எலான் மஸ்க் vs இந்திய அரசு: ஸ்டார்லிங்க் விவகாரம் - பின்னணியில் அம்பானி மோதலா? Explained
இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையை பெரும் பணக்காரர்கள் தடுக்கிறார்கள் என்ற எலான் மஸ்க்கின் குற்றச்சாட்டை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. எலான் மஸ்க் வைத்த குற்றச்சாட்டின் பின்னணி மற்றும் செயற்கைக்கோள் மூலமான இணையச் சேவை வழங்கலில் நிலவும் போட்டி என இதுகுறித்து விரிவாக இங்கு அலசலாம்.
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டெஸ்லா (Tesla), ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX), ஸ்டார்லிங்க் (Starlink), நியூராலிங்க் (Neuralink) உள்ளிட்ட பல நிறுவனங்களை நிறுவியவர் ஆவார். ட்விட்டர் தளத்தை விலைக்கு வாங்கி அதை X என பெயர் மாற்றம் செய்தார்.
இவரது ஸ்டார்லிங்க் நிறுவனம் உலகம் முழுவதும், குக்கிராமம் உள்பட செயற்கைக்கோள் மூலம் அதிவேக இணையச் சேவை வழங்கும் திட்டத்தை ஸ்பேஸ்எக்ஸ் மூலம் செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில், இவர் இந்திய அரசின் மீது பெரும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
எலான் மஸ்க் வைத்த குற்றச்சாட்டு
எலான் மஸ்க் அவரது X தளத்தில், "இந்திய மக்கள் மீதான தங்கள் ஏகபோக ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக சில பெரும் செல்வந்தர்கள் எங்களைத் தடுக்கிறார்கள். அவர்கள் என்று உங்களால் யூகிக்க முடியும். இது இந்திய மக்களுக்கு எதிரான ஒரு குற்றம்" என பதிவிட்டிருந்தார்.
எலான் மஸ்க் பதிவிட்டது ஏன்?
X தளத்தில் 19 லட்சம் பேர் பின்தொடரும் DogeDesigner என்ற பயனர் பொதுவாக தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகளுக்காக பெயர் பெற்றவர். இவர் கடந்த நேற்றிரவு (அக். 7) போட்ட பதிவில் இந்தியாவுக்கு ஏன் ஸ்டார்லிங்க் தேவை என்பது குறித்தும், இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் ஸ்டார்லிங்க் அதிகாரி பேசியிருந்தது குறித்தும் நீண்ட பதிவு ஒன்றை வெளியிடப்பட்டிருந்தது. அந்த பதிவின் ஹைலைட்ஸ் இதோ:
- இந்தியாவில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் 4ஜி சேவையும், ஊரகப் பகுதிகளில் போதிய பிராட்பேண்ட் இணைப்பும் இன்னும முழுமையாக பெறவில்லை.
- ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் அமைப்பதில் உள்ள நிலப்பரப்பு சார்ந்த சவால்களால், BharatNet திட்டத்தின் செயல்பாடுகளும் பல கிராமப் பஞ்சாயத்துகளிலும் இன்னும் முழுமை அடையாமல் உள்ளன.
- இந்த இடைவெளியை நிரப்ப ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவை சிறந்த தீர்வாக அமையும்.
- இந்தியாவில் 20 கேட்வே தளங்களை அமைத்துள்ள ஸ்டார்லிங்க், இந்தியப் பயனர்களின் தரவு பாதுகாப்பை உறுதி செயயும் தொழில்நுட்பத்தையும் உருவாக்கி உள்ளது.
- இது மலைப்பகுதிகள் மற்றும் தொலைதூர குக்கிராமங்களுக்கு அதிவேக இணையத்தை வழங்குவதுடன் பேரிடர் காலங்களில் தடையற்ற தகவல் தொடர்பையும உறுதி செய்யும்.
- பிரதமர் மோடியின் 100% இணைய இணைப்பு இலக்கை எட்ட உதவத் தயாராக உள்ளதாக ஸ்டார்லிங்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.
- தேவையான ஒழுங்குமுறை அமைதிகளும் அலைக்கற்றையும் வழங்கப்பட்டால் கிராமப்புற கல்வி, மருத்துவம் மற்றும் தொலைதூரப் பகுதிகள் பெரும் வளர்ச்சி பெறும்.
மாநாட்டில் ஸ்டார்லிங்க் நிறுவனம் தெரிவித்தது என்ன?
- புது டெல்லியில் அக். 7ஆம் தேதி முதல் அக். 10ஆம் தேதிவரை இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாடு நடைபெறுகிறது. இதில், ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் வணிக செயல்பாடுகளின் துணைத் தலைவர் லாரன் டிரேயர் பங்கேற்று உரையாற்றினார். அவர் தெரிவித்ததாவது:
- பல ஆண்டுகளாக ஸ்டார்லிங்க் நிறுவனம் அது செயல்படும் நாடுகளில் கொண்டிருக்கும் அதே வகையான உறவுமுறைக்கு இந்தியாவிலும் நாங்கள் அடித்தளம் அமைத்து வருகிறோம். (இந்தியாவில்) ஜியோ, ஏர்டெல் மற்றும் பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்தி வருகிறோம்.
- அங்கீகாரம் பெற்ற உடன் ஸ்டார்லிங்க் எவ்வாறு சிறந்த முறையில் சேவை அளிக்க முடியும் என்பதை கேட்டு தெரிந்துகொள்வதற்காக மாநில அரசுகளுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம்.
- குக்கிராமங்கள், இன்னும் கடினமானதாக இருக்கும் இடங்களை சென்றடைய, இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், அரசு மற்றும் தொழில்துறையுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் ஸ்டார்லிங்க் உதவ முடியும்.
- இந்தியா இறுதி ஒப்புதல்களைப் பெறும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், எங்களது மெசேஜ் மிகவும் எளிமையானதுதான்... இந்தியா தயாரான உடன், இந்தியாவுக்குச சேவை அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசியிருந்த நிலையில், எலான் மஸ்க் இந்தியாவின் மீது பெரும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மேலும் படிக்க | சவுதி விமான நிலையங்கள் மீது ஹவுதி தாக்குதல்: 3 பேர் பலி... இந்தியா கடும் கண்டனம்
யாரை குற்றஞ்சாட்டுகிறார் எலான் மஸ்க்?
ஸ்டார்லிங்கை சில இந்திய பணக்காரர்கள் தடுக்கிறார்கள் என எலான் மஸ்க் குற்றஞ்சாட்டியிருந்தார். அதற்கு முன்னதாக, வெறும் 500 பாலோயர்களை கொண்ட Furnuwees X பக்கத்தில் இந்திய அரசை விமர்சித்து போடப்பட்டிருந்த பதிவுக்கும் எலான் மஸ்க் பதிலளித்திருந்தார்.
- Furnuwess என்ற பக்கத்தில் நேற்று போட்டப்பட்ட பதிவில், "ஸ்டார்லிங்க் செயல்பட இந்தியா அனுமதிக்காது. அம்பானி, மிட்டல், டாடா, மஹிந்திரா, அதானி மற்றும் பிற பெரிய வணிக நிறுவனங்களைப் பாதுகாப்பதற்காகவே இந்திய அரசு உள்ளது.
- மின்சார வாகன பயன்பாட்டை ஊக்கப்படுத்துவதில் இந்தியா பெரும் குளறுபடியைச் செய்துள்ளது. இந்தியாவில் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பயங்கரவாத இஸ்லாமிய நாடுகளிடம் இருந்து சுமார் 200 பில்லியன் டாலர் மதிப்பிலான கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்கிறது.
- இவ்வளவு பெரிய தொகையும் அச்சுறுத்தலும் கூட, மின்சார வாகனங்களுக்கு மாறுவதற்கான போதிய உந்துதலை இந்திய அரசுக்கு தரவில்லை. இதற்கு காரணம், மின்சார வாகனங்களுக்கான கொள்கையை மாற்றினால் அது அம்பானியின் வணிக சாம்ராஜ்யமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸைப் பாதிக்கிறது" என குறிப்பிட்டிருந்தது.
Furnuwess என்ற பக்கத்தின் இந்த பதிவுக்கு எலான் மஸ்க், "கவலைக்குரியது" என பதிவிட்டுள்ளார். மேலும், பணக்காரர்களால் இந்தியாவில் ஸ்டார்லிங்க் தடுக்கப்படுகிறது என எலான் மஸ்க் குறிப்பிடுவதன் மூலம் அவர் முகேஷ் அம்பானியை மறைமுகமாக குற்றஞ்சாட்டுகிறார் என்றும் புரிந்துகொள்ளலாம்.
No Comments - ஆகாஷ் அம்பானி
இந்தியாவில் செயற்கைக்கோள் தகவல்தொடர்பு சேவையை அளிக்க ஸ்டார்லிங்க் மட்டுமின்றி முகேஷ் அம்பானியின் Reliance Jio நிறுவனமும் திட்டமிட்டு வருவது கவனிக்கத்தக்கது. எலான் மஸ்க் குற்றச்சாட்டின் மீது கருத்து தெரிவிக்க Reliance Jio Infocomm நிறுவனத்தின் தலைவர் ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
இந்திய அரசு மறுப்பு
இந்திய மக்கள் மீதான தங்களின் ஏகபோக ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக, சில பெரும் பணக்காரர்களால் ஸ்டார்லிங்க் தடுக்கப்படுகிறது என எலான் மஸ்க் முன்வைத்த குற்றச்சாட்டை இந்திய அரசு முற்றிலும் நிராகரித்துள்ளது.
அறிக்கையில் கூறியிருப்பது என்ன?
- செயற்கைக்கோள் தகவல்தொடர்பு சேவைகளுக்கான இந்தியாவின் ஒழுங்குமுறை கட்டமைப்பு நியாயமானதாகவும் பாகுபாடற்றதாகவும் உள்ளது. இந்தக் கட்டமைப்போ அல்லது அதன் பயன்பாடோ நியாயமற்றது அல்லது பாகுபாடு கொண்டது என்ற கருத்து ஆதாரமற்றது என்றும் தவறானதும்.
- (செயற்கைக்கோள் தகவல்தொடர்பு சேவைகளுக்கான) இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக, மூன்று உரிமதாரர்கள் தொடர்பாக பாதுகாப்பு மதிப்பீடு தற்போது நடைபெற்று வருகிறது. உரிமை பெற்ற ஒரு நிறுவனத்திற்கு இந்த செயல்முறை நிறைவடைந்த உடன், அடுத்த கட்டமாக அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு கோரப்படும். தற்போது மூன்று நிறுவனங்களும் ஏறக்குறைய ஒரே ஒழுங்குமுறை நிலையில் உள்ளன.
செயற்கைக்கோள் தகவல்தொடர்பு - திட்டமிடும் 3 நிறுவனங்கள்
- சுனில் பாரதியின் Eutelsat OneWeb, முகேஷ் அம்பானியின் Reliance Jio, எலான் மஸ்கின் Starlink ஆகிய மூன்று நிறுவனங்கள் இந்தியாவில் செயற்கைக்கோள் தகவல்தொடர்பு சேவையை தொடங்க திட்டமிட்டிருந்தது.
- இந்தியா - அமெரிக்க இடையே முடங்கிப்போன வர்த்தக ஒப்பந்தம், ரஷ்ய எண்ணெய்யை வாங்குவது தொடர்பான வரி அச்சுறுத்தல் மற்றும் மிக முக்கியமாக ஸ்டார்லிங்க் மீதான பாதுகாப்பு சார்ந்த அச்சங்கள் போன்ற பல பிரச்னைகளால் இந்தியா - அமெரிக்கா இடையே நிலவும் பதற்றமான நிலவுகிறது.
- Starlink முன்பாக Eutelsat, Reliance Jio ஆகிய நிறுவனங்களுக்கே ஒப்புதல் கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் Starlink இன்னும் காத்திருக்க வேண்டும் என்றும் இதுகுறித்து அறிந்தவர்கள் சொல்வதாக Times of India செய்தி வெளியிட்டுள்ளது.
முடிவுரை
- இந்தியாவில் செயற்கைக்கோள் வழி இணையச் சேவையை வழங்குவதில் நிலவும் வணிகப் போட்டி, தற்போது எலான் மஸ்க் மற்றும் இந்திய அரசுக்கு இடையேயான விவாதமாக உருவெடுத்துள்ளது.
- இந்தியாவின் தொலைத்தூர மற்றும் மலைப்பகுதி கிராமங்களுக்கு அதிவேக இணைய இணைப்பு தேவை என்பது மறுக்க முடியாத உண்மை. இருப்பினும் நாட்டின் பாதுகாப்பு மதிப்பீடுகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகள் மிக அவசியமானவை என்பதையும் இந்திய அரசு தெளிவுப்படுத்தி உள்ளது.
- உள்நாட்டு பெருநிறுவனங்களின் ஆதிக்கம் மற்றும் சர்வதேச வர்த்தகப் பதற்றங்களுக்கு மத்தியில் அனைத்து நிறுவனங்களுக்கும் சமமான வாய்ப்பும் ஒப்புதலும் வழங்கப்பட்டு இந்த விவகாரம் இந்திய மக்களின் இணைய சேவை பயன்பாட்டுக்கு சாதகமாக முடிவுக்கு வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.