ஓணம் பண்டிகை: பெங்களூரு - திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்கள்.. சேலம், கோவை வழியே இயக்கம்!
Onam Special Train: ஓணம் பண்டிகையை முன்னிட்டு பெங்களூரு–திருவனந்தபுரம் இடையே ஆகஸ்ட் 28, 29ல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயில்கள் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், பெங்களூரு கேன்டோன்மென்ட் மற்றும் திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. ஆகஸ்ட் 28 மற்றும் 29ம் தேதிகளில் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
அதன்படி, ரயில் எண் 06579 பெங்களூரு கேன்டோன்மென்ட் - திருவனந்தபுரம் வடக்கு சிறப்பு ரயில் ஆகஸ்ட் 28ம் தேதி மாலை 4.40 மணிக்கு பெங்களூரு கேன்டோன்மென்ட்டில் இருந்து புறப்படும். மறுநாள் காலை 10.30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தை சென்றடையும்.
மறுமார்க்கத்தில் ரயில் எண் 06580 திருவனந்தபுரம் வடக்கு - பெங்களூரு கேன்டோன்மென்ட் சிறப்பு ரயில் ஆகஸ்ட் 29ம் தேதி மதியம் 12.40 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கில் இருந்து புறப்படும். மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு பெங்களூரு கேன்டோன்மென்ட்டை சென்றடையும்.
எங்கெல்லாம் இந்த ரயில் நிற்கும்?
இந்த சிறப்பு ரயில்கள் கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, குப்பம், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை (போத்தனூர்), பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரா, காயங்குளம், கருநாகப்பள்ளி, சாஸ்தாங்கோட்டை, கொல்லம் மற்றும் வர்கலா உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.
ஆகஸ்ட் 28ம் தேதி பெங்களூருவில் இருந்து புறப்படும் ரயில் இரவு 10.20 மணிக்கு சேலம் வந்தடைந்து, 10.23 மணிக்கு புறப்படும். இரவு 11.20 மணிக்கு ஈரோடு வந்தடைந்து, 11.30 மணிக்கு புறப்படும். ஆகஸ்ட் 29 அதிகாலை 12.20 மணிக்கு திருப்பூரையும், 1.44 மணிக்கு கோவை போத்தனூரையும் சென்றடையும். இங்கு முறையே 12.22 மணிக்கும், 1.45 மணிக்கும் ரயில் புறப்படும்.
மறுமார்க்கத்தில் ஆகஸ்ட் 29ம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் ரயில் இரவு 8.59 மணிக்கு போத்தனூரை வந்தடைந்து, 9 மணிக்கு புறப்படும். இரவு 9.38 மணிக்கு திருப்பூர் வந்தடைந்து, 9.40 மணிக்கு புறப்படும். தொடர்ந்து இரவு 10.20 மணிக்கு ஈரோடு வந்தடைந்து, 10.30 மணிக்கு புறப்படும். இரவு 11.25 மணிக்கு சேலம் வந்தடைந்து, 11.28 மணிக்கு புறப்படும்.
இந்த சிறப்பு ரயில்களில் 2-டயர் ஏசி, 3-டயர் ஏசி, ஸ்லீப்பர் கிளாஸ், இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டி உள்ளிட்ட பெட்டிகள் இடம்பெறும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.