ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும், அவர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையிலும் தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, பெங்களூரு எஸ்.எம்.வி.டி (SMVT) முனையத்தில் இருந்து திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையம் வரை இரு மார்க்கங்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இந்த சிறப்பு ரயில்கள் தமிழகத்தின் சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் போத்தனூர் வழியாக இயக்கப்பட உள்ளதால், தமிழக பயணிகளுக்கும் இது பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
வண்டி எண் 06569 (பெங்களூரு – திருவனந்தபுரம்): எஸ்.எம்.வி.டி பெங்களூரு ரயில் நிலையத்திலிருந்து ஆகஸ்ட் 20 அன்று மாலை 05:10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் (ஆகஸ்ட் 21) காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு சென்றடையும். இந்த ரயில் ஆகஸ்ட் 21 நள்ளிரவு 12:58 மணிக்கு போத்தனூர் வந்தடைந்து, 01 மணிக்கு புறப்படும்.
வண்டி எண் 06570 (திருவனந்தபுரம் – பெங்களூரு): மறுமார்க்கத்தில், திருவனந்தபுரம் வடக்கிலிருந்து ஆகஸ்ட் 22 அன்று மதியம் 12:40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் (ஆகஸ்ட் 23) காலை 06 மணிக்கு எஸ்.எம்.வி.டி பெங்களூரு சென்றடையும். இந்த ரயில் ஆகஸ்ட் 22 இரவு 08:59 மணிக்கு போத்தனூர் வந்தடைந்து, 09 மணிக்கு புறப்படும்.
இந்த சிறப்பு ரயில்கள் கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, குப்பம், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கன்னூர், மாவேலிக்கரா, காயங்குளம், கருநாகப்பள்ளி, சாஸ்தாங்கோட்டை, கொல்லம் மற்றும் வர்கலா ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
பயணிகளின் வசதிக்காக இந்த ரயில்களில் 2 அடுக்கு ஏசி (AC 2-Tier), 3 அடுக்கு ஏசி (AC 3-Tier), படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் (Sleeper Class), பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் (General Second Class) மற்றும் பிரேக் வேன் வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. பண்டிகை காலத்தில் சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.