கோவை விமான பயணிகளுக்கு ஒரு ஹேப்பி நியூஸ் வெளியாகி உள்ளது. கோவை - பெங்களூரு இடையே தினமும் இரண்டு முறை புதிய விமான சேவையை தொடங்க Air India Express திட்டமிட்டுள்ளது. இந்த சேவை அக்டோபர் 25 முதல் கட்டங்களாக தொடங்கி, நவம்பர் 1 முதல் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவை - பெங்களூரு இடையே விமான இணைப்பு மேலும் அதிகரிக்க உள்ளது.
புதிய அட்டவணையின்படி, பெங்களூருவில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்படும் விமானம் 8.25 மணிக்கு கோயம்புத்தூரை வந்தடையும். பின்னர் காலை 9.10 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு 10.05 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.
மாலை நேரத்திலும் ஒரு புதிய சேவை இருக்கப்பட உள்ளது. அதன்படி, பெங்களூருவில் இருந்து மாலை 7.10 மணிக்கு புறப்படும் விமானம் இரவு 815 மணிக்கு கோவையை அடையும். இதேபோல், கோவையில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்படும் விமானம் 10.45 மணிக்கு பெங்களூரை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Air India Express-ன் புதிய சேவை தொடங்கிய பிறகு கோவை - பெங்களூரு இடையே தினசரி விமானங்களின் எண்ணிக்கை மேலும் உயரும். தற்போது இந்த வழித்தடத்தில் IndiGo மற்றும் Air India Express இணைந்து சேவைகளை வழங்கி வருகின்றன. புதிய விமானங்கள் சேர்க்கப்படுவதன் மூலம் பயணிகளுக்கு கூடுதல் தேர்வுகள் கிடைக்கும்.
குறிப்பாக ஐடி துறையில் பணியாற்றுபவர்கள், தொழில் தொடர்பான பயணங்களை மேற்கொள்பவர்கள் மற்றும் பெங்களூரு வழியாக வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு இந்த சேவை மிகவும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரு விமான நிலையம் வழியாக லண்டன் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நகரங்களுக்கு இணைப்பு கிடைப்பதால், கோவையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கும் இந்த கூடுதல் சேவை வசதியாக அமைய வாய்ப்பு உள்ளது. ஒரே வழித்த்டத்தில் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் பயணிகளுக்கு நேரத்துக்கு ஏற்ற விமானத்தை தேர்வு செய்யும் வாய்ப்பும் அதிகரிக்கலாம். மேலும், விமான நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி அதிகரிப்பதால், கட்டணங்களிலும் போட்டித்தன்மை நிலவ வாய்ப்பு உள்ளது.
கோயம்புத்தூர் NXT Aviation Task Force சார்பில் சமீபத்தில் Air India குழுவினருடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளில் பெங்களூரு இணைப்பை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது பெங்களூரு சேவை விரிவுப்படுத்தப்பட உள்ளது.
இதனிடையே கோவை மற்றும் சென்னை இடையே அதிகளவில் நடைபெறும் தொழில் மற்றும் பயணிகள் போக்குவரத்தை கருத்தில் கொண்டு, இந்த வழித்தடத்திலும் Air India Express புதிய விமான சேவையை விரைவாக தொடங்க வேண்டும் என Task Force சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு, மும்பை மற்றும் சென்னை போன்ற முக்கிய நகரங்களுடன் கோவையின் விமான இணைப்பு மேலும் வலுப்பெறும் பட்சத்தில், மேற்கு தமிழகத்தின் தொழில், வர்த்தகம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு கூடுதல் வசதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.