கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செரையம்பாளையம் பகுதியில் கொரோனா காலத்தில் அரசு பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து அந்த பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில் தவெக எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் கலந்து கொண்டு பேருந்து சேவையை தொடங்கி வைத்தார்.
பின்னர், அந்த பேருந்தில் சிறிது தூரம் பயணம் செய்த அவர், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்தபோது, பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டது குறித்து விளக்கமளித்தார்.
கொரோனாவுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த பேருந்து சேவை தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக கனிமொழி சந்தோஷ் தெரிவித்தார். மேலும், பேருந்து சேவை ஏன் நிறுத்தப்பட்டது என்பது குறித்து முந்தைய ஆட்சியாளர்களிடம்தான் கேட்க வேண்டும் என்றும் தங்கள் தரப்பில் மக்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
மக்கள் தொகையை மட்டுமே கணக்கில் கொண்டு அடிப்படை வசதிகளை வழங்காமல் குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்களின் தேவையை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நடிகர் விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல்வர் விஜயை விமர்சித்ததாக சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பரவி வருவது குறித்து எம்எல்ஏ கனிமொழியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், பிக் பாஸ் என்பது ஒரு கேளிக்கை நிகழ்ச்சி. விஜய் சேதுபதி மகாராஜா திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே அவரது ஜாதக நிலையை பார்த்து, அவருக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது என கூறினேன். அதேபோல் பிக் பாஸ் நிகழ்ச்சி அவருக்கு ஒரு ஜாக்பாட்டாக அமைந்தது. அதில் அவர் சுமார் ரூ. 80 கோடி வரை சம்பளம் பெறுவார் என கூறிய அவர், விஜய் சேதுபதியின் சமீபத்திய வைரல் கருத்துக்கும் பதிலளித்தார்.
அரசியல் விமர்சனங்களை யார் வேண்டுமானாலும் முன்வைக்கலாம் என்றும் ஆனால் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் கனிமொழி தெரிவித்தார். விஜய் சேதுபதி கூறிய கருத்துக்களால் தங்களது அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்றும் அவர் கூறினார். தங்கள் ஆட்சியில் நடைபெறும் விஷயங்கள் வெளிப்படையாக மக்களுக்கு தெரிவிக்கப்படுவதாகவும், அரசு நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் தொடர்ந்து எடுத்துக்கூறி வருவதாகவும் தெரிவித்தார்.
விஜய் சேதுபதிக்கு தான் முன்பு கூறிய ஜாக்பாட் பலித்துவிட்டதாகவும், குறிப்பிட்ட கட்சியிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு அவர் பேசுவதாகவும் கனிமொழி சந்தோஷ் குற்றம்சாட்டினார். அதே நேரத்தில் தங்களது தலைவரின் பெயரை குறிப்பிட்டு அவர் பேசினால் அதற்கு பதில் அளிக்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.
இந்த விவகாரத்தை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்றும், விஜய் சேதுபதி தனது பிழைப்புக்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக தான் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.
சட்டப்பேரவைக்கு செல்லும்போது கூட பல்வேறு தரப்பினரும் சட்டப்பேரவை நிகழ்வுகளை கவனித்து வருவதாக கூறிய கனிமொழி சந்தோஷ், விஜய் சேதுபதிக்கு தற்போது நேரம் சரியில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரத்தை இதோடு விட்டுவிட்டால் நன்றாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பது தொடர்பான கேள்விக்கும் கனிமொழி சந்தோஷ் பதிலளித்தார்.
தேர்தலுக்கு முன்பாக இதே கேள்வியை கேட்டிருந்தால் பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்திருக்கலாம் என்றும், ஆனால் தற்போது தங்களது ஆட்சியின் செயல்பாடுகளை மக்கள் நேரடியாக பார்த்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
இதனால் மக்கள் மத்தியில் தங்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும், இடைத்தேர்தலில் தங்கள் தலைவர் யாரை வேட்பாளராக நிறுத்துகிறாரோ அவரே வெற்றி பெறுவார் என்றும் கனிமொழி சந்தோஷ் தெரிவித்தார்.