SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

இஸ்ரேலில் ஆட்சி அமைக்கும் புதிய திட்டம்: எதிர்க்கட்சியுடன் கைகோர்க்கும் நெதன்யாகு?

இஸ்ரேல் அரசியலில் மீண்டும் கூட்டணி கணக்குகள் தீவிரமடைந்துள்ளன. நெதன்யாகுவின் வலதுசாரி கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால், எதிர்க்கட்சி தலைவர் காடி ஐசென்கோட்டை இணைத்து தேசிய ஒற்றுமை அரசு அமைக்கும் வாய்ப்பு குறித்து ஆலோசனைகள் நடைபெறுகின்றன. அதே நேரத்தில், 19 இடங்கள் பெறக்கூடிய அரபுக் கட்சிகள் கிங்மேக்கர் நிலையில் உருவெடுத்துள்ளன. அடுத்த அரசை தீர்மானிக்கும் முக்கிய கட்டத்தை இஸ்ரேல் அரசியல் சந்தித்து வருகிறது.

Written By Shiva Murugesan
Published: Oct 29, 2026, 04:42 PM IST | Updated: Oct 29, 2026, 04:49 PM IST
Join

இஸ்ரேல் அரசியலில் மீண்டும் கூட்டணி அரசை மையமாகக் கொண்ட பரபரப்பு உருவாகியுள்ளது. 2026 நாடாளுமன்றத் தேர்தலில் முழுமையான பெரும்பான்மையைப் பெற முடியாத சூழலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஆட்சியில் தொடர புதிய அரசியல் வழிகளை ஆராய்ந்து வருகிறார். குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் காடி ஐசென்கோட்டை இணைத்துக்கொண்டு தேசிய ஒற்றுமை அரசை அமைக்கும் சாத்தியம் குறித்து தீவிர ஆலோசனைகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏன் பெரும்பான்மை அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது?

120 உறுப்பினர்களைக் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றமான க்னெசெட்டில் ஆட்சி அமைக்க குறைந்தது 61 இடங்கள் தேவைப்படுகிறது. ஆனால் இஸ்ரேல் தேர்தல் முடிவுகளின் கணிப்புகளின்படி, நெதன்யாகுவின் வலதுசாரி கூட்டணிக்கு சுமார் 53 இடங்களும், காடி ஐசென்கோட் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கு 48 இடங்களும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அரபு கட்சிகளின் கூட்டணிகள் 19 இடங்களைப் பெறக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கைகள் எந்த அரசியல் அணிக்கும் தனித்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பை வழங்காததால், கூட்டணி பேச்சுவார்த்தைகள் இஸ்ரேல் அரசியலின் முக்கிய அம்சமாக மாறியுள்ளன.

நெதன்யாகுவின் தேசிய ஒற்றுமை அரசு திட்டம்

அரசியல் முட்டுக்கட்டையை உடைக்க நெதன்யாகு தனது பாரம்பரிய வலதுசாரி கூட்டணியைத் தாண்டி, எதிர்க்கட்சியினருடனும் இணைந்து ஆட்சி அமைக்கும் திட்டத்தை பரிசீலித்து வருகிறார். குறிப்பாக பாதுகாப்பு துறையில் முக்கிய அனுபவம் கொண்ட காடி ஐசென்கோட்டின் ஆதரவைப் பெற முயற்சிகள் நடைபெறுகின்றன.

ஆனால் ஐசென்கோட் ஏற்கனவே நெதன்யாகு தலைமையிலான அரசில் பணியாற்ற விருப்பமில்லை என வெளிப்படையாக தெரிவித்திருந்தார். இருந்தாலும் அரசியல் கணக்கீடுகள் காரணமாக சில மாற்று வாய்ப்புகள் குறித்து விவாதங்கள் தொடர்கின்றன.

மேலும் படிக்க - நெதன்யாகு vs ஐசென்கோட்: இஸ்ரேல் தேர்தல் யாருக்கும் பெரும்பான்மை இல்லை! செக் வைக்கும் அரபு கட்சிகள் -Explained

பரிசீலனையில் இருக்கும் இரண்டு முக்கிய விருப்பங்கள்

தேசிய ஒற்றுமை அரசு உருவானால் இரண்டு முக்கிய மாதிரிகள் நடைமுறைக்கு வரலாம் என கூறப்படுகிறது.

முதல் திட்டத்தின் படி, அரசின் முதல் பாதியில் நெதன்யாகு பிரதமராக செயல்படுவார். பின்னர் பதவியை காடி ஐசென்கோட்டிடம் ஒப்படைக்கும் ரோட்டேஷன் ஒப்பந்தம் அமல்படுத்தப்படலாம். இதன் மூலம் இரு தரப்பினருக்கும் அதிகாரப் பகிர்வு உறுதி செய்யப்படும்.

இரண்டாவது திட்டத்தில், முழு ஆட்சிக் காலத்திலும் நெதன்யாகு பிரதமராகவே தொடருவார். அதற்குப் பதிலாக ஐசென்கோட்டுக்கு முக்கியமான அமைச்சரவை பொறுப்புகளில் ஒன்றை வழங்கும் வாய்ப்பு உள்ளது. இரு திட்டங்களிலும் எதிர்க்கட்சிக்கு அரசில் கணிசமான பங்கு வழங்கப்படுவது முக்கிய அம்சமாகும்.

முக்கிய கட்சிகளின் நிலைப்பாடு

அரசியல் அணி 

எதிர்பார்க்கப்படும் இடங்கள்

நிலை

நெதன்யாகு தலைமையிலான வலதுசாரி கூட்டணி53தனித்து ஆட்சி அமைக்க முடியாது
காடி ஐசென்கோட் தலைமையிலான எதிர்க்கட்சி48கூட்டணி அவசியம்
அரபு கட்சிகள்19கிங்மேக்கர்

அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் கட்சிகள் ஏன் புறக்கணிக்கப்படுகின்றன?

புதிய கூட்டணி அரசில் ஆரம்ப கட்டத்தில் அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் யூத கட்சிகள் இடம்பெறாமல் இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதற்குக் காரணம் கட்டாய ராணுவ சேவை தொடர்பான சர்ச்சையாகும்.

பல ஆண்டுகளாக சில மதசார்பான யூத ஆண்களுக்கு ராணுவ சேவையில் விலக்கு வழங்கப்பட்டு வந்தது. இது இஸ்ரேலில் பெரும் அரசியல் மற்றும் சமூக விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கட்சிகளை ஆரம்பத்தில் வெளியே வைத்தால் ராணுவ ஆட்சேர்ப்பு தொடர்பான சட்டங்களை எளிதாக கொண்டு வர முடியும் என நெதன்யாகுவின் கூட்டாளிகள் கருதுகின்றனர்.

ஐசென்கோட்டுக்கு உள்ள அரசியல் சிக்கல்

காடி ஐசென்கோட் நெதன்யாகுவுடன் இணைவது அவருக்கே அரசியல் சவாலாக மாறக்கூடும். தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் தற்போதைய தலைமையை கடுமையாக விமர்சித்திருந்தார். அந்த நிலையில் தற்போது கூட்டணி அமைத்தால் அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தி உருவாக வாய்ப்பு உள்ளது.

மேலும் கூட்டணியில் இடம்பெறக்கூடிய இதாமார் பென்-க்விர் மற்றும் பெசலெல் ஸ்மோட்ரிச் போன்ற கடுமையான வலதுசாரி தலைவர்களுடன் இணைந்து செயல்படுவதும் ஐசென்கோட்டின் அரசியல் அடையாளத்திற்கு சவாலாக இருக்கலாம்.

அரபு கட்சிகள் ‘கிங்மேக்கர்’ ஆகுமா?

தற்போதைய கணிப்புகளின் அடிப்படையில் அரபு கட்சிகளின் ஆதரவு இஸ்ரேல் அரசியல் சமநிலையை தீர்மானிக்கக்கூடிய முக்கிய காரணியாக மாறியுள்ளது. எதிர்க்கட்சிகள் அவர்களுடன் இணைந்தால் 61 இடங்களை எளிதாக தாண்டும் வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் இந்த பாதையும் எளிதானது அல்ல. அரபு கட்சிகளின் ஆதரவுடன் சிறுபான்மை அரசு அமைப்பதில் ஐசென்கோட் முன்னர் தயக்கம் காட்டியுள்ளார். அதேபோல் நெதன்யாகுவும் இத்தகைய ஏற்பாடுகளை ஏற்கும் மனநிலையைக் காட்டவில்லை. இதனால் அரபு கட்சிகள் முக்கிய பங்கு வகித்தாலும், அவர்களை மையமாகக் கொண்ட கூட்டணி உருவாகுமா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

நெதன்யாகுவின் புதிய அரசியல் வியூகம்

எந்த அரசியல் அணிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நீளலாம். இறுதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சோக் அனைத்து கட்சித் தலைவர்களுடனும் ஆலோசனை நடத்துவார். யாருக்கு அரசு அமைக்கும் அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதை அவர் மதிப்பீடு செய்து பொறுப்பு வழங்குவார். அதுவரை நெதன்யாகு இடைக்கால பிரதமராக தொடருவார் என இஸ்ரேல தேர்தலை கணிக்கும் வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.

மேலும் படிக்க - Israel Election Result 2026: யாருக்கும் பெரும்பான்மை இல்லை! இஸ்ரேலில் 'கிங்மேக்கர்' ஆன அரபுக் கட்சிகள்

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

டிஜிட்டல் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த செய்தி நிபுணர் மற்றும் இதழாளர். தரவு அடிப்படையிலான செய்திகள் (Data-driven news), எஸ்சிஓ (SEO) உத்திகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி மேலாண்மையில் (Digital Growth Management) நிபுணத்துவம் பெற்றவர். தற்போது முன்னணி ஊடக நிறுவனத்தில் செய்தி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்களை வழிநடத்தி வருகிறார்.

ZEENEWS TRENDING STORIES