மூடப்படாத தண்ணீர் தொட்டி.. கோவையில் ஒரு வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்!
Coimbatore News: கோவை மாவட்டம் ரத்தினபுரியில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த ஒரு வயது ஆண் குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை ரத்தினபுரி வ.உ.சி. நகர் பகுதியில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த ஒரு வயது குழந்தை, மூடப்படாமல் இருந்த நிலத்தடி தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்த வேணுகோபால் கலைவாணி தம்பதியரின் ஒரு வயது மகன் தன்வந்த். சம்பவத்தன்று வீட்டின் முன்புறத்தில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது விட்டின் அருகே தரைமட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த நிலத்தடி தண்ணீர் தொட்டியின் மீது முழுமையான காங்கிரீட் மூடி இல்லாமல், தகரம் கொண்டு தற்காலிகமாக மூடப்பட்டிருந்ததாக தெரிகிறது. அந்தப் பகுதிக்கு சென்ற குழந்தை எதிர்பாராதவிதமாக தொட்டிக்குள் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
குழந்தை நீண்ட நேரமாக காணப்படாததையடுத்து பெற்றோர் வெளியே வந்து தேடி உள்ளனர். அப்போது வீட்டின் முன்பகுதியில் இருந்த தண்ணீர் தொட்டியை பார்த்தபோது, குழந்தை அதற்குள் தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் குழந்தையை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரத்தினபுரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டின் அருகே இருந்த நிலத்தடி தண்ணீர் தொட்டிக்குள் ஒரு வயது குழந்தை தவறி விழுந்து உயிர்ழந்த சம்பவம் ரத்தினபுரி வ.உ.சி. நகர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.