Explained | டிரம்பை பதவியில் இருந்து நீக்க முடியுமா? அமெரிக்காவில் இம்பீச்மென்ட் சட்டம் என்ன சொல்கிறது?
Trump Impeachment Explained: அமெரிக்காவில் ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்கும் நடைமுறை மிகவும் சிக்கலானது. கீழவையான ஹவுஸ் ஆஃப் ரெப்ரஸென்டேட்டிவ்ஸில் இம்பீச்மென்ட் நிறைவேறினாலும், செனட்டில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு கிடைத்தால் மட்டுமே ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்கப்பட முடியும். டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே இருமுறை இம்பீச்மென்ட் செய்யப்பட்டிருந்தாலும், செனட்டில் போதுமான ஆதரவு கிடைக்காததால் பதவியில் தொடர்ந்தார்.
அமெரிக்க மிட்-டெர்ம் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சியான டெமோக்ராட்கள் வலுப்பெற்றுள்ள நிலையில், டொனால்ட் டிரம்புக்கு எதிராக மீண்டும் இம்பீச்மென்ட் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அமெரிக்க சட்டப்படி ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்குவது வெறும் பெரும்பான்மை ஆதரவால் மட்டுமே சாத்தியமில்லை. அதற்கான நடைமுறை என்ன, டிரம்பை நீக்குவது ஏன் கடினம், இதற்கு முன்பு என்ன நடந்துள்ளது என்பதை விரிவாக பார்க்கலாம்.
அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்வு முறை எப்படி செயல்படுகிறது?
இந்தியாவில் மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்கிறார்கள். அந்த உறுப்பினர்கள் மூலம் பிரதமர் தேர்வு செய்யப்படுகிறார். ஆனால் அமெரிக்காவில் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனித்தனியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதனால் ஜனாதிபதி ஒரு கட்சியைச் சேர்ந்தவராகவும், காங்கிரஸில் பெரும்பான்மை மற்றொரு கட்சியிடமும் இருக்கலாம்.
அமெரிக்க காங்கிரஸில் இரண்டு அவைகள் உள்ளன
- பிரதிநிதிகள் சபை
- Senate (மேலவை)
கீழவை உறுப்பினர்கள் 2 ஆண்டுகளுக்கும், செனட் உறுப்பினர்கள் 6 ஆண்டுகளுக்கும் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஜனாதிபதியின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் ஆகும்.
இம்பீச்மென்ட் என்றால் என்ன?
பலர் நினைப்பது போல, இம்பீச்மென்ட் என்பது ஜனாதிபதியை நேரடியாக பதவியில் இருந்து நீக்குவது அல்ல. இம்பீச்மென்ட் என்பது ஜனாதிபதிக்கு எதிராக அதிகாரப்பூர்வ குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் சட்ட நடைமுறையாகும்.
மேலும் படிக்க - Explained: அமெரிக்க அதிபரின் Veto அதிகாரம்... டிரம்பால் என்ன செய்ய முடியும்?
இம்பீச்மென்ட் எப்பொழுது கொண்டு வரலாம்?
- தேசத்துரோகம்
- லஞ்சம் பெற்றல்
- அதிகார துஷ்பிரயோகம்
- பொதுமக்களின் நம்பிக்கையை மோசடி செய்தல்
- கடமைகளைப் பெரிதும் அலட்சியம் செய்தல்
- போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இம்பீச்மென்ட் தொடங்கலாம்.
ஜனாதிபதிக்கு எதிராக இம்பீச்மென்ட் எப்படி தொடங்கப்படுகிறது?
முதலில் கீழவையான ஹவுஸ் ஆஃப் ரெப்ரஸென்டேட்டிவ்ஸ் விசாரணை நடத்தும். அதில் சாட்சிகள் விசாரிக்கப்படுவார்கள், ஆவணங்கள் ஆய்வு செய்யப்படும், குற்றச்சாட்டுகள் பரிசீலிக்கப்படும், பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்படும்.
435 உறுப்பினர்களில் சாதாரண பெரும்பான்மை கிடைத்தால், ஜனாதிபதி "Impeached" என அறிவிக்கப்படுவார். அதாவது அவர்மீது குற்றச்சாட்டுகள் அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டதாக அர்த்தம்.
இம்பீச்மென்ட் ஆன பிறகு என்ன நடக்கும்?
இதுவே மிக முக்கியமான கட்டமாகும். கீழவை இம்பீச்மென்ட் தீர்மானத்தை நிறைவேற்றிய பிறகு, வழக்கு செனட்டிற்கு அனுப்பப்படும். அங்கு தான் அமெரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் விசாரணை நடக்கும். ஜனாதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் விவாதிக்கப்படும். இறுதியாக வாக்கெடுப்பு நடத்தப்படும்.
ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்க 100 செனட் உறுப்பினர்களில் குறைந்தபட்சம் 67 உறுப்பினர்கள் ஆதரிக்க வேண்டும் அதாவது இரண்டு-மூன்றாம் பங்கு வாக்குகள் அவசியம்.
தற்போதைய சூழலில் டிரம்பை பதவி நீக்கம் செய்ய முடியுமா?
கீழவையில் டெமோக்ராட்களுக்கு பெரும்பான்மை இருப்பதால், டிரம்புக்கு எதிராக இம்பீச்மென்ட் தீர்மானத்தை கொண்டு வருவது சாத்தியமாக இருக்கலாம். ஆனால் உண்மையான சவால் செனட்டில்தான் உள்ளது.
டிரம்பை பதவியில் இருந்து நீக்க டெமோக்ராட்களின் ஆதரவு மட்டும் போதாது, பல குடியரசுக் கட்சி (Republican) செனட்டர்களும் எதிராக வாக்களிக்க வேண்டும். அதனால் சட்ட ரீதியாக இது சாத்தியமானதாக இருந்தாலும், அரசியல் ரீதியாக அது மிகவும் சவாலான ஒன்றாகக் கருதப்படுகிறது.
அமெரிக்காவில் இதற்கு முன்பு எந்த ஜனாதிபதிகள் இம்பீச் செய்யப்பட்டுள்ளனர்?
அமெரிக்க வரலாற்றில் இதுவரை சில ஜனாதிபதிகள் மட்டுமே இம்பீச்மென்ட் நடவடிக்கையை சந்தித்துள்ளனர். ஆண்ட்ரூ ஜான்சன், பில் கிளிண்டன் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகிய மூன்று பேருக்கும் எதிராக இம்பீச்மென்ட் நடவடிக்கை கொண்டு வரப்பட்டது. ஆனால் செனட்டில் தேவையான இரண்டு-மூன்றாம் பங்கு ஆதரவை எதிர்ப்பாளர்கள் பெறாததால், அவர்களை நீங்க முடியவில்லை, மாறாக பதவியில் தொடர்ந்தனர்.
ஆண்ட்ரூ ஜான்சன் (1868)
அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக இம்பீச்மென்ட் செய்யப்பட்ட ஜனாதிபதி.
பில் கிளிண்டன் (1998)
சட்ட சிக்கல்களைத் தொடர்ந்து அவர்மீது இம்பீச்மென்ட் கொண்டு வரப்பட்டது.
டொனால்ட் டிரம்ப் (2019 மற்றும் 2021)
அமெரிக்க வரலாற்றில் இரு முறை இம்பீச்மென்ட் நடவடிக்கையை சந்தித்த ஒரே ஜனாதிபதி டிரம்ப்தான்.
ரிச்சர்ட் நிக்சன் வழக்கு ஏன் முக்கியமானது?
1974-ஆம் ஆண்டு வாட்டர்கேட் ஊழல் விவகாரத்தில் ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனுக்கு எதிராக இம்பீச்மென்ட் நடவடிக்கை தொடங்கப்பட இருந்தது. ஆனால் முழு வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பே அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதன் காரணமாக அவர் மீது முழுமையான இம்பீச்மென்ட் தீர்ப்பு வழங்கப்படவில்லை.
அமெரிக்காவில் கட்சி மாறி வாக்களிக்க முடியுமா?
இந்தியாவில் 'விப்' உத்தரவை மீறி வாக்களித்தால் உறுப்பினர் பதவி இழக்கும் அபாயம் உள்ளது. ஆனால் அமெரிக்காவில் அப்படி இல்லை. அங்கு எம்.பி.க்கள் தங்கள் சுய விருப்பப்படி வாக்களிக்கலாம். கட்சிக்கு எதிராக வாக்களித்தாலும் உறுப்பினர் பதவி பறிக்கப்படாது மற்றும் சட்ட ரீதியான தண்டனையும் இல்லை. இதனால் குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் டிரம்புக்கு எதிராக வாக்களிக்க சட்டத் தடையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் பதவிக்கு ஆபத்து உள்ளதா?
கோட்பாட்டில் பார்த்தால், டெமோக்ராட்கள் கீழவையில் குற்றச்சாட்டுகளை நிறைவேற்ற முடியும். ஆனால் செனட்டில் 67 வாக்குகளைப் பெறுவது மிகப் பெரிய சவாலாகவே உள்ளது. அதற்கு கணிசமான எண்ணிக்கையிலான குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் டிரம்புக்கு எதிராக நிற்க வேண்டியிருக்கும்.
இதுவரையிலான அமெரிக்க அரசியல் வரலாறு பார்க்கும்போது, ஒரு ஜனாதிபதியை இம்பீச்மென்ட் மூலம் பதவியில் இருந்து நீக்குவது மிகவும் அரிதான மற்றும் கடினமான செயல்முறையாகவே இருந்து வருகிறது.