Coimbatore News : சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெறவுள்ள 'உலகத்திறன் போட்டிகள் 2026' (World Skills Competition – Shanghai, China 2026) நிகழ்வில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திறமையான போட்டியாளர்களைத் தேர்வு செய்வதற்காக, 'இந்தியத் திறன் போட்டிகள் 2027' (India Skills Competition 2027)-க்கான விண்ணப்பப் பதிவுகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன.
இந்தியத் திறன் போட்டிகளில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய மற்றும் உலகத் திறன் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த போட்டியாளர்கள் பல்வேறு பதக்கங்களையும் விருதுகளையும் வென்று மாநிலத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர். அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான இந்தியத் திறன் போட்டியில் தமிழ்நாடு ஒட்டுமொத்த தரவரிசையில் 2-ஆம் இடத்தைப் பெற்று சாதனை படைத்ததுடன், சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெறும் உலகத்திறன் போட்டிக்குத் தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டிகள் மூலம் இளைஞர்கள் தங்களது தொழில்சார்ந்த திறமைகளைத் தேசிய மற்றும் சர்வதேச அளவில் வெளிப்படுத்துவதற்கான சிறந்த தளம் கிடைக்கிறது. மாவட்டம், மாநிலம், மண்டலம் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் சிறந்த போட்டியாளர்களுக்கு, உலகத்திறன் போட்டியில் இந்தியாவின் சார்பில் களமிறங்கும் அரிய வாய்ப்பு வழங்கப்படும்.
18 முதல் 25 வயதுக்குட்பட்ட (திறன் பிரிவைப் பொறுத்து வயது வரம்பு மாறுபடலாம்) கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல், பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தொழிற்பயிற்சி நிலையம் (ITI) மற்றும் இதர கல்வி நிறுவன மாணவர்கள், இளம் தொழில்முனைவோர் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தும் வகையில், 60-க்கும் மேற்பட்ட தொழில் திறன் பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கலாம்.
இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் தகுதியான நபர்கள் https://www.skillindiadigital.gov.in/india-skills-competition என்ற இணையதளத்தில் நேரடியாகப் பதிவு செய்து விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. போட்டி தொடர்பான இதர கூடுதல் விவரங்களையும் இந்த இணையதளத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு உதவி இயக்குநர், மாவட்டத்திறன் பயிற்சி அலுவலகம், கோயம்புத்தூர் - 29 என்ற முகவரியிலோ அல்லது 9488462613 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.