பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், கேரளாவின் எர்ணாகுளம் முதல் பீகாரின் பாட்னா வரை கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அக்டோபர் 02 முதல் நவம்பர் 03 ஆம் தேதி வரை வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதால், பண்டிகை காலத்தில் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு கூடுதல் ரயில் வசதி கிடைக்க உள்ளது.
எர்ணாகுளம் - பாட்னா சிறப்பு ரயில்
ரயில் எண் 06085 கொண்ட எர்ணாகுளம் சந்திப்பு - பாட்னா சந்திப்பு வாராந்திர சிறப்பு ரயில், அக்டோபர் 02 முதல் 30 ஆம் தேதி வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இயக்கப்படும்.
எர்ணாகுளம் சந்திப்பில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், திங்கட்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு பாட்னா சந்திப்பை சென்றடையும்.
தமிழகத்தில் புதன்கிழமை இரவு 9.40 மணிக்கு ஜோலார்பேட்டை வந்து 9.42 மணிக்கு புறப்படும். தொடர்ந்து சேலத்தில் இரவு 11.08 மணிக்கு வந்து 11.13 மணிக்கு புறப்படும். வியாழக்கிழமை அதிகாலை 12.15 மணிக்கு ஈரோடு, 1.25 மணிக்கு திருப்பூர், காலை 4.58 மணிக்கு கோவை போத்தனூர் ஆகிய இடங்களில் இந்த ரயில் நிற்கும்.
எந்தெந்த இடங்களில் நிற்கும்?
இந்த சிறப்பு ரயில்கள் எர்ணாகுளம், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நிற்கும். மேலும், ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிசா வழியாக விஜயவாடா, புவனேஸ்வர், காரக்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும், பீகாரில் பாட்னா சிட்டி மற்றும் ராஜேந்திர நகர் டெர்மினல் உள்ளிட்ட நிலையங்களிலும் இந்த ரயில்களுக்கு நிறுத்தங்கள் உள்ளன.
பூஜை விடுமுறை, தீபாவளி உள்ளிட்ட அடுத்தடுத்த பண்டிகைகளை முன்னிட்டு ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த கூடுதல் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரளா, தமிழ்நாடு மற்றும் பீகார் இடையே பயணிக்கும் பொதுமக்களுக்கு கூடுதல் ரயில் வசதி கிடைக்க உள்ளது.