விலகினார் ஜென்சன் ஹுவாங்... Nvidia அடுத்த சிஇஓ யார்? ரேஸில் இருக்கும் ஜெய் பூரி யார்?
திருமணத்தை மீறிய உறவு சர்ச்சைகளால் Nvidia சிஇஓ பொறுப்பில் இருந்து ஜென்சன் ஹுவாங் விலகி உள்ள நிலையில், அடுத்த தலைமைச் செயல் அதிகாரி போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜெய் பூரியின் பெயர் அடிபடுகிறது. அவர் யார்...? இந்த விவகாரம் குறித்து விரிவாக இங்கு காணலாம்.
அமெரிக்க சிப் தயாரிக்கும் Nvidia நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஜென்சன் ஹுவாங் தான் உலகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பேசுபொருளாக இருந்து வருகிறார்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப உலகில் முன்னணி நிறுவனமாகாத் திகழும் இந்த ஜென்சன் ஹுவாங் பெரிய சர்ச்சையில் சிக்கி உள்ளார். அவர் சீன உளவாளி என சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரை திருமணத்தை தாண்டிய உறவில் இருந்ததாக சர்ச்சை எழுந்தது.
அதை தொடர்ந்து, Nvidia நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியான கிம்பர்லி பவலுடன் ஜென்சன் தொடர்பில் இருந்ததாக மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இவை குற்றச்சாட்டுகளாகவே உள்ளன. இதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது. சர்ச்சையின் பின்னணி இங்கு காணலாம்.
சர்ச்சையின் பின்னணி
- சீன உளவுத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படும் ஆலிஸ் ஹுவாங் என்ற பெண்ணுடன் ஜென்சன் ஹுவாங்கிற்கு தொடர்பு இருந்ததாக அமெரிக்க உளவுத்துறை கண்டறிந்ததாக The New York Times செய்தி வெளியிட்டிருந்தது.
- ஜென்சன் - ஆலிஸ் இடையே இருந்த தொடர்பு குறித்து Nvidia நிர்வாகக் குழு விசாரணை நடத்தி வருகிறது. அதேநேரத்தில் FBI அமைப்பும் இதுகுறித்து விசாரணை நடத்தும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.
- இதற்கிடையே தனது மனைவிக்குத் துரோகம் இழைத்ததை ஜென்சன் ஹுவாங் ஊழியர்களிடம் ஒப்புக்கொண்டதாகவும், அவரைப் பதவியில் இருந்து நீக்க நிர்வாகக் குழு தயாராகி வருவதாகவும் Wall Street Journal செய்தி வெளியிட்டுள்ளது.
- Nvidia நிறுவனத்தின் நடத்தை விதிகளின்படி, உயரதிகாரிகளுக்கும் நேரடியாக அவர்களின் கீழ் பணியாற்றுபவர்களுக்கும் இடையிலான தனிப்பட்ட உறவுகள் Conflict of Interest உருவாக்கும் என்பதால், கிம்பர்லி பவல் விவகாரம் தற்போது தீவிர விவாதத்திற்கு உள்ளாகி உள்ளது. இந்த சர்ச்சைகளால் Nvidia நிறுவனத்தின் பங்குகள் சுமார் 3 சதவீதம் வரை சரிந்துள்ளன.
பதவி விலகிய ஜென்சன்... புதிய சிஇஓ யார்...?
- தன் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து ஜென்சன் ஹுவாங் இன்று Nvidia சிஇஓ பொறுப்பில் இருந்து விலகினார். அதேநேரத்தில், Nvidia நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் ஜென்சன் நீடிக்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அதேநேரத்தில், அந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கோலெட் கிரெஸ் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Nvidia வெளியிட்ட அறிக்கையில், "நிர்வாக குழு ஒரு நிரந்தர தலைமை செயல் அதிகாரியை தேடும் பணியைத் தொடங்கி உள்ளது. மேலும், நிறுவனத்தில் பணியாற்றும் நபர்கள் மற்றும் வெளி நபர்களையும் அந்த பொறுப்புக்கு பரிசீலிக்கும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த சிஇஓ யார்...?
இந்நிலையில், ஜென்சன் ஹுவாங் இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ள Nvidia நிறுவனத்தின் அடுத்த சிஇஓ குறித்த விவாதமும் தொடங்கி உள்ளது.
அதில் Nvidia நிறுவனத்தின் தற்போதைய சிஎஃப்ஓ மற்றும் இடைக்கால சிஇஓ பொறுப்பையும் கவனித்து வரும் கோலெட் கிரெஸ், Nvidia நிறுவனத்தின் hyperscale மற்றும் HPC பிரிவுகளின் துணைத் தலைவர் இயான் பக் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன.
Nvidia நிறுவனத்திற்கு வெளியே இருக்கும் சில முக்கிய தொழில்துறை நிர்வாகிகளின் பெயர்களும் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக Arm நிறுவனத்தின் சிஇஓ ரெனே ஹாஸ் பெயரும் பேசப்படுகிறது.
அதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜெய் பூரி என்பவரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. யார் இந்த ஜெய் பூரி என்பதை இங்கு விரிவாக காணலாம்.
யார் இந்த ஜெய் பூரி?
அஜய் கே. பூரி என்பது இவரது முழுப் பெயராகும். இவர் கடந்த 2005ஆம் ஆண்டு Nvidia நிறுவனத்தில் உலகளாவிய விற்பனைப் பிரிவின் மூத்தத் தலைவராக இணைந்தார். பின்னர் நிறுவனத்தின் உலகளாவிய செயல்பாடுகளுக்கான செயல் துணை தலைவராக பதவி உயர்வை பெற்றார்.
Nvidia நிறுவனத்தில் 21 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றிய இவர், கடந்த 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி தனது நிர்வாகப் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றார். இருப்பினும், நிறுவனத்தின் மூத்த ஆலோசகராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கல்வித் தகுதி என்ன?
- ஜெய் பூரி பொறியியல் மற்றும் நிர்வாகத் துறைகளில் வலுவான கல்விப் பின்னணியைக் கொண்டவர்.
- அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் மின்பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
- தொடர்ந்து கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தில் (Caltech) மின்பொறியியலில் முதுகலைப் பட்டமும், ஹார்வர்டு வணிகப் பள்ளியில் எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார்.
Nvidia நிறுவனத்தில் இவரது பங்களிப்பு என்ன?
- Nvidia நிறுவனத்தில் பணியாற்றிய காலத்தில் உலகளாவிய விற்பனை, வணிக மேம்பாடு, வாடிக்கையாளர் உறவுகள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை கவனித்து வந்தார்.
- இதற்கு முன்பு, சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தில் 22 ஆண்டுகள் பணியாற்றி உள்ளனர். அங்கு ஆசிய - பசிபிக் பிரிவு உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பரிவுகளில் மூத்த நிர்வாகப் பொறுப்புகளை வகித்தார்.
- மேலும், ஹெவ்லெட் பேக்கார்டு, பூஸ் ஆலன் ஹாமில்டன், டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் நிறுவனங்களிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
ஜென்சன் ஹுவாங்கின் இடத்தைப் பிடிப்பாரா?
Nvidiya நிறுவனத்தின் உலகளாவிய வணிகச் செயல்பாடுகளை நீண்டகாலமாக நிர்வகித்த அனுபவம் ஜெய் பூரிக்கு உள்ளது. இதனால், அடுத்த தலைமைச் செயல் அதிகாரிக்கான சாத்தியமான பெயர்களில் ஒருவராக அவர் பேசப்படுகிறார்.
இருப்பினும், ஜென்சன் ஹுவாங்குக்குப் பதிலாக ஜெய் பூரி நியமிக்படுவார் என்று Nvidia நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனவே, அவரது அடுத்த சிஇஓ பட்டியலில் இடம்பெறுவது தற்போதைக்கு ஊகமாகவே பார்க்கப்படுகிறது.