சென்னை to புதுச்சேரி..இனி கப்பல்லையே போகலாம்! தமிழ்நாடு அரசின் புது திட்டம்..
சென்னையிலிருந்து, புதுச்சேரிக்கு இனி கடல் வழியே பயணிகள் படகு போக்குவரத்து தொடங்க, தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
சென்னையிலிருந்து, மாமல்லபுரம் வழியாக, புதுச்சேரிக்கு கடல் வழியே பயணிகள் படகு போக்குவரத்து சேவையை தொடங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருக்கிறது. இதையடுத்து, இதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளும் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது குறித்த விவரத்தைதான் இங்கு பார்க்கப்போகிறோம்.
சென்னை to புதுச்சேரி கடல் வழி பயணம்!
சென்னையில் இருந்து, மாமல்லபுரம் வழியாக புதுச்சேரிக்கு கடல் வழியே பயணிகள் போக்குவரத்து சேவையை தொடங்க, தமிழ்நாடு அரசு திட்டம் வகுத்து வருகிறது. இது குறித்த முதற்கட்ட நடவடிக்கையாக, படகு போக்குவரத்து சேவையை இயக்க விருப்பமுள்ள நிறுவனங்களிடம் இருந்து, தமிழ்நாடு கடல்சார் வாரியம் விருப்பக்கோரிக்கைகளை வரவேறுள்ளது அரசு. இத்திட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், சென்னை, மாமல்லபுரம், புதுச்சேரி இடையேயான சுற்றுலாப் பயணிகளின் பயண அனுபவத்தில், புத்தம் புதிய மாற்றம் ஏற்படும் என தமிழக அரசு நம்புகிறது, இதற்கு பொது மக்களிடையேயும் பயங்கர வரவேற்பு உள்ளது.
கடல் வழி போக்குவரத்து vs சாலை வழி போக்குவரத்து!
தமிழ்நாட்டை பொருத்தவரை வெளிநாட்டு பயணிகளை அதிகம் ஈர்க்கும் சுற்றுலா தளமாக சென்னை, மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக, சென்னைக்கு வரும் வெளிநாட்டு அல்லது வெளிமாநில சுற்றுலா பயணிகள், முக்கியமாக தங்களது செக் லிஸ்டில் மாமல்லபுரத்தை வைத்துள்ளனர். மாமல்லபுரத்தில் உள்ள புராதன சிற்பங்களையும் கடற்கரை கோயில் உள்ள இடத்தையும், பிற வரலாற்று சிறப்புமிக்க இடங்களையும் பார்வையிடுவதை குறிக்கோளாக கொண்டுள்ளனர். அதே போல, அங்கு சுற்றுலாவை முடித்த பின்பு புதுச்சேரிக்கு செல்கின்றனர்.
இப்போதைக்கு, சென்னை, மாமல்லபுரம், புதுச்சேரி உள்ளிட்ட மூன்று பகுதிகளையும் இணைக்கும் போக்குவரத்தாக பெரும்பாலும் சாலை மார்க்க போக்குவரத்தே இருக்கிறது. ஒரே வழி போக்குவரத்தாக இருப்பதால், பயண நேரம் அதிகமாவதுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு, அவர்கள் சேர வேண்டிய இடத்தை சென்றடைவதில் பல்வேறு சவால்கள் ஏற்பட்டுள்ளது.
இது போன்ற சவால்களை தவிர்க்கத்தான், தமிழ்நாட்டின் கடலோர சுற்றுலாவை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தும் நோக்கில், சென்னை முதல் மாமல்லபுரம் வழியாக புதுச்சேரி வரை கடல் வழியாக பயணிகள் படகு போக்குவரத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
வெளியான அறிவிப்பு..!
மேற்கூறிய தகவல் தொடர்பாக, தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் துணை தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில், சென்னை, மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு இடையே கடல் வழித்தடத்தில் பயணிகள் படகு போக்குவரத்து சேவையை இயக்க விருப்பமிருக்கும் அனுபவம் வாய்ந்த மற்றும் நிதி வலிமை கொண்ட படகு போக்குவரத்து நிறுவனங்கள், கப்பல் உரிமையாளர்கள், முகவர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விருப்ப கோரிக்கைகள் வரவேற்கப்படுகின்றன.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக, சென்னை, மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி இடையே பயணிகள் படகு போக்குவரத்து இணைப்பை உருவாக்குவதாக இருக்கிறது. இதன் மூலமாக, கடலோர சுற்றுலாவை மேம்படுத்துவதுடன், பயணிகளுக்கு மாற்று போக்குவரத்து வசதியை ஏற்படுத்தவும் ஒருங்கிணைந்த கடலோர சுற்றுலா வழித்தடத்தை உருவாக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.
டெண்டருக்கு கடைசி நாள்..
படகு போக்குவரத்து திட்டத்தில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள், இதற்கான விருப்ப கோரிக்கை ஆவனங்களை தமிழ்நாடு அரசின் ஒப்பந்த புள்ளிகளுக்கான இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். https://tntenders.gov.in/nicgep/app எனும் இணையதள முகவரியில் விருப்பமுள்ள நிறுவனங்கள், தங்களுடைய விண்ணப்பங்களை 2026ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி காலை 11 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு கடல்சார் வாரியம் அறிவுறுத்தி இருக்கிறது.