Equestrian Champions League 2026: கோவை மோளப்பாளையம் பகுதியில் உள்ள தி ஈக்வெஸ்ட்ரியன் கிரெஸ்ட் (The Equestrian Crest) மைதானத்தில், ஈக்வைன் ஸ்போர்ட்ஸ் இந்தியா ஃபெடரேஷன் சார்பில் 2வது தேசிய அளவிலான இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் 2026 குதிரை தடை தாண்டும் தொடர் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கியது.
இன்றுடன் நிறைவடையும் இந்த போட்டித்தொடரில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முன்னணி குதிரையேற்ற வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதனால், இப்போட்டிக்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்தது.
எனவே, இந்தப் போட்டியை காண, கோயம்புத்தூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் மைதானத்தில் குவிந்தனர். குதிரைகளின் சீற்றம் நிறைந்த சாகசத்தையும், ஜாக்கிகளின் லாகவத்தையும் ரசிகர்கள் அணுஅணுவாக கண்டு ரசித்தனர்.
போட்டியின் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி. சம்பத்குமார் கலந்து கொண்டார். அவரும் பல்வேறு தடைகளைத் தாண்டி சாகசம் செய்த குதிரைகளை கண்டு ரசித்தார்.
நிகழ்வில் பேசிய அமைச்சர் சம்பத்குமார்:
கோவையில் இதுபோன்ற பிரம்மாண்டமான விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறுவது மிகவும் வரவேற்கத்தக்கது. தொலைக்காட்சியில் குதிரையேற்றப் போட்டிகளை பார்த்திருக்கிறேன். ஆனால், நேரில் வந்து பார்க்கும்போது அதன் சுவாரஸ்யமும், பரபரப்பும் இன்னும் அதிகமாக இருக்கிறது. இந்த குதிரையேற்ற விளையாட்டை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும்
தேசிய அளவிலான இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் 2026 போட்டித்தொடரில் சென்னை புல்ஸ், பெகாசஸ் ஸ்போர்ட்ஸ்; கேரளா, பெங்களூரு நைட்ஸ்; கர்நாடகா, கோல்கொண்டா சார்ஜர்ஸ்; தெலங்கானா, குவாண்டம் ரெய்ன்ஸ்; கோவா, எலைட் ஈக்வெஸ்ட்ரியன்ஸ்; மேற்கு வங்கம் என 6 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் சாம்பியன் பட்டத்திற்காக களமிறங்கி உள்ளன.
போட்டியில் பங்கேற்ற வீராங்கனைகள் கூறுகையில்:
இரண்டாவது ஆண்டாக நடைபெறும் இந்த லீக் மிகவும் சுவாரஸ்யமாகவும், சவால் நிறைந்ததாகவும் உள்ளது. இந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற உறுதியுடன் அனைத்து அணிகளும் களமிறங்கியுள்ளன.
போட்டியில் மொத்தம் 11 தடைகள் அமைக்கப்பட்டிருக்கும். முதல் 7 தடைகளை குதிரைகள் கடந்து சென்ற பின்னர், 8வது முதல் 11வது தடைகள் வரை வேகம் மற்றும் நேரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
சில இடங்களில் குதிரைகள் தடைகளைத் தாண்ட தயங்கியபோதிலும், வீரர்கள் தங்களது அனுபவம் மற்றும் திறமையால் குதிரைகளை திறம்படக் கையாண்டு தடைகளைத் தாண்டச் செய்தனர்.
அசாத்திய திறமை உடன் குதிரைகள் தடைகளை கடந்து சென்றபோது, மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் உற்சாகக் குரல் எழுப்பி வீரர்களையும், குதிரைகளையும் உற்சாகப்படுத்தினர். இதனால் மைதானமே கொண்டாட்ட மனநிலையின் உச்சத்தில் இருந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த குதிரையேற்றப் போட்டித்தொடர், ஞாயிற்றுக்கிழமையான இன்றுடன் (ஆக. 30) நிறைவடைகிறது. இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெறும் அணிகளுக்கு பிரபல திரைப்பட நடிகர்கள் ஆர்யா, ஷாம் கோப்பைகளை வழங்க உள்ளனர் என்று தொடரின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.