கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் ஊழல் ஒழிப்பு மற்றும் தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.
ஊழல் இல்லாத நாடுகளில்தான் எதிர்கால வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், ஊழலுக்கு எதிராக செயல்படும் இயக்கங்களுக்கு தொடர்ந்து ஆதரவு இருக்கும் என்றார். தமிழக முதல்வர், ஊழலை ஒழிப்பேன் என்றும் அரசு மற்றும் பொதுச்சொத்துக்களை பாதுகாப்பேன் என்றும் வெளிப்படையாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது எனவும் தெரிவித்தார்.
சட்டப்பேரவையிலும், பொது வெளியிலும் முதல்வர் இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது முக்கியமானதாகும் என்றும், இது வலிமையான அறிவிப்பாக பார்க்கப்படுவதாகவும் சகாயம் கூறினார். முதல்வரின் இந்த நிலைப்பாடு அரசு துறைகளில், குறிப்பாக பதிவுத்துறை மற்றும் வருவாய்த்துறை போன்ற துறைகளின் கீழ்மட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், இதன் மூலம் தமிழகத்தில் ஊழல் முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டது என்று கூற முடியாது என்றும் சகாயம் சுட்டிக்காட்டினார். ஊழலை முற்றிலும் ஒழிப்பது சாதாரணமான விஷயம் அல்ல என்றும் உலகமயமாக்கல், தனியார்மயம் மற்றும் கார்ப்பரேட் கலாச்சாரம் அதிகரித்துள்ள தற்போதைய சூழலில் ஊழல் சமூகத்தின் பல்வேறு நிலைகளிலும் பரவியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் சமூகத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் சமூகத்தில் நிலவும் நிலைமைகளின் தாக்கம் நிர்வாகத்திலும் பிரதிபலிக்கும் என சகாயம் கூறினார். ஆட்சி மற்றும் நிர்வாகத்தில் ஊழல் அதிகமாக காணப்படுகிறது என்றால், அதன் தாக்கம் சமூகத்திலும் அதிகமாக இருப்பதை பிரிந்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஊழலை வேரோடு ஒழிக்க வேண்டும் என்றால் அதற்கான மாற்றம் சமூகத்தில் இருந்தே தொடங்க வேண்டும் எனவும் சகாயம் வலியுறுத்தினார். ஒவ்வொரு குடிமகனும், தனிநபரும் நேர்மையுடனும் பொறுப்புணர்வுடனும் செயல்பட வேண்டியது அவசியம் என்றார். தமிழ் சமூகம் பாரம்பரியமாக அறம், நேர்மை மற்றும் வாய்மைக்கு முக்கியத்துவம் கொடுத்த சமூகமாக இருந்து வந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். சிலப்பதிகாரத்தில் கூறப்படும் அறம் சார்ந்த கருத்துகளையும், “அறத்தால் வருவதே இன்பம்” என்ற அடிப்படை சிந்தனையையும் சுட்டிக்காட்டிய சகாயம், நேர்மை மற்றும் ஆகியவை தமிழ்ச் சமூகத்தின் அடிப்படை பண்புகளாக இருந்ததாக தெரிவித்தார்.
ஆனால், தற்போதைய சூழலில் சமூகத்தில் ஊழல் சிந்தனை அதிகரித்திருப்பதை முதலில் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். பிரச்சனையை ஒப்புக்கொள்வதுதான் மாற்றத்தை நோக்கிய முதல் படி என்று சமூகத்தில் இருந்து மாற்றத்தை உருவாக்க முடியும் என்றும் சகாயம் தெரிவித்தார். ஊழலை ஒழிப்பது தொடர்பாக தமிழக அரசிடம் மேலும் பல்வேறு நடவடிக்கைகளை எதிர்பார்ப்பதாக கூறிய அவர், முதல்வரே “ஊழலை ஒழிப்பேன்” என்று அறிவித்திருப்பது வலிமையான அரசியல் உறுதிமொழி என்றும் தெரிவித்தார். அந்த அறிவிப்பை ஊழல் எதிர்ப்பு இயக்கங்கள் ஒரு வலுவான ஆயுதமாக எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும் என்றும் சகாயம் வலியுறுத்தினார்.