டாஸ்மாக் தற்காலிக ஊழியர்களுக்கு குட் நியூஸ்! மருத்துவ காப்பீடு ரூ.12 லட்சமாக உயர்வு
Tasmac New Rules : டாஸ்மாக் தற்காலிக ஊழியர்களுக்கும் மருத்துவக் காப்பீடு 12 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுவதற்கான விதிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்....
Tasmac New Rules : தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் பணியாற்றி வரும் தற்காலிக மற்றும் ஒப்பந்தப் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் மருத்துவ சிகிச்சை உதவித்தொகையை கணிசமாக உயர்த்தி புதிய மருத்துவ நலத் திட்டத்தை டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தழுவி உருவாக்கப்பட்டுள்ள இப்புதிய உத்தரவை டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் 17.10.2026 அன்று அதிகாரப்பூர்வமாகப் பிறப்பித்துள்ளார்.
திட்டத்தின் தொடக்கம் மற்றும் செயல்பாட்டுக் காலம்:
இந்த புதிய திட்டத்திற்கு “தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் நலவாழ்வு திட்டம் 2026” (Temporary and Contractual Employees Health Benefit Scheme, 2026) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இத்திட்டம் 01.10.2026 முதல் முன்தேதியிட்டு அமலுக்கு வருகிறது. இதற்காக ஏற்கனவே நடைமுறையில் இருந்த விபத்து/காயம்/ஊன நிவாரண நிதித் திட்டம் (HF-cum-AIDRF) முழுமையாக ரத்து செய்யப்பட்டு மாற்றியமைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் செயல்பாட்டுக் காலம் 01.10.2026 முதல் 30.09.2031 வரை 5 ஆண்டுகளுக்கு ஒரு குடும்ப நிதித் தொகுப்பு அடிப்படையில் அமலில் இருக்கும்.
யாருக்கெல்லாம் பொருந்தும்?
டாஸ்மாக் நிறுவனத்தில் தற்காலிக, தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட கீழ்க்கண்ட பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்:
1. சில்லறை விற்பனைக் கடைப் பணியாளர்களாக உள்ள மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள்.
2. மாவட்ட மேலாளர்கள், சட்ட அலுவலர்கள் மற்றும் உதவி மேலாளர்கள்.
3. மற்ற அனைத்து வகை தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்கள்.
தகுதி பெறாதவர்கள்:
டாஸ்மாக் நிறுவனத்தின் வழக்கமான நிரந்தரப் பணியாளர்கள் மற்றும் மனிதவள நிறுவனங்கள் வழியாக நியமிக்கப்பட்ட வெளிமுகமை பணியாளர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. அதேசமயம், ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ள ஊழியர்களுக்கும் இத்திட்டத்தின் பலன்கள் தொடர்ந்து கிடைக்கும்; ஆனால் அவசரகால சிகிச்சைக்கான முன் பணத்தைப் பெற முடியாது.
பயனாளிகள் யார்?
அரசு விதிகளின்படி, பணியாளரின் முறையான சட்டப்பூர்வ துணைவர்/துணைவி, திருமணமாகாத ஊழியர்களின் பெற்றோர் (திருமணம் ஆகும் வரை), விவாகரத்தான பிள்ளைகள் இல்லாத ஊழியரின் பெற்றோர் (மறுமணம் செய்யும் வரை) மற்றும் பணியாளரைச் சார்ந்துள்ள பிள்ளைகள் (வயது வரம்பின்றி படிக்கின்ற அல்லது வருமானமில்லாத பிள்ளைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள் உட்பட) இத்திட்டத்தின் கீழ் குடும்ப உறுப்பினர்களாகக் கருதப்படுவார்கள். கணவன் - மனைவி இருவரும் டாஸ்மாக் ஊழியர்களாக இருக்கும்பட்சத்தில், இருவரில் இளையவரிடம் மட்டுமே மாதாந்திர சந்தா பிடித்தம் செய்யப்படும்.
மருத்துவ நிதி உதவி உச்சவரம்பு உயர்வு:
அங்கீகரிக்கப்பட்ட பொது சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள்: முந்தைய திட்டத்தில் இருந்த ரூ.5 லட்சத்தில் இருந்து தற்போது ரூ.7.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட தீவிர நோய்களுக்கான சிகிச்சைகள்: முந்தைய திட்டத்தில் இருந்த ரூ.10 லட்சத்தில் இருந்து தற்போது ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த குடும்ப உச்சவரம்பு: 5 ஆண்டு பிளாக் காலத்தில் ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக ரூ.12 லட்சம் வரை சிகிச்சை உதவி அனுமதிக்கப்படும்.
பணியின் போது ஏற்படும் விபத்துக் காயங்களுக்கான சிகிச்சை: பணியின் போது நிகழும் விபத்துகளுக்கான சிகிச்சைச் செலவுகளுக்கு எந்தவித உச்சவரம்பும் கிடையாது. இதற்கு பிளாக் கால வரம்பும் பொருந்தாது.
திட்டத்தின் முக்கிய விதிமுறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்:
மாதாந்திர சந்தா பிடித்தம்: இத்திட்டத்திற்கான ஊழியர்களின் மாதாந்திர சந்தாத் தொகை ரூ.200-ல் இருந்து ரூ.300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஊழியர்களின் சம்மதக் கடிதம் பெறப்பட்டு (Form 4), அக்டோபர் 2026 முதல் மாதச் சம்பளத்தில் இத்தொகை பிடித்தம் செய்யப்படும்.
நேரடி மறுபயன்பாட்டு முறை: இது காப்பீட்டு நிறுவனங்கள் அல்லது மூன்றாம் தரப்பு நிர்வாகி (TPA) மூலம் நடத்தப்படும் கேஷ்லெஸ் காப்பீடு அல்ல. டாஸ்மாக் தனது சொந்த நல நிதியைக் கொண்டு நேரடியாகச் செயல்படுத்தும் திட்டமாகும். எனவே, பணியாளர்கள் முதலில் மருத்துவமனையில் கட்டணத்தைச் செலுத்தி சிகிச்சை பெற்று, பின்னர் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து பணத்தை ரீஇம்பர்ஸ்மென்ட் (Reimbursement) பெற்றுக் கொள்ளலாம்.
எந்த மருத்துவமனையிலும் சிகிச்சை பெறலாம்: அரசு விதிகளின்படி மருத்துவமனை என்ற வரையறைக்குள் வரும் பதிவு செய்யப்பட்ட எந்தவொரு மருத்துவமனையிலும் ஊழியர்கள் சிகிச்சை எடுக்கலாம். எம்பேனல் செய்யப்பட்ட நெட்வொர்க் மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை பெற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை; நெட்வொர்க் அல்லாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும் பிடித்தம் இன்றி முழுத் தொகையும் விதிகளின்படி கணக்கிடப்படும்.
விபத்து சிகிச்சைக்கான உடனடி முன்பணம்: பணியில் இருக்கும்போது அல்லது கடை, வங்கி, அலுவலகம் ஆகியவற்றுக்கு சென்று வரும் வழியில் எதிர்பாராத விபத்து நேரிட்டால், மருத்துவமனை மதிப்பீட்டுத் தொகையில் ரூ.1,00,000 வரை உடனடி முன்பணமாகப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனை சம்பந்தப்பட்ட மண்டல முதுநிலை மேலாளர் பரிந்துரையின் பேரில் அனுமதிப்பார்.
முன்பணத்தை சரிசெய்தல் மற்றும் திருப்பிச் செலுத்துதல்: விபத்து முன்பணம் பெற்ற ஊழியர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 1 மாதத்திற்குள் மருத்துவ ரசீதுகளைச் சமர்ப்பித்து அதனை அட்ஜஸ்ட் செய்ய வேண்டும். அவ்வாறு 3 மாதங்களுக்குள் சரிசெய்யத் தவறினால், பிணை நின்ற இரண்டு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து தலா ரூ.5,000 வீதம் 10 தவணைகளில் பிடித்தம் செய்யப்படும்.
பழைய நோய்களுக்கும் அனுமதி: NHIS 2026 அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள முந்தைய கால நோய்களுக்கும் (Pre-existing diseases) எந்தவித நிபந்தனையுமின்றி சிகிச்சை உதவித்தொகை முழுமையாகப் பொருந்தும்.
கிளைம்களை ஆய்வு செய்யும் குழுக்கள்:
மருத்துவக் கோரிக்கைகளை வெளிப்படையாகவும் விரைவாகவும் பரிசீலித்து அனுமதிக்க மாவட்ட, மண்டல மற்றும் தலைமை அலுவலக அளவில் ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் விண்ணப்பங்கள் விரைவாகத் தணிக்கை செய்யப்பட்டு, தகுதியான நிதி உதவி நேரடியாகப் பணியாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
டாஸ்மாக் நிர்வாகத்தின் இந்த அதிரடி சீர்திருத்தம் மற்றும் மருத்துவ உதவி உயர்வு, களப்பணியில் தொடர்ந்து உழைத்து வரும் ஆயிரக்கணக்கான தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு மிகப்பெரிய பொருளாதாரப் பாதுகாப்பையும் மன அமைதியையும் அளித்துள்ளது.