கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் செப்டம்பர் 3ஆம் தேதி மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் கோவை வடக்கு, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு நிலையங்களில் ரயில் நிற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் எண் 16322 கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில், வழக்கமாக காலை 8 மணிக்கு கோவை சந்திப்பில் இருந்து புறப்படுகிறது. இந்த நிலையில், செப்டம்பர் 3 ஆம் தேதி மட்டும் கோவை முதல் திண்டுக்கல் வரையிலான பகுதியில் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளது.
மூர்த்திபாளையம் மற்றும் கரூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ஸ்லீப்பர் புதுப்பித்தல் மற்றும் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
இதன்படி, செப்டம்பர் 3ஆம் தேதி கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் போத்தனூர், பொள்ளாச்சி மற்றும் பழனி வழியாக இயக்கப்படும். இதனால் கோவை வடக்கு, பீளமேடு, சிங்காநல்லூர், இருகூர், சூலூர், சோமனூர், திருப்பூர், ஊத்துக்குளி, ஈரோடு உள்ளிட்ட நிலையங்களில் இந்த ரயில் நிற்காது.
அதற்கு மாற்றாக போத்தனூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் ரயில் நிலையங்களில் கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இந்த ரயில் செப்டம்பர் 3 ஆம் தேதி திண்டுக்கல் சந்திப்பு வரை மட்டுமே இயக்கப்படும் என்றும், திண்டுக்கல்லில் இருந்து நாகர்கோவில் சந்திப்பு வரையிலான பயணம் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, செப்டம்பர் 3ஆம் தேதி கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ள பயணிகள், மாற்றப்பட்டுள்ள பாதை மற்றும் ரயில் நிறுத்தங்களை கவனத்தில் கொண்டு பயணத்தை திட்டமிடுமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.