இந்தியாவில் எப்படி ஐபிஎல்லோ அதேபோல் ஆஸ்திரேலியாவின் பிக்பாஷ் தொடரும் பிரபலமானது. இத்தொடர்களுக்கு ரசிகர்கள் அதிகம் என்பதால், தொடரை சுவாரஸ்யமாக்க புதுப் புது விதிமுறைகளை கொண்டு வருகின்றனர். அப்படி பிக்பாஷ் மற்றும் மகளிர் பிக்பாஷ் தொடர்களில் கொண்டுவரப்பட்ட ’ஃப்ரீ பால் அட் ஸ்டம்ப்ஸ்’ (Free Ball at Stumps) என்ற விதிதான் தற்போது பேசும்பொருளாகி உள்ளது.
2026 மகளிர் பிக்பாஷ் லீக் தொடரில், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் டியாண்ட்ரா போட்டின் ஒரு பந்தைக்கூட எதிர்கொள்ளாமல், பவுலர் பேட்ஸ்மேன் கிரீஸில் இல்லாதபோது பந்தை ஸ்டம்புக்கு வீசி அவுட்டாக்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், இந்த விதி எப்படியான விதி? பேட்ஸ்மேன் கிரீஸுக்கே வராத நிலையில் எப்படி அவுட்டாக்க முடியும் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில், ’ஃப்ரீ பால் அட் ஸ்டம்ப்ஸ்’ (Free Ball at Stumps) என்றால் என்ன? என்பது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் 2021-22 சீசனில் பிக்பாஷ் லீக் மற்றும் மகளிர் பிக்பாஷ் லீக் தொடர்களில் இந்த விதியை அறிமுகப்படுத்தியது. இதன்படி, ஒரு விக்கெட் வீழ்ந்த பிறகு களத்திற்கு வரும் புதிய பேட்டர். அடுத்த பந்தை எதிர்கொள்ள 75 விநாடிகளுக்குள் தயாராக வேண்டும்.
அப்படி 75 விநாடிகளுக்குள் பேட்டர் தயாராக தவறினால். அவர் பிட்ச்சில் இருந்து குறைந்தது 5 மீட்டர் தள்ளி நிற்க வேண்டும். அப்போது பேட்டர் இல்லாத காலி ஸ்டம்பை நோக்கி பந்துவீச பவுலருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும். பந்து ஸ்டம்ப்பில் பட்டால், அந்த பேட்டர் அவுட் என அறிவிக்கப்படுவார். விக்கெட்களுக்கு இடையிலான தேவையற்ற தாமத்தை தவிர்த்து, ஆட்டத்தின் வேகத்தை அதிகரிப்பதே இந்த விதியின் முக்கிய நோக்கமாகும்.
Out without "facing" a ball 😮 Deandra Dottin was dismissed after the "free ball at stumps" rule came to effect. #WBBL https://t.co/8ennpoE5tP
— Cricbuzz (@cricbuzz) November 25, 2026
நேற்று (நவம்பர் 25) மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் ஹீட் 137 ரன்கள் அடித்தது. இதையடுத்து 138 ரன்கள் என்ற இலக்கை துரத்திக்கொண்டிருந்தபோது, ஜார்ஜியா வேர்ஹாம் விக்கெட்டை பிரிஸ்பேன் அணியின் லெக் - ஸ்பின்னர் சாரா கிளென் வீழ்த்தினார்.
இதையடுத்து டியாண்ட்ரா டோட்டின் பேட்டிங் செய்ய வர வேண்டும். ஆனால் அவர் 75 விநாடிகளுக்குள் கிரீஸுக்குள் வர தவறினார். இதன் காரணமாக கள நடுவர்கள் ’ஃப்ரீ பால் அட் ஸ்டம்ப்ஸ்’ விதியை அமல்படுத்தினர்.இஅதையடுத்து சாரா கிளென் ஸ்டம்ப்பை நோக்கி பந்துவீசிய நிலையில், அது நேராக ஸ்டம்ப்பை தாக்கியது. இதன் காரணமாக ஒரு பந்தை கூட எதிர்கொள்ளாமல் டியாண்ட்ரா டோட்டின் வெளியேறினார்.
இந்த விதியில் பவுலர் வீசும் பந்து ஸ்டம்ப்பில் படாமல் தவறிவிட்டால், பேட்டருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அந்த பந்து ஒரு ’டாட் பாலாக’ (Dot Ball) எடுத்துக்கொள்ளப்படும். அதன் பிற்கு பேட்டர் வழக்கம்போல் பேட்டிங் செய்யலாம். மேலும், இதற்காக பந்துவீசும் அணிக்கு கூடுதல் பந்து எதுவும் கிடையாது. இந்த ஃப்ரீ பால் அந்த ஓவரின் வழக்கமான பந்துகளில் ஒன்றாகவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இது வழக்கமான ’ஃப்ரீ ஹிட்’ விதியிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.
சர்வதேச கிரிக்கெட் விதிகளின்படி உள்ள டைம்டு அவுட் முறையும், இந்த விதியும் ஒன்றல்ல.
டைம்டு அவுட்: குறிப்பிட்ட நேரத்திற்குள் பேட்டர் வர தவறினால், பீல்டிங் அணியின் அப்பீலை தொடர்ந்து பந்து வீசாமலேயே நடுவர் அவுட் கொடுத்துவிடுவார்.
ஃப்ரீ பால் அட் ஸ்டம்ப்ஸ்: இதில் நேரடியாக அவுட் வழங்கப்படாது. மாறாக, 75 விநாடிகளுக்குள் வராமல் இருக்கும் நிலையில், பவுலரை பந்து வீச வைத்து அவர்கள் அவுட்டாக்கினால், பேட்டரை அவுட் என அறிவிக்கிறார்கள். ஒருவேளை பவுலர் ஸ்டம்ப்பில் வீச தவறும் பட்சத்தில், பேட்டருக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதனால், சர்வதேச கிரிக்கெட் விதிகளின்படி உள்ள டைம்டு அவுட் முறையும், ’ஃப்ரீ பால் அட் ஸ்டம்ப்ஸ்’ விதியும் முற்றிலும் வித்தியாசமானது.
நேர விரயத்தை தடுக்கும் வகையில், கொண்டுவரப்பட்ட இந்த ’ஃப்ரீ பால் அட் ஸ்டம்ப்ஸ்’ (Free Ball at Stumps) விதி, கடந்த 5 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தாலும், சாரா கிளென் - டியாண்ட்ரா டோட்டின் சம்பவத்திற்கு பிறகே உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.