உலக கெட்டில்பெல் சாம்பியன்ஷிப்: தங்கம், வெள்ளி வென்று கோவையைச் சேர்ந்த அமுதினி வசந்தி சாதனை!
டெல்லியில் நடைபெற்ற சர்வதேச IUKL உலக கெட்டில்பெல் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டியில் கோவையைச் சேர்ந்த அமுதினி ஆர்.வசந்தி தங்கம் மற்றும் வெள்ளி என இரண்டு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச அளவிலான விலையாட்டு போட்டியில் தங்கம், வெள்ளி என இரண்டு பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். கோவையை சேர்ந்த வீராங்கனை அமுதினி ஆர்.வசந்தி. உடல் வலிமை, விடாமுயற்சி, மன உறுதி ஆகியவற்றை சோதிக்கும் கெட்டில்பெல் விளையாட்டில் அவர் படைத்துள்ள இந்த சாதனை கவனம் பெற்றுள்ளது.
டெல்லியில் உள்ள தல்கடோரா விளையாட்டு அரங்கில் அக்டோபர் 4 முதல் 9 ஆம் தேதி வரை 2026 ஆம் ஆண்டுக்கான IUKL உலக கெட்டில்பெல் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் களமிறங்கிய அமுதினி, இரண்டு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
ரிலே போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணி
இரண்டு கைகளிலும் எடையை தூக்கும் டபுள் ஆரம் லாங் சைக்கிள் ரிலே பிரிவில் இந்திய அணி தங்க பதக்கத்தை கைப்பற்றியது. டெல்லி மற்றும் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த வீராங்கனைகளுடன் இணைந்து அமுதினியும் இந்த போட்டியில் பங்கேற்றார்.
ரஷ்யா, மங்கோலியா, உஸ்பெகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் அணிகளுக்கு கடும் போட்டியளித்த இந்திய அணி முதலிடத்தை பிடித்தது. இந்த போட்டியில் அமுதினி தனது மூன்று நிமிட சுற்றில், தலா 16 கிலோ எடையுள்ள இரண்டு கெட்டில்பெல்களை தூக்கி 30 முறை பயிற்சியை நிறைவு செய்தார். அவரது செயல்பாடு இந்திய அணியின் வெற்றிக்கு பங்களித்தது.
12 நிமிடங்கள் எடையை கீழே வைக்காமல் சாதனை
அணி பிரிவில் தங்கம் வென்ற அமுதினி, தனிநபர் பிரிவிலும் தனது திறமையை நிரூபித்தார். மிலிட்டரி ஸ்னாட்ச் பிரிவில் 16 கிலோ எடையுள்ள கெட்டில்பெல்லை 12 நிமிடங்கள் கீழே வைக்காமல் தூக்கி, 183 முறை அந்த செயல்பாட்டை நிறைவு செய்தார். இதன் மூலம் வெள்ளி பதக்கத்தை வென்றார்.
தொடர்ச்சியாக எடையை தூக்குவதற்கு உடல் வலிமை மட்டுமின்றி அதிக சகிப்புத்தன்மையும் மன ஒருமைப்பாடும் தேவைப்படும். இந்த சவால்களை சிறப்பாக எதிர்கொண்டு அமுதினி பதக்கம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
கோவை திரும்பிய வீராங்கனைக்கு வரவேற்பு
அமுதினி, கவுதம் சண்முகம் தலைமையில் Team G FIT பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகிறார். ஏற்கனவே பிராந்திய அளவிலான போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்திய அவர், தற்போது உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் பதக்கங்களை வென்று சர்வதேச அரங்கில் சாதித்துள்ளார்.
போட்டியை முடித்துவிட்டு பதக்கங்களுடன் விமானம் மூலம் கோவை திரும்பிய அவருக்குக் குடும்பத்தினர் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த வெற்றிக்குத் தனது பெற்றோர் மற்றும் பயிற்சியாளர் கவுதம் சண்முகம் அளித்த ஊக்கமும் வழிகாட்டுதலுமே முக்கியக் காரணம் என்று அமுதினி தெரிவித்தார்.
பெண்களுக்கு அமுதினி வேண்டுகோள்!
தமிழகத்தை சேர்ந்த மேலும் பல பெண்கள் கெட்டில்பெல் விளையாட்டில் ஆர்வத்துடன் பங்கேற்று சாதிக்க வேண்டும் என்று அமுதினி விருப்பம் தெரிவித்துள்ளார். உடல் வலிமையையும் மன உறுதியையும் சோதிக்கும் இந்த விளையாட்டில் பெண்கள் அதிக அளவில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அதேபோல், அதிகம் பிரபலமடையாத விளையாட்டுத் துறைகளில் சாதிக்க முயற்சிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு அரசு கூடுதல் உதவிகளை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ள அமுதினி, தனது விளையாட்டுப் பயணத்தில் முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளார். அவரது வெற்றி, தமிழகத்தைச் சேர்ந்த மேலும் பல பெண்கள் விளையாட்டுத் துறையில் தடைகளைத் தாண்டி சாதிக்க உந்துதலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.