கோவையில் TNPSC, SSC, IBPS போட்டித் தேர்வு ஆசிரியர்கள் தேவை: விண்ணப்பிக்க செப்டம்பர் 7 கடைசி நாள்!
Coimbatore Jobs : கோவையில் தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் போட்டித் தேர்வர்களுக்கான இலவச பயிற்சி நடத்தப்படுகிறது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Coimbatore Jobs : கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக, அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவ, மாணவிகளுக்குத் தொடர்ந்து இலவசப் பயிற்சி வகுப்புகளும் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 1, குரூப் 2/2A மற்றும் குரூப் 4 தேர்வுகள், சீருடைப் பணியாளர் தேர்வு (TNUSRB SI, காவலர் பணி), ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB, TET) மற்றும் மத்திய அரசுப் பணிகளுக்கான SSC, RRB, IBPS வங்கித் தேர்வுகளுக்கு மிகச் சிறந்த முறையில் இலவசப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்விற்கான சிறப்பு வகுப்புகள்:
தற்போது போட்டித் தேர்வுக்குத் தயாராகும் தேர்வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, TNPSC குரூப் 2 மற்றும் 2A (Group II/IIA) முதன்மை மற்றும் முதல்நிலைத் தேர்வுகளுக்கான நேரடி இலவசப் பயிற்சி வகுப்புகள் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் துவங்கப்பட உள்ளன. இந்த வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், பொது அறிவியல், புவியியல், வரலாறு, இந்திய அரசியலமைப்பு (Polity), இந்தியப் பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம் (INM), திறனறிவு மற்றும் காரணியியல் (Aptitude & Reasoning) மற்றும் நடப்பு நிகழ்வுகள் (Current Affairs) உள்ளிட்ட அனைத்துப் பாடப்பிரிவுகளும் விரிவாகக் கற்பிக்கப்பட உள்ளன.
எந்தெந்தப் பாடங்களுக்கு ஆசிரியர்கள் தேவை?
விரைவில் TNPSC Gr.II/IIA மற்றும் IBPS ஆகிய போட்டித் தேர்வுகளுக்கான புதிய வகுப்புகள் துவங்கப்பட உள்ளன. இதற்காக தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், புவியியல், வரலாறு, இந்திய அரசியலமைப்பு, பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், திறனறிவு மற்றும் காரணியியல் மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகிய பாடங்களைச் சிறந்த முறையில் கற்பிக்க அனுபவமும் தகுதியும் வாய்ந்த பயிற்றுநர்கள் தேவைப்படுகின்றனர். மேலும் SSC, IBPS மற்றும் Railways தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளைக் கையாளக்கூடிய ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம்.
மதிப்பூதியம் மற்றும் இதர படிகள்:
தேர்வு செய்யப்படும் பயிற்றுநர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.800 மதிப்பூதியமாக வழங்கப்படும். இதில் வகுப்பு எடுப்பதற்கான மதிப்பூதியம் – ரூ.500, மாதிரி வினாத்தாள் தயாரிப்பு – ரூ.200, விளக்கக் காட்சி தயாரிப்பு (PPT) – ரூ.100
விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி நாள்:
குறிப்பிட்ட பாடங்களில் வகுப்புகளைக் கையாள்வதில் அனுபவமும் விருப்பமும் உள்ள தகுதியான ஆசிரியர்கள், தங்களது புகைப்படத்துடன் கூடிய சுயவிவரக் குறிப்பினை (Resume) நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்:
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம் (ITI Campus), G.N.மில்ஸ், கோவை – 641 029.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 07.09.2026 ஆகும். இது குறித்த கூடுதல் விவரங்களைப் பெற 0422-2642388 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.