"காதலியே இல்லை.. அது வெறும் AI" – ஏமாற்றத்தை கொடுத்த 1900 கி.மீ பயணம்! என்ன நடந்தது?
பிரேசில் நாட்டை சேர்ந்த ஒருவர், சமூக வலைதளத்தில் பேசி பழகி காதலித்த பெண்ணை நேரில் பார்க்க 1900 கிலோ மீட்டர் பயணம் செய்த நிலையில், அவர் அங்கு மிகப்பெரிய அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளார்.
பிரேசிலின் மரான்யாவ் மாநிலத்தை சேர்ந்தவர் எடிமார் மார்டின்ஸ். இவர் செங்கல் கட்டுமானத் தொழிலாளியாக பயணியாற்றி வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு சமூக வலைதளத்தில் ஜெசிகா ஒலிவேரா என்ற பெயரில் உள்ள அக்கவுண்ட்டை பார்த்துள்ளார். அந்த அக்கவுண்ட்டில் பண்ணை வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்வது போன்ற வீடியோக்கள் இருந்துள்ளன. அதேசமயம் அந்த பெண்ணுக்கு 3 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோவர்ஸ் இருந்துள்ளனர்.
அந்த நபர் வெளியிட்ட வீடியோவில், தன்னுடன் வந்து வாழ விரும்பும் ஆண்களுக்கு வீடு மற்றும் பணம் வழங்க தயாராக இருப்பதாக கூறியிருந்தார். இந்த சூழலில், தாயை இழந்த பிறகு தனிமையில் தவித்து வந்த மார்டின்ஸ், இதன் மூலம் தனக்கு புதிய வாழ்க்கை கிடைக்கும் என நம்பி அந்த பெண்ணை நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளார்.
இதற்காக கடந்த அக்டோபர் 09 ஆம் தேதி தனது உடைமைகளை விற்று பணத்தை திரட்டினார். பின்னர், பிரேசிலின் மினாஸ் ஜெரைஸ் மாநிலத்தின் தலைநகரான பெலோ ஹொரிசோண்டே நகருக்கு பேருந்தில் ஒரு நாளுக்கு மேலாக பயணம் செய்து அக்டோபர் 11 ஆம் தேதி சென்றடைந்தார்.
தன்னுடன் வாழப்போகும் பெண்ணைச் சந்திக்கும் எதிர்பார்ப்புடன் அவரது புகைப்படங்களை எடுத்துக்கொண்டு நகரின் பல இடங்களில் மார்டின்ஸ் தேடியுள்ளார். அங்கிருந்தவர்களிடம் புகைப்படத்தைக் காட்டி அந்தப் பெண்ணைப் பற்றி விசாரித்தபோதும், யாராலும் அவரை அடையாளம் காண முடியவில்லை.
இதையடுத்து, அவர் அங்குள்ள வானொலி நிலையம் ஒன்றை அணுகியுள்ளார். அப்போதுதான், தான் தேடிவந்த பெண் உண்மையில் ஒரு பெண்ணே இல்லை என்பதும், சமூக வலைதள கணக்கில் பயன்படுத்தப்பட்ட உருவம் AI மூலம் உருவாக்கப்பட்டது என்பதும் அவருக்கு தெரியவந்தது.
இது குறித்து மார்டின்ஸ் கூறுகையில், “இது சோகம், நம்பிக்கையின்மை மற்றும் மனச்சோர்வைத்தான் ஏற்படுத்துகிறது. பலரும் ஒரு துணையைத் தேடிக்கொண்டிருந்தனர். நானும் அந்த நம்பிக்கையில்தான் இங்கு வந்தேன்” என்றார்.
இந்த நிலையில், அந்த அக்கவுண்ட்டை உருவாக்கியவர் அதில் பயன்படுத்தப்பட்ட புகைப்படம் ai மூலம் உருவாக்கியவை என ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், மார்டின்ஸுடன் நேரடியாக பேசியதில்லை. அவர் இப்படி வந்திருப்பது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது என தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
பயணத்துக்காக தனது உடைமைகளை விற்று வந்த மார்டின்ஸ், ஏமாற்றத்தை சந்தித்ததுடன் நகரில் தங்குவதற்கும் சிரமப்பட்டுள்ளார். இதையடுத்து, உள்ளாட்சி நிர்வாகத்திடம் உதவி கோரியுள்ளார். அவருக்கு உணவு, குளிப்பதற்கான வசதி மற்றும் நகரிலிருந்து வெளியேறுவதற்கான பேருந்து டிக்கெட் உள்ளிட்ட உதவிகள் சமூக பணியாளர்கள் மூலம் வழங்கப்பட்டன.
இத்தனைக்கும் பிறகும், வாழ்க்கை துணையை தேடும் நம்பிக்கையை மார்டின்ஸ் கைவிடவில்லை. தற்போது உறவினர் ஒருவருடன் தங்கியிருக்கும் அவர், மீண்டும் பெலோ ஹொரிசோண்டே சென்று தனக்கு பொருத்தமான ஒருவரை சந்திக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
“அந்தப் பெண்ணை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், வேறொருவரை கண்டுபிடிப்பேன். நான் சென்ற அதே இடத்திற்குத் திரும்பி செல்வேன்” என்று அவர் கூறியுள்ளார்.