பண்டிகை காலம் நெருங்கி வருகிறது. இதனால் ரயில்களில் பயணிகளின் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, பயணிகளின் வசதிக்காக சார்லபள்ளி - செங்கோட்டை இடையே வாராந்திர சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் அறிவித்துள்ளது.
ஹைதராபாத் அருகே உள்ள சார்லபள்ளியில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயில், தமிழ்நாட்டில் ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, போத்தனூர், பொள்ளாச்சி, பழனி திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்கள் வழியாக செங்கோட்டையை சென்றடையும்.
ரயில் எண் 07191 சார்லபள்ளி - செங்கோட்டை வாராந்திர சிறப்பு ரயில், அக்டோபர் 2 முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இயக்கப்படும். இந்த ரயில் சார்லபள்ளியிலிருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.
இந்த ரயில் நல்கொண்டா, மிரியாலகுடா, குண்டூர், தெனாலி, பாபட்லா, சிராலா, ஓங்கோல், நெல்லூர், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட ர்யில் நிலையங்கள் வழியாக தமிழ்நாட்டுக்குள் நுழையும். தொடர்ந்து ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி வழியாக செங்கோட்டையை சென்றடையும்.
மறுமார்க்கத்தில் 07192 செங்கோட்டை - சார்லபள்ளி வாராந்திர சிறப்பு ரயி, அக்டோபர் 03 முதல் நவம்பர் 28 ஆம் தேதி வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் இயக்கப்படும். செங்கோட்டையில் இருந்து மாலை 5.40 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மேற்கண்ட வழித்தடத்தில் பயணித்து திங்கட்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு சார்லபள்ளியை சென்றடையும்.
பண்டிகை காலத்தில் சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா மற்றும் பிற தேவைகளுக்காகவும் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் ரயில்களில் பயணம் செய்வார்கள். இதனால் வழக்கமான ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் இந்த சிறப்பு ரயில் சேவை அறிவ்க்கப்பட்டுள்ளது.
சார்லபள்ளி - செங்கோட்டை இடையே இயக்கப்படும் இந்த வாராந்திர சிறப்பு ரயில் மூலம் ஹைதராபாத் மற்றும் தென் தமிழகத்திற்கு இடையே பயணம் செய்யும் மக்களுக்கு கூடுதல் ரயில் வசதி கிடைக்கும்.