SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

CSK-வின் புதிய பெளலிங் கோச் இவர்தான்.. ஜாகீர் கான் முடிவுக்கு ஓகே?

CSK Latest News: ஜாகீர் கான் விருப்பத்தின் பேரில், சிஎஸ்கேவின் பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்புக்கு மோஹித் சர்மா நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Written By R Balaji
Published: Oct 01, 2026, 01:49 PM IST | Updated: Oct 01, 2026, 01:54 PM IST
Join

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அடுத்த ஐபிஎல் சீசனை முன்னிட்டு பயிற்சியாளர் குழுவில் முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஜாகீர் கான் பொறுப்பேற்றுள்ள நிலையில், தனக்கு நெருக்கமாக பணியாற்றக்கூடிய முன்னாள் வீரர்களை பயிற்சியாளர் குழுவில் இணைக்க அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், சிஎஸ்கேவின் பந்துவீச்சு பயிற்சியாளர் எரிக் சிம்மன்ஸை மாற்றிவிட்டு, அந்த பொறுப்புக்கு இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மாவை நியமிக்க ஜாகீர் கான் விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக சிஎஸ்கே நிர்வாகத்திடமும் அவர் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

சிஎஸ்கேவுக்காக அசத்திய மோஹித் சர்மா

மோஹித் சர்மாவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ஏற்கனவே நெருங்கிய தொடர்பு உள்ளது. சிஎஸ்கே அணிக்காக நான்கு சீசன்களில் விளையாடியுள்ள அவர், குறிப்பாக 2013 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருந்தார்.

2013 சீசனில் 15 போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்களை வீழ்த்திய மோஹித் சர்மா, 2014ல் 16 போட்டிகளில் 23 விக்கெட்களை கைப்பற்றினார். 2015 சீசனில் 16 போட்டிகளில் 14 விக்கெட்களை எடுத்தார். 2019ல் சிஎஸ்கே அணிக்காக ஒரே ஒரு போட்டியில் மட்டுமே களமிறங்கினார்.

மோஹித் சர்மா இதுவரை 120 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், 134 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். இந்திய அணிக்காக 8 டி20 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்களையும் எடுத்துள்ளார்.

குஜராத் அணியில் நட்சத்திரமாக மாறிய மோஹித் சர்மா

மோஹித் சர்மாவின் கிரிக்கெட் பயணத்தில் 2023 ஐபிஎல் சீசன் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. 2022ல் சிஎஸ்கே அணியில் நெட் பெளலராக இருந்த அவர், அடுத்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த வாய்ப்பை சிஏஅப்பாக பயன்படுத்திய மோஹித் சர்மா, 2023 சீசனில் 14 போட்டிகளில் 27 விக்கெட்களை கைப்பற்றினார். இதன் மூலம் அந்த சீசனில் அதிக விக்கெட்கள் எடுத்த பந்துவீச்சாளர்களின் பட்டியலில் 2வது இடத்தை பிடித்தார்.

அதேபோல், 2014ல் சிஎஸ்கே அணிக்காக 23 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் பர்பிள் கோப்பையும் வென்றிருந்தார்.

2023 ஐபிஎல் தொடரின் குவாலிஃபையர் 2 போட்டியிலும் மோஹித் சர்மா தனது பந்துவீச்சு திறமையை வெளிப்படுத்தினார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான அந்த ஆட்டத்தில் வெறும் 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

இந்திய அணியிலும் இடம்

ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் இந்திய அணியிலும் மோஹித் சர்மாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. 2014 டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம்பெற்றிருந்தார். அந்த தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மோஹித் சர்மா அறிவித்தார். தற்போது விளையாடுவதை நிறுத்தியுள்ள நிலையில், பயிற்சியாளர் குழுவில் புதிய பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு அவரை தேடி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

டெத் ஓவர்களில் மோஹித் சர்மா

மோஹித் சர்மாவின் முக்கிய பலங்களில் ஒன்று டெத் ஓவர்களில் அவரது பந்துவீச்சு. குறிப்பாக வேகத்தை குறைத்து வீசும் பந்துகளை பயன்படுத்துவதில் அவர் சிறந்து விளங்கினார். கடைசி ஓவர்களில் பேட்டர்களில் வேகமான ஷாட்கள் கட்டுப்படுத்துவதற்கு இந்த வகையான பந்துவீச்சு அவருக்கு பலமுறை கைகொடுத்துள்ளது.

அதே நேரத்தில், பவர்பிளே ஓவர்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் பந்துவீச்சாளராக அவர் அறியப்படவில்லை. ஆனால் டெத் ஓவர்களில் அவரது அனுபவமும், வேகம் குறைந்த பந்துகளை சரியான இடத்தில் வீசும் திறனும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

சிஎஸ்கேவின் பிரச்சனைக்கு தீர்வாகுமா?

கடந்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு டெத் ஓவர்கள் மிகப்பெரிய சவாலாக இருந்ததாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக போட்டியின் கடைசி கட்டத்தில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த பிரச்சனையை சரிசெய்யும் நோக்கத்தில்தான் மோஹித் சர்மாவை பந்துவீச்சு பயிற்சியாளராக கொண்டு வர ஜாகீர் கான் விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜாகீர் கானின் பயிற்சி அனுபவமும், மோஹித் சர்மாவின் டெத் ஓவர் பந்துவீச்சு அனுபவமும் இணைந்தால், சிஎஸ்கேவின் பந்துவீச்சு திட்டத்தில் மாற்றம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. 
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES