தேனியை தொடர்ந்து கோவை சிறையிலும் கைதி எஸ்கேப்.. என்னதான் பிரச்சனை?
முன்னதாக தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது கோவை சிறையில் இருந்தும் கைதி ஒருவர் தப்பித்து சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தற்போது கோவை சிறையில் இருந்தும் கைதி ஒருவர் தப்பி ஓடியுள்ளார். ராகவன் என்ற கைதி தப்பி ஓடியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வழிப்பறி வழக்கில் கைதான ராகவன், கோவை சிறையில் இருந்து தப்பி ஒட்டம்பிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
என்ன நடந்தது?
கோவை மாவட்டம், அன்னூர் பகுதியை சேர்ந்த ராகவன் என்பவம் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைப்பதற்காக போலீசார் கோவை மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு இரண்டு கட்டங்களாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், ராகவனை முதல் நுழைவு வாயிலில் இருந்து இரண்டாவது நுழைவு வாயிலுக்கு போலீசார் அழைத்து சென்றபோது, அவரது கைகளில் பூட்டப்பட்டிருந்த விலங்கை அகற்றியுள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக போலீசாரின் கண்காணிப்பை மீறி ராகவன் அங்கிருந்து தப்பியோடினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் தப்பியோடிய கைதியை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பந்தயச்சாலை போலீசார் ராகவனை விரைவில் பிடிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்த விவகாரத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பக்கத்தில், கோவை அன்னூர் பகுதியில் திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட இராகவன் என்ற கைதி, சிறை வளாகத்தில் இருந்து தப்பி ஓடியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சிறையிலிருந்து கைதிகள் தப்பி ஓடும் நிகழ்வுகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.
அன்னூர் காவல் நிலையக் காவலர்களால் நேற்று கைது செய்யப்பட்ட இராகவன் அப்போதே காவலர்களின் பிடியில் இருந்து தப்பி ஓடியுள்ளார். அவரை காவல்துறையினர் துரத்திப் பிடித்து தான் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தியுள்ளனர். இதைக் கவனத்தில் கொண்டு கோவை சிறை வளாகத்தில் கைதி இராகவனை பாதுகாப்புடன் கையாண்டிருக்க வேண்டும். சிறைக்காவலர்கள் அலட்சியமாக நடந்து கொண்டதே இதற்கு காரணம் ஆகும்.
சென்னை புழல் சிறையிலிருந்து கடந்த வாரம் இரு கைதிகள் தப்பி ஓடினார்கள். அந்த அதிர்ச்சி விலகும் முன்பே தேனி தேக்கம்பட்டி மாவட்ட சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பி ஓடினார்கள். அதைத் தொடர்ந்து இப்போது கோவை நிகழ்வு நடந்துள்ளது. சிறைக் கைதிகள் இதுபோன்று அடிக்கடி தப்பி ஓடும் நிகழ்வுகள் விரும்பத் தக்கது அல்ல.
கோவை மத்திய சிறையிலிருந்து தப்பி ஓடிய கைதி இராகவனை விரைந்து கைது செய்ய வேண்டும். தமிழக சிறைகளில் இருந்து கைதிகள் தப்பி ஓடுவதைத் தடுக்க பாதுகாப்பை வலுப்படுத்துவது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.