லூரியில் மாணவர் சங்க தொடக்க விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அண்ணாமலை, மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.
நேபாளத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக அந்நாட்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், ஈஷா அமைப்பை சேர்ந்த 73 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவித்தார். இந்த சம்பவம் நடைபெற்ற பகுதி இரு நாடுகளுக்கும் இடையிலான சிக்கலான புவியியல் பகுதியாக இருப்பதால், உயிரிழந்தவர்களின் உடல்களை உடனடியாக கொண்டு வருவது எளிதானது அல்ல என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார். கடந்த 2018-ம் ஆண்டு தாம் அந்த பகுதிக்கு சென்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
தமிழக அரசு உடனடியாக மீட்புக்குழுவை அமைத்து, அங்கு உயிரிழந்தவர்களின் உடல்களை தமிழகத்திற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், சம்பவம் குறித்த உண்மையான தகவல்களை பொதுமக்களுக்கு தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், கைலாய யாத்திரைக்கு சென்று உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலையும் தெரிவித்தார்.
மாணவர்கள் கல்லூரி காலத்திலேயே அரசியலில் ஈடுபடுவதற்கு ஊக்குவிக்கப்பட வேண்டும் என அண்ணாமலை தெரிவித்தார். அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் எவ்வாறு உரையாடுவது என்பது உள்ளிட்ட விஷயங்களில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
அதே நேரத்தில், தமிழகத்தில் கல்லூரி அரசியல் தற்போது மோசமான நிலையில் இருப்பதாக அவர் விமர்சனம் செய்தார்.
திரைப்படங்களுக்கான தணிக்கை விதிமுறைகளை மேலும் கடுமையாக்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தினார். திரைப்படங்களை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்பது தனது நிலைப்பாடு அல்ல எனத் தெரிவித்த அவர், வயது அடிப்படையில் எந்த திரைப்படத்தை யார் பார்க்கலாம் என்பதை திரையரங்குகளில் முறையாக உறுதி செய்ய வேண்டும் என்றார்.
பிரபல நடிகர்கள் நடித்த திரைப்படங்களாக இருந்தாலும், எந்த காட்சிகளுக்கு அனுமதி வழங்குவது என்பதை தணிக்கை அமைப்பு தெளிவாக முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறினார். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து தொடர்ந்து பேசப்படும் சூழலில், திரைப்படங்களில் பெண்களை வெறும் கவர்ச்சி பொருளாக சித்தரிப்பது வேதனை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
செல்போன் மற்றும் சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், மக்கள் அதற்கு அடிமையாகும் நிலை உருவாகியுள்ளதாக அண்ணாமலை கூறினார். இதன் காரணமாக ஒரு வகையான ‘ஜாம்பி தலைமுறை’ உருவாகி வருவதாகவும் அவர் விமர்சித்தார்.
16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு சில நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் நடவடிக்கைகளை இந்தியாவும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
சமூக வலைதளங்களை பார்த்து குற்றச்செயல்களில் ஈடுபடுவது மட்டுமின்றி, குற்றங்களை எப்படி மறைப்பது என்பது போன்ற விஷயங்களையும் சிலர் கற்றுக்கொள்ளும் நிலை இருப்பதாக அவர் கூறினார். அதே நேரத்தில், சமூக வலைதளங்கள் மூலம் நல்ல விஷயங்களும் நடைபெறுவதாக அவர் குறிப்பிட்டார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாகவும் அண்ணாமலை பேசினார். தொடர்ந்து மரக்கன்றுகளை நட்டு வரும் நிலையில், தற்போது 8 லட்சம் மரக்கன்றுகளை நடும் இலக்கை நோக்கி முன்னேறி வருவதாக அவர் தெரிவித்தார். மொத்தமாக 20 லட்சம் மரங்களை நடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார். தமிழகத்தில் உள்ள பல்வேறு நதிகளை சுத்தப்படுத்தும் பணிகளிலும் தன்னார்வ அமைப்புகள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையை காவல்துறை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும், அதனை முழுமையாக தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தினார்.
தமிழக சட்டமன்றம் ‘டிராமா மன்றமாக’ மாறிவிடக் கூடாது என்பதே தனது கருத்து என்றும் அண்ணாமலை தெரிவித்தார். சட்டமன்றத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆக்கப்பூர்வமான மற்றும் உணர்வுப்பூர்வமான விவாதங்கள் மட்டுமே நடைபெற வேண்டும் என அவர் கூறினார்.
பழைய பிரச்சினைகள் மற்றும் தனிப்பட்ட பஞ்சாயத்துகளை தீர்க்கும் வகையில் சட்டமன்ற நடவடிக்கைகள் செல்வதாக விமர்சித்த அவர், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளில் புதிய உறுப்பினர்கள் பலர் இடம்பெற்றுள்ள நிலையில், சட்டமன்றம் நாடக அரங்கமாக மாறிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.