SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

கோவையில் கொளுத்தும் வெயில்.. ஊட்டியில் புதிய உச்சம்! எல் நினோ காரணமா?

தமிழகத்தில் செப்டம்பர் மாதத்திலும் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், கோவை உள்ளிட்ட பகுதிகளில் மழையின்றி வறண்ட வானிலையும், ஊட்டி, ஈரோடு, கரூரில் வழக்கத்தை விட அதிக வெப்பநிலையும் பதிவாகி வருகிறது.

Written By R Balaji
Published: Sep 08, 2026, 13:45 IST | Updated: Sep 08, 2026, 13:52 IST
Join

தமிழகத்தில் செப்டம்பர் மாதத்திலும் கோடை காலத்தை போல வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக அவ்வப்போது மழை பதிவாகும் கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்யாமல் வரண்ட வானிலை நிலவி வருகிறது. இதேபோல் ஊட்டி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் இந்த செப்டம்பர் மாதத்தில் வழக்கத்தை விட அதிக வெப்பநிலை பதிவாகி உள்ளது.

கோவை மாவட்டத்தில் தொடர்ந்து 2 வது நாளாகவும் மழைப்பொழிவு பதிவாகவில்லை. செப்டம்பர் 8ம் தேதி காலை, கடந்த 24 மணி நேரத்திற்கான மழையளவு பூஜ்ஜியமாக இருந்தது. வழக்கமாக அதிக மழை கிடைக்கும் வால்பாறை மற்றும் சிறுவாணி, பிலூர் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை இல்லாத நிலை தொடர்கிறது. இதற்கிடையில், கோவை மாநகரிலும் கடந்த ஒரு வாரமாக வெப்பநிலை அதிகமாகவே உள்ளது. அதிகபட்சமாக சுமார் 34 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகி வருவதுடன், அதிக ஈரப்பதம் காரணமாக பொதுமக்கள் கூடுதல் புழுக்கத்தை உணர்ந்து வருகின்றனர்.

ஊட்டியில் இதுவரை இல்லாத வெயில்

கோவை மட்டுமின்றி தமிழகத்தின் மலைப்பகுதிகளிலும் இந்த முறை வெப்பநிலை வெப்பநிலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. பொதுவாக குளிர்ச்சியான காலநிலைக்காக அறியப்படும் ஊட்டியில் செப்டம்பர் 5ம் தேதி 24.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. இது செப்டம்பர் மாதத்தில் ஊட்டியில் பதிவான இதுவரையிலான அதிகபட்ச வெப்பநிலையாகும்.

இதற்கு முன்பு செப்டம்பர் மாதத்தில் ஊட்டியில் அதிகபட்சமாக 23.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கடந்த 1994ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி பதிவாகியிருந்தது. அந்த சாதனையை தற்போது 24.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை முறியடித்துள்ளதாக வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டில் ஊட்டியில் இதற்கு முன்பும் வெப்பநிலை சாதனைகள் பதிவாகியுள்ளன. ஜூலை மாதத்திலும் புதிய வெப்பநிலை சாதனை பதிவானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரோடு, கரூரிலும் கொளுத்தும் வெயில்

திருச்சி, பாளையங்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலும் இந்த செப்டம்பரில் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பநிலை நிலவி வருகிறது. குறிப்பாக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஈரோடு மற்றும் கரூரில் செப்டம்பர் 5-ம் தேதி முறையே 39.8 மற்றும் 39.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இந்த அளவிலான வெப்பநிலை, அந்த பகுதிகளில் செப்டம்பர் மாதத்தில் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பநிலை சாதனையாக அமைந்துள்ளதாக பிரதீப் ஜான் பகிர்ந்துள்ள வானிலை தரவுகள் தெரிவிக்கின்றன.

எல்-நினோவும் ஒரு காரணமா?

தமிழகத்தில் நீடித்து வரும் இந்த வெப்பத்தை தனிப்பட்ட வானிலை மாற்றமாக மட்டும் பார்க்க முடியாது என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக எல் நினோ உள்ளிட்ட பருவநிலை காரணிகளையும் இதனுடன் இணைத்து ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பல பகுதிகளில் தென்மேற்கு பருவமழை நிலைபெற்றவுடன் கோடை வெப்பம் ஓரளவு குறையும். ஆனால் தமிழகத்தில் பருவமழை நிலவரம் மற்றும் புவியியல் அமைப்பு காரணமாக செப்டம்பர் மாதத்திலும் வெப்பமான காலநிலை நீடிக்கும் வாய்ப்பு உள்ளது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES