Nepal Flash Floods : நேபாளம் - திபெத் எல்லை பகுதியில் நேற்று (ஆக. 26) காலை திடீரென ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுமார் 157 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும்; நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளம் போலீசார் இதுவரை 157 உடல்களை கைப்பற்றி உள்ளனர். அதேநேரத்தில், வெள்ள ஆபத்து கொண்ட பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
நேபாளத்திற்கு கைலாஷ் மானசரோவர் ஆன்மீகச் சுற்றுலாவுக்குச் சென்று 133 இந்தியர்களும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டு பல மணிநேரம் கடந்தும், 341 வெளிநாட்டவர் உள்பட 403 சுற்றுலா பயணிகளின் நிலை என்னவென்றே தெரியவில்லை என நேபாள சுற்றுலாத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
VIDEO | Massive flash floods in a border area of Nepal and China on Wednesday killed at least 160 people and left hundreds of tourists, workers and others missing after sweeping through communities and bringing travel in some areas to a halt. Experts said an avalanche from a… pic.twitter.com/2oHc19FylR
— Press Trust of India (@PTI_News) August 26, 2026
சுற்றுலாத்துறையின் தகவல்படி, காணாமல் போன வெளிநாட்டவர்களில் 142 இந்தியர்கள் அடக்கம். மேலும், இங்கிலாந்து, நெதர்லாந்து, போர்ச்சுகல், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாள பிரதமர் பலேந்திரா ஷா உத்தரவின்பேரில் தீவிரமாக மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உயிருக்கு போராடி வருபவர்களை காப்பாற்றுவதும்; மண்ணுக்குள் புதைத்திருக்கும் உடல்களை மீட்பதும் என ஓய்வின்றி நேபாள மீட்புப்பணியினர் பணியாற்றி வருகின்றனர்.
நேபாளத்தின் உள்ளூர் நேரப்படி நேற்று (ஆக. 26) காலை 9 மணியளவில் போட்டே கோஷி ஆற்றில் திடீரென நீர் வரத்து அதிகமாகி உள்ளது. திபெத் பகுதியில் இருந்து ஆற்றின் கீழ் பகுதிக்குள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திபெத் - நேபாளம் எல்லையில் அமைந்துள்ள ரசுவா மற்றும் தாடிங் பகுதியிலும், நுவாகோட் பகுதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
நேபாளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒட்டுமொத்த குடியிருப்புகளும், கட்டமைப்புகளும் தரைமட்டமாகியிருப்பதாக அங்கு மீட்புப் பணியாற்றுபவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியா சார்பில் இருந்து நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. விமானப்படையின் போக்குவரத்து விமானத்தில் 10 டன் நிவாரணப் பொருள்கள் மற்றும் மருந்துகள் கொண்டுசெல்லப்பட்டன.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவரது X பதிவில், "பிரதமர் பாலேந்திர ஷாவுடன் நான் தொலைபேசியில் பேசியதோடு, நேபாளத்தை தாக்கிய வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்கு எனது இரங்கலையும் தெரிவித்தேன்.
இக்கட்டான நேரத்தில் இந்திய மக்கள் நேபாளத்தில் உள்ள தங்கள் சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமையாக நிற்பார்கள். நேபாளத்திற்கு சாத்தியமான அனைத்து வகையான மனிதாபிமான உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது. நமது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் குழுக்கள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன" என பதிவிட்டிருந்தார்.
இதற்கு சமூக வலைதளப்பதிவில் நேபாள பிரதமர் பாலேந்திர ஷா, நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். "இந்த கடினமான காலகட்டத்தில் நேபாளத்திற்கு நீங்கள் காட்டிய அன்பான ஆதரவு வார்த்தைகளையும், தாராளமான உதவியையும் நாங்கள் மனதார பாராட்டுகிறோம். இந்த செயலானது, நாம் பெரிதும் மதிக்கும் நமது இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த நட்புறவின் பிரதிபலிப்பாகும்" என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்தும் சிலர் நேபாளத்திற்கு ஆன்மீகச் சுற்றுலாவுக்கு சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினர் உதவிக்கு உடனடியாக தொடர்புகொள்ள அவரச உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவிற்குள் (Toll Free): 1800 309 3793
வெளிநாடு (Missed Call): +91 80 6900 9900
மேலும் தொடர்புக்கு: +91 80 6900 9901
டெல்லி தமிழ்நாடு இல்லம் (கட்டுப்பாட்டு அறை): 92895 16712