தமிழக முதல்வர் விஜய் ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு சென்று கனக துர்கா அம்மன் கோவிலில் தரிசனம் செய்யவுள்ளதாகவும், சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
1/6
ஆந்திரா செல்லும் முதல்வர் விஜய்! கனக துர்கா அம்மன் கோவிலில் தரிசனம்
தமிழக முதலமைச்சர் விஜய், ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அங்கு புகழ்பெற்ற கனக துர்கா அம்மன் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்யவுள்ளார். ஆந்திர அரசின் சார்பில் விஜயவாடா எம்பி கேசினேனி சிவானாத் தலைமையிலான குழுவினர் சென்னைக்கு வந்து விஜய்க்கு அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.
2/6
கனக துர்கா கோவிலின் சிறப்புகள் என்ன?
கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள இந்திரகீலாத்ரி மலையில் அமைந்துள்ள ஸ்ரீ துர்கா மல்லேஸ்வர சுவாமி கோவில், கனக துர்கா அம்மன் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் அருள்பாலிக்கும் அம்மன் சுயம்புவாக தோன்றியதாக நம்பப்படுகிறது. மேலும், ஆதிசங்கரர் இங்கு ஸ்ரீ சக்கரத்தை நிறுவி அம்மனின் உக்கிரத்தை தணித்ததாக கோவில் வரலாறு கூறுகிறது. வெற்றி மற்றும் தடைகள் நீங்குவதற்காக பலரும் அம்மனை வழிபடுகின்றனர்.
ஆன்மீகப் பயணத்துடன், ஆந்திர மாநிலத்தின் கலாச்சார நிகழ்வான ‘விஜயவாடா உத்சவ் 2.0’ நிகழ்ச்சியிலும் விஜய் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புன்னமி காட்டில் நடைபெறும் இந்த விழாவில் லேசர் காட்சிகள் மற்றும் ஆந்திர மாநிலத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் விஜய் முதன்மை விருந்தினராக பங்கேற்பார் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
4/6
சந்திரபாபு நாயுடுவுடன் முக்கிய சந்திப்பா?
ஆந்திரப் பயணத்தின்போது அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை விஜய் சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பில் தமிழகத்திற்கான தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு மற்றும் கோதாவரி, கிருஷ்ணா, காவிரி நதிகளை இணைக்கும் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த சந்திப்பின் நிகழ்ச்சி நிரல் தொடர்பான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.
5/6
பவன் கல்யாணை சந்திப்பாரா விஜய்?
திரைப்பட துறையிலிருந்து அரசியலுக்கு வந்து ஆந்திர மாநில துணை முதலமைச்சராக பொறுப்பு வகிக்கும் பவன் கல்யாணையும் விஜய் சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் திரைத்துறையில் பிரபலமானவர்களாக இருந்து அரசியலில் முக்கியப் பொறுப்புகளை ஏற்றுள்ளதால், இந்த சந்திப்பு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
6/6
அரசியல் தலைவர்கள் வழிபடும் கனக துர்கா அம்மன்!
விஜயவாடா கனக துர்கா அம்மன் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு அரசியல் தலைவர்களும் வருகை தந்துள்ளனர். தசரா விழாவின்போது குடியரசு தலைவர் திரௌபதி முர்முவும் இக்கோவிலுக்கு வருகை தருவது குறிப்பிடத்தக்கது. தெலங்கானா தனி மாநிலமாக உருவானால் தங்க மூக்குத்தி காணிக்கை செலுத்துவதாக வேண்டிக்கொண்ட முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர் ராவ், தனது வேண்டுதல் நிறைவேறிய பின்னர் தங்க மூக்குத்தியை காணிக்கையாக செலுத்தியதாக கூறப்படுகிறது. தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட தலைவர்களும் இக்கோவிலுக்கு வந்துள்ளனர். இந்த சூழலில் விஜய்யின் ஆந்திரப் பயணம் ஆன்மீகம் மற்றும் இரு மாநில உறவுகள் சார்ந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.