வரம் தரும் வரலட்சுமி விரதம்.. கடைபிடிப்பது எப்படி? பூஜை முறைகள் என்ன?
varalakshmi vratham 2026: ஆடி மாத அமாவாசை முடிந்த பின்பும், வளர்பிறை பௌர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், ஆகஸ்ட் 21ஆம் தேதி வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இதற்கான பூஜை முறைகளும், விரதம் எப்படி இருக்கலாம் என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
varalakshmi vratham 2026: ஆடி மாதம் என்றாலே ஆன்மீக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தமிழ் மாதமாக பார்க்கப்படுகிறது. ஆடி மாதத்தில் அம்மனுக்கு மிகவும் உகந்த மாதமாக இருக்கிறது. ஆடி மாதத்தில் ஆடி அமாவாசை, ஆடி கிருத்திக்கை போன்ற விசேஷ தினங்கள் சிறப்பாக கொண்டாடப்படும்.
அந்த வகையில், ஆடி மாதத்தில் வரும் வரலட்சுமி விரதமும் விசேஷமாக இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. அஷ்ட லட்சுமிகளின் வடிவமான மகாலட்சுமியைப் போற்றி குடும்பத்தின் நல்வாழ்வு, செல்வம் பெறுக வரலட்சுமி நோம்பு கடைபிடிப்பது வழக்கம். ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
வரலட்சுமி விரதம் எப்போது?
வரங்களை வாரி வழங்கும் மகாலட்சுமி தேவிக்காக மேற்கொள்ளப்படும் வரலட்சுமி விரதமானது, பஞ்சாங்கத்தின்படி, ஆகஸ்ட் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமையில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மகாலட்சுமியை வேண்டி விரதம் இருந்து பூஜை செய்து வழிபடலாம். இந்த நாளில் விரதம் இருந்து வழிபடுவது சகல சௌகரியத்தை கொடுக்கும் நம்பப்படுகிறது.
வரலட்சுமி விரதம் என்பது 11 வகையான செல்வங்களையும், மகாலட்சுமயின் அருளையும் வேண்டி பெண்களால் கடைபிடிக்கப்படும் விரதமாகும். வரலட்சுமி விரதம் இருப்பதன் மூலம் அஷ்டலட்சுமிகளின் அருள் முழுமையாக கிடைக்கும் என நம்பப்படுகிறது. மேலும், குடும்பத்தில் மகிழ்ச்சி, செல்வம், தொழில், வேலை வளர்ச்சி போன்ற நற்பலன்களும் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
வரலட்சுமி விரத நேரம், முகூர்த்தம்
வரலட்சுமி விரதம் மற்றும் பூஜையை உகந்த நேரத்தில் செய்ய வேண்டும். அதன்படி, ஆகஸ்ட் 21ஆம் தேதி எந்த நேரத்தில் பூஜை செய்யலாம், விரதம் இருக்கலாம் என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
- காலை (சிம்ம லக்னம்): காலை 6.23 மணி முதல் காலை 7.48 மணி வரை
- மதியம் (விருச்சிக லக்னம்): 12.06 மணி முதல் மதியம் 2.20 மணி வரை
- மாலை (கும்ப லக்னம்): மாலை 6.16 மணி முதல் மாலை 7.52 மணி வரை
பூஜை முறைகள்
அதிகாலையில் எழுந்து வீட்டு வாசலில் மாக்கோலம் இட்டு, விளக்கேற்ற வேண்டும். பிறகு, ஜைக்கான கலசத்தை மகாலட்சுமி போன்று அலங்காரம் செய்யவேண்டும். மனைப்பலகையில் கும்பம் வைத்து, கும்பத்தில் உள்ள தேங்காயில் அம்மன் முகம், கிரீடம் வைக்கவேண்டும்.
அத்துடன் ஆடை அணிகலன்கள் அணிவித்து, மஞ்சள், குங்குமம் வைத்து, பூச்சூட்டி அலங்கரிக்கவேண்டும். பின்னர், வீட்டின் வாசலில் வைத்து மகாலட்சுமியை அந்த கலசத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொள்ளவேண்டும்பிறகு, மகாலட்சுமிக்கு பூஜை செய்ய வேண்டும்.
அப்போது, பஞ்சமுக நெய் விளக்கு ஏற்றி வெற்றிலை, பாக்கு, பழம், நெய் ஊற்றிய சர்க்கரை பொங்கல், சுண்டல் என நைவேத்யம் படைக்க வேண்டும். நோன்புக் கயிறை சாற்றி பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். பூஜையை முடித்தபிறகு, நோன்புச் கயிறை மஞ்சள் குங்குமம் இட்ட மலர்களோடு சேர்த்து வலது கையில் கட்டிக் கொள்ளலாம்.
வரலட்சுமி விரதம் இருப்பது எப்படி?
வரலட்சுமி விரதத்தை அனைத்து பெண்களும் கடைபிடிக்கலாம். அதிகாலையில் எழுந்து சூரிய உதயத்திற்கு முன்பு குளித்துவிட்டு, பூஜை அறையில் விளக்கேற்றி விரதத்தை தொடங்கலாம். முழுமையாக விரதமும் இருக்கலாம். இல்லையெனில், பால், பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். உடல்நலப் பிரச்னை இருப்பவர்கள் மதிய உணவு சாப்பிட்டுக் கொள்ளலாம்.