புல்லட் ரயில் B28: சென்னைக்கும் வருது.. சிறப்பம்சங்கள் என்னென்ன? Explained
India Bullet Train Features: இந்தியாவில் தயாராகும் B28 புல்லட் ரயில் மணிக்கு 280 கி.மீ வேகத்தில் சோதனை செய்யப்பட உள்ளதுடன், 557 பயணிகள் பயணிக்கும் வகையில் நவீன வசதிகளுடன் உருவாக்கப்படுகிறது.
இந்தியாவில் அதிவேக ரயில் போக்குவரத்தை அறிமுகப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வரும் B28 புல்லட் ரயில் விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கின்றன. மும்பை – அகமதாபாத் இடையிலான அதிவேக ரயில் வழித்தடத்தில் இயக்கப்பட உள்ள இந்த ரயில், மணிக்கு அதிகபட்சமாக 280 கி.மீ வேகத்தில் சோதனை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் வசதி, பாதுகாப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல் வசதி, எரிசக்தி சேமிப்பு என பல்வேறு நவீன அம்சங்களுடன் இந்த ரயில் உருவாக்கப்படுகிறது.
B28 புல்லட் ரயில் எங்கு தயாரிக்கப்படுகிறது?
இந்திய ரயில்வேயின் B28 புல்லட் ரயில், பெங்களூருவில் உள்ள BEML நிறுவனத்தின் ஆதித்யா ஆலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. மும்பை – அகமதாபாத் அதிவேக ரயில் வழித்தடத்தில் இயக்குவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
8 பெட்டிகள்.. 557 பயணிகள் பயணம் செய்யலாம்
இந்த ரயில் அதிகபட்சமாக மணிக்கு 280 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. வழக்கமான செயல்பாட்டு வேகம் மணிக்கு 249 கி.மீ என திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில் ஒரே நேரத்தில் சுமார் 557 பயணிகள் பயணம் செய்ய முடியும்.
B28 ரயில் சுமார் 202 மீட்டர் நீளம் கொண்டது. இதில் 4 மோட்டார் பெட்டிகளும், 4 டிரெய்லர் பெட்டிகளும் இடம்பெற்றுள்ளன. மொத்தமுள்ள 8 பெட்டிகளில் 7 பெட்டிகள் சாதாரண வகுப்பாகவும், ஒரு பெட்டி எக்ஸிகியூட்டிவ் வகுப்பாகவும் இருக்கும்.
சாதாரண வகுப்பில் 3+2 என்ற இருக்கை அமைப்பும், எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் 2+2 என்ற இருக்கை அமைப்பும் வழங்கப்பட உள்ளன. மாற்றுத்திறனாளிகள் தனியாக பயணம் செய்யும் வகையில் இடவசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தால், இரண்டு 8 பெட்டிகள் கொண்ட ரயில் தொகுப்புகளை இணைத்து 16 பெட்டிகள் கொண்ட ரயிலாக இயக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
வைஃபை உள்ளிட்ட நவீன வசதிகள்?
ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தேவையான தகவல்களை வழங்குவதற்காக நவீன பயணிகள் தகவல் அமைப்பு இடம்பெறுகிறது. பெட்டிகளுக்குள் பொருத்தப்படும் LCD திரைகளில் ஆங்கிலம், இந்தி மற்றும் பிராந்திய மொழிகளில் தகவல்கள் ஒளிபரப்பப்படும். ஒலிபெருக்கி மற்றும் தானியங்கி அறிவிப்பு அமைப்புகள் மூலமாகவும் பயணிகளுக்கு அறிவிப்புகள் வழங்கப்படும்.
அவசர காலங்களில் ரயில் ஊழியர்களை தொடர்புகொள்ளும் வகையில் பெட்டிகளிலும், பெட்டிகளுக்கு இடையிலான இணைப்பு பகுதிகளிலும் அவசரகால தகவல் தொடர்பு கருவிகள் பொருத்தப்படுகின்றன. இதுதவிர, வைஃபை அடிப்படையிலான பொழுதுபோக்கு வசதியும் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் ரயிலில் முன்கூட்டியே சேமிக்கப்பட்ட பொழுதுபோக்கு உள்ளடக்கங்களைப் பயணிகள் பார்க்க முடியும்.
ஒவ்வொரு முனையிலும் ஓட்டுநர் அறை அமைக்கப்பட்டு, அதில் நவீன உள்கட்டுப்பாட்டு அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயிலின் செயல்பாடுகளை கண்காணிப்பதுடன், கட்டுப்பாட்டு மையத்துடன் தகவல்களை பரிமாறிக்கொள்ளவும் முடியும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள்
மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் எளிதாகப் பயணம் செய்யும் வகையில் B28 ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரயிலின் தரைத்தளமும் நடைமேடையின் உயரமும் ஒரே அளவில் இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் ரயிலில் ஏறும்போதும் இறங்கும்போதும் ஏற்படும் சிரமம் குறையும்.
மேலும், ரயில் கதவுகளில் தானாக நீண்டு சுருங்கும் படிக்கட்டுகள் பொருத்தப்படுகின்றன. இதன் மூலம் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையிலான இடைவெளியை குறைக்க முடியும். சக்கர நாற்காலிகளை பயன்படுத்துவோர் எளிதாக செல்லும் வகையில் கதவுகள் வடிவமைக்கப்படுவதுடன், அவர்களுக்கான இருக்கை மற்றும் கழிப்பறை வசதிகளும் இடம்பெறுகின்றன.
மேலும், பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் தகவல்களை அறிந்துகொள்ளும் வகையில் பிரெய்லி எழுத்துகளுடன் கூடிய அறிவிப்பு பலகைகளும் அமைக்கப்பட உள்ளன.
ஏசி வசதி.. சத்தத்தை குறைக்கும் தொழில்நுட்பம்
ரயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் தலா இரண்டு ஏசி அலகுகள் பொருத்தப்பட உள்ளன. இதன் மூலம் பயணத்தின்போது பெட்டிகளுக்குள் தேவையான வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை பராமரிக்க முடியும்.
அதிவேகத்தில் ரயில் செல்லும்போது ஏற்படும் சத்தத்தை குறைப்பதற்காகவும் பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ரயிலின் உட்பகுதி மற்றும் தரைத்தளத்தில் ஒலி தடுப்பு வசதிகள், சத்தத்தை குறைக்கும் பூச்சுகள், சக்கர அமைப்புகளை சுற்றியுள்ள பாதுகாப்பு மூடிகள் உள்ளிட்டவை இடம்பெறுகின்றன. இதனால் பயணத்தின்போது சத்தம் குறைந்து, அமைதியான பயண அனுபவம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எரிசக்தியை சேமிக்கும் பிரேக்கிங் தொழில்நுட்பம்
B28 ரயில் 25 கிலோவோல்ட், 50 ஹெர்ட்ஸ் ஒற்றை கட்ட மின்சார இழுவை அமைப்பில் இயங்கும் வகையில் உருவாக்கப்படுகிறது. இதில் மறுஉற்பத்தி பிரேக்கிங் (Regenerative Braking) தொழில்நுட்பமும் இடம்பெறுகிறது.
இந்த தொழில்நுட்பத்தில் ரயில் பிரேக் செய்யப்படும்போது உருவாகும் ஆற்றலில் ஒரு பகுதி மீண்டும் மின்சாரமாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மின்சார பயன்பாட்டை குறைத்து, ரயிலின் செயல்திறனை மேம்படுத்த முடியும்.
காற்றின் எதிர்ப்பை குறைக்கும் ஏரோடைனமிக் வடிவமைப்பு
அதிவேகத்தில் ரயில் பயணிக்கும்போது காற்றின் எதிர்ப்பு அதிகமாக இருக்கும். இதை குறைப்பதற்காக B28 ரயிலின் முன்பகுதி மற்றும் வெளிப்புற வடிவமைப்பு நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
கணினி வழி திரவ இயக்கவியல் (Computational Fluid Dynamics - CFD) சோதனைகள் மூலம் ரயிலைச் சுற்றியுள்ள காற்றின் ஓட்டம் ஆய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் வடிவமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் காற்றின் எதிர்ப்பு, சுரங்கப்பாதைகளில் ஏற்படும் அழுத்த மாற்றங்கள் மற்றும் அதிக வேகத்தில் உருவாகும் சத்தம் ஆகியவற்றைக் குறைக்க முடியும் எனக் கூறப்படுகிறது.
இந்தியாவில் புதிதாக அறிவிக்கப்பட்ட 7 புல்லட் ரயில் வழித்தடங்கள் என்னென்ன?
2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மேலும் 7 புதிய புல்லட் ரயில் வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மும்பை – புனே
புனே – ஹைதராபாத்
ஹைதராபாத் – பெங்களூரு
ஹைதராபாத் – சென்னை
சென்னை – பெங்களூரு
டெல்லி – வாரணாசி
வாரணாசி – சிலிகுரி
இந்த வழித்தடங்கள் செயல்பாட்டுக்கு வந்தால், நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையிலான அதிவேக ரயில் போக்குவரத்து விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை – அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தின் நிலை என்ன?
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டமாக கருதப்படும் மும்பை – அகமதாபாத் அதிவேக ரயில் வழித்தடம் மொத்தம் 508 கி.மீ நீளம் கொண்டது. இந்த வழித்தடத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முன்னுரிமை அடிப்படையிலான ஒரு பகுதியை 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் B28 ரயில், இந்தத் திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்க உள்ளது. அதிக வேகம் மட்டுமின்றி, பயணிகளுக்கான நவீன வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல், எரிசக்தி சேமிப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்படுவது இதன் முக்கிய சிறப்பம்சங்களாகும்.