கோவை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் ஈஷா யோகா மையம் செயல்பட்டு வருகிறது. தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் இங்கு வந்து யோகா தியானம் உள்ளிட்ட பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அடகட்லா சிவபிரகாத் (26) என்பவர் ஈஷா யோகா மைதானத்தில் இரண்டு நாட்கள் தங்குவதற்காக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ததாக கூறப்படுகிறது. டிப்ளமோ படித்துள்ள அவர், மும்பையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வருவதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
நேற்று மாலை சுமார் 4 மணியளவில் ஈஷா யோகா மையத்தின் நுழைவு வாயில் பகுதிக்கு சிவபிரசாத் வந்துள்ளார். அப்போது அவர் அத்துமீறி உள்ள செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதனை கவனித்த பாதுகாப்பு பணியாளர்கள் யோகேஸ்வரன், சஜித் மற்றும் முருகேசன் ஆகியோர் அவரை தடுத்து நிறுத்தி உள்ளனர். அப்போது சிவபிரசாத் தனது பையில் வைத்திருந்த கத்தியை வெளியே எடுத்து காட்டி பாதுகாப்பு பணியாளர்களிடம் தகாத வார்த்தைகளில் பேசியதுடன் மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் நுழைவு வாயில் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பாதுகாப்புப் பணியாளர்கள் அவரை கட்டுப்படுத்தி பிடித்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து ஆலாந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து அங்கு சென்ற ஆலாந்துறை காவல்துறையினர் சிவபிரசாத்தை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இது தொடர்பாக ஈஷா பாதுகாப்பு பொறுப்பாளர் யோகேஸ்வரன் அளித்த புகாரின் அடிப்படையில் தகாத வார்த்தைகளால் பேசியது, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சிவபிரசாத் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், சிவபிரசாத்தின் குடும்பத்தினர் தெலுங்கானாவில் வசித்து வருவது தெரியவந்துள்ளது. அவருக்கு ஒரு தம்பி இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், கடந்த சில ஆண்டுகளாக அவர் மனநலப் பிரச்சனைக்காக பெங்களூருவில் சிகிச்சை பெற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பயிற்சி பெறும் நோக்கில் அவர் ஈஷா யோகா மையத்திற்கு வந்திருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து சிவபிரசாத்துக்கு தேவையான மனநல ஆலோசனைகளை வழங்குவது தொடர்பாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.