Explainer: எல் நினோவால் ஏற்பட்ட கடந்த கால பேரழிவுகள்.. 2026ல் எப்படி இருக்கும்?
2026-27ல் வலுவான எல் நினோ உருவானால், உலகளவில் வானிலை, விவசாயம், நீர்வளம் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படலாம்; ஆனால் இந்தியாவின் பருவமழை பாதிப்பை இப்போதே உறுதியாகக் கூற முடியாது.
உலகின் பல்வேறு பகுதிகளில் வானிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டில் மீண்டும் எல் நினோ தாக்கம் இருக்க வாய்ப்புள்ளதாக கணிப்புகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் இந்த இயற்கை நிகழ்வு, வெப்பநிலை உயர்வு முதல் கனமழை, வெள்ளம், வறட்சி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். கடந்த கால எல் நினோ நிகழ்வுகள் உலக நாடுகளுக்கு ஏற்படுத்திய தாக்கங்களை பார்க்கும்போது, 2026-ல் எத்தகைய விளைவுகளை எற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது? இந்தியாவில் எந்த மாதிரியான பாதிப்புகள் இருக்கக்கூடும் என்ற விவரத்தை இங்கு விரிவாக பார்க்கலாம்.
எல் நினோ என்றால் என்ன?
எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகரிக்கும் ஒரு இயற்கையான வானிலை நிகழ்வாகும். இந்த வெப்பநிலை மாற்றம் கடலில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்தாது. உலகின் பல்வேறு பகுதிகளில் காற்றின் போக்கு மற்றும் மழை பெய்யும் முறைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக ஒரு பகுதியில் கனமழை, வெள்ளம் ஏற்படும்போது, மற்றொரு பகுதியில் கடுமையான வறட்சி மற்றும் காட்டுத்தீ ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆனால், எல் நினோ உலகம் முழுவதும் ஓரே மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது கிடையாது. எந்தப் பகுதியில் என்ன மாதிரியான தாக்கம் இருக்கும் என்பது அந்தந்த பிராந்தியத்தின் வானிலை சூழலை பொறுத்து மாறுபடும்.
கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட பாதிப்புகள்
1982 - 83: இந்த ஆண்டுகளில் எல் நினோ உலகத்தின் பல்வேறு பகுதிகளின் வானிலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்தியாவில் 1982 ம் ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட 14% குறைவாக பதிவானது. இதனால் நாட்டின் பல பகுதிகளில் வறட்சி நிலவியது. அதே நேரத்தில், பெரு மற்றும் ஈக்வடார் போன்ற நாடுகளில் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் வறட்சி மற்றும் காட்டுத்தீயும் ஏற்பட்டது. குறிப்பாக, 1983-ம் ஆண்டு எத்தியோப்பியா மற்றும் சூடானில் வறட்சி காரணமாக சுமார் 4.5 லட்சம் பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. எல் நினோவின் தாக்கம் அப்போது மட்டுமல்லாமல், அடுத்த 5 ஆண்டுகளுக்கு பொருளாதார ரீதியாக தொடர்ந்துள்ளது. அதாவது, 5 ஆண்டுகளில் உலகளவில் சுமார் 4.1 டிரில்லியன் டாலர் அளவுக்கு ஒட்டுமொத்த வருமான இழப்பு ஏற்பட்டதாம்.
1997 - 98: இந்த ஆண்டுகளில் எல் நினோ மிகவும் வலுவாக இருந்தது. இருப்பினும், இந்தியாவில் அதன் தாக்கம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. 1997-ம் ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த பருவமழை இயல்பை விட 2% அதிகமாக இருந்தது. இதற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவிய சாதகமான வானிலையே முக்கிய பங்கு வகித்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்த சமயத்தில், இந்தோனேசியாவில் கடுமையான வறட்சி ஏற்பட்டு காட்டுத்தீ தீவிரமடைந்தது. இந்த எல் நினோ காரணமாக சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாக ஐ.நா. கூறுகிறது. அதேபோல், கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதம் மட்டும் சுமார் 36 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2015 - 16: இந்த காலகட்டத்தில் ஏற்பட்ட எல் நினோ, கடந்த காலங்களில் பதிவான மிக வலுவான எல் நினோ நிகழ்வுகளில் ஒன்றாக இருந்தது. இதன் தாக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டது. குறிப்பாக, 2015 ம் ஆண்டு இந்தியாவில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட 12.7% குறைவாக பதிவானது. இதனால் மழையை நம்பியிருந்த விவசாயப் பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. அத்துடன், பயிர் உற்பத்தியிலும் பாதிப்பு ஏற்பட்டது. நீர்த்தேக்கங்களிலும் நீரின் அளவு குறைந்ததால் குடிநீர் மற்றும் பாசனத்துக்கும் சிக்கல் ஏற்பட்டது.
இந்தியாவை தவிர, தென்கிழக்கு ஆசியாவின் சில நாடுகளிலும் எல் நினோ காரணமாக கடுமையான வறட்சி நிலவியது. இதனால் காடுகளில் தீ பரவும் சம்பவங்கள் அதிகரித்து, சில பகுதிகளில் புகை மூட்டம் மற்றும் காற்று மாசுபாடு தீவிரமடைந்தது.
2026 - 27 எல் நினோ எவ்வளவு வலுவாக இருக்கும்?
தற்போது எல் நினோ மீண்டும் கவனம் பெறுவதற்கு முக்கிய காரணம், இது வலுவான எல் நினோவாக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்படுவதுதான். அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகமான NOAA-வின் ஆகஸ்ட் 13 கணிப்பின்படி, 2026 ம் ஆண்டின் வடக்கு அரைக்கோள இலையுதிர் மற்றும் குளிர்காலத்தில் எல் நினோ மிகவும் வலுவானதாக மாற 90 சதவீதத்துக்கும் அதிகமான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1950 ம் ஆண்டுக்குப் பிறகு பதிவான எல் நினோ நிகழ்வுகளில் இதன் வலிமை மிக அதிகமாக இருக்கும் வாய்ப்பும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இதை வைத்து எல் நினோவின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை கணிக்க முடியாது. அதாவது, வலுவான எல் நினோ என்றாலே உலகின் அனைத்து பகுதிகளிலும் மிகப்பெரிய பேரிடர் ஏற்படும் என்று அர்த்தமில்லை. அந்தந்த பிராந்தியத்தின் வானிலை அமைப்பு, கடல் வெப்பநிலை மற்றும் பிற காலநிலையை பொறுத்தே அதன் உண்மையான தாக்கம் மாறுபடும்.
கடந்த கால வலுவான எல் நினோ நிகழ்வுகளை பார்க்கும்போது, ஒரே ஒரு வெள்ளம் அல்லது வறட்சி ஏற்படுவது மட்டும் மிகப்பெரிய பிரச்னை அல்ல. உலகின் பல்வேறு கண்டங்களில் ஒரே நேரத்தில் வெவ்வேறு விதமான வானிலை பாதிப்புகள் ஏற்படுவதுதான் மிகப்பெரிய ஆபத்தாக பார்க்கப்படுகிறது.
ஒரு நாட்டில் வறட்சி காரணமாக பயிர் உற்பத்தி குறைந்தால், அதன் தாக்கம் உலக உணவு சந்தையிலும் எதிரொலிக்கலாம். அதே நேரத்தில், மற்றொரு பகுதியில் வெள்ளம் ஏற்பட்டால் சாலைகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் சேதமடையலாம். வறட்சி காரணமாக நீர்மின் உற்பத்தி பாதிக்கப்படலாம். காட்டுத்தீயில் இருந்து உருவாகும் புகை எல்லைகளை கடந்து மற்ற நாடுகளையும் சென்றடையலாம்.
இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
இந்தியாவைப் பொறுத்தவரை, எல் நினோவின் தாக்கத்தை வைத்து பருவமழை நிச்சயம் குறையும் என்று கூற முடியாது. 1997-98ல் மிகவும் வலுவான எல் நினோ இருந்தபோதிலும், இந்தியாவின் பருவமழை இயல்பை விட அதிகமாகவே இருந்தது. இதனால் எல் நினோவுடன் இணைந்து இந்தியப் பெருங்கடல் உள்ளிட்ட பிற வானிலை காரணிகளையும் கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.
அதேநேரத்தில், 1982 மற்றும் 2015 போன்ற முந்தைய நிகழ்வுகளில் இந்தியாவில் பருவமழை குறைந்ததையும் பார்க்க முடிகிறது. எனவே 2026-27ல் எல் நினோ வலுவடைந்தால், மழைப்பொழிவு, விவசாயம், நீர்வளம் மற்றும் உணவுப் பொருட்களின் விலை போன்றவற்றில் ஏற்படக்கூடிய மாற்றங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியிருக்கும்.
கடந்த கால எல் நினோ நிகழ்வுகள் நமக்கு சொல்லும் முக்கியமான பாடம், எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலில் மட்டும் நிகழும் ஒரு கடல் வெப்பநிலை மாற்றம் அல்ல என்பதுதான். அதன் தாக்கம் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாடுகளின் மழைப்பொழிவு, விவசாயம், நீர்வளம், சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்திலும் எதிரொலிக்கக்கூடும்.
1982-83, 1997-98 மற்றும் 2015-16 நிகழ்வுகளில் வெள்ளம், வறட்சி, காட்டுத்தீ, பயிர் சேதம் மற்றும் உணவு பற்றாக்குறை என பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. அதேபோன்ற பாதிப்புகள் 2026-27ல் அதே இடங்களிலும் அதே அளவிலும் மீண்டும் ஏற்படும் என்று கூற முடியாது. ஆனால், வலுவான எல் நினோ உருவானால் ஏற்கனவே பாதிப்புகளுக்கு உள்ளாகக்கூடிய நிலையில் இருக்கும் பகுதிகளின் பிரச்னைகள் மேலும் தீவிரமடையலாம்.
அதனால், எல் நினோவை அச்சத்துடன் பார்ப்பதைவிட முன்னெச்சரிக்கையுடன் எதிர்கொள்வதே முக்கியம். துல்லியமான வானிலை கணிப்புகள், முன்னெச்சரிக்கைகள், உணவுப் பொருட்களின் இருப்பு, வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை பாதிப்புகளை கணிசமாக குறைக்க உதவும்.
மொத்தத்தில், 2026-27 எல் நினோ எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைவிட, அதற்காக உலக நாடுகள் எவ்வளவு தயாராக இருக்கின்றன என்பதுதான் அதன் தாக்கத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும்.