ஐபிஎல் 2027 சீசனை முன்னிட்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா வெளியேற உள்ளார் என தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இந்த தகவலை அறிந்த சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட சில அணிகள் அவரை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், தற்போது டிரேடிங் பேச்சுவார்த்தையில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை. புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தையே பிடித்தது. இதற்கிடையே, அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கெய்ரன் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என கூறியதால், அதிருப்தியடைந்த ஹர்திக் பாண்டியா அணியில் இருந்து விலக முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் முறையில் வாங்க முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தீவிரமாக முயற்சி செய்ததாக தெரிகிறது. இதற்காக ஆயுஷ் மாத்ரே, ஷிவம் துபே உள்ளிட்ட வீரர்களை உள்ளடக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்பட்டது. ஆனால், இளம் வீரரான மாத்ரேவை விட்டுக்கொடுக்க சிஎஸ்கே தயார் இல்லை என்பதால் பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டது.
இதற்கிடையே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட அணிகளும் ஹர்திக்கை வாங்க ஆர்வம் காட்டின. ஆனால், ஹர்திக்குக்கு மாற்றாக நல்ல ஃபார்மில் இருக்கும் இளம் வீரர்களை வழங்க வேண்டும் என மும்பை நிர்வாகம் நிபந்தனை விதித்ததால் அந்த முயற்சிகளும் முன்னேறவில்லை.
இந்த சூழலில், கிரிக்கெட்டில் இருந்து தற்காலிக ஓய்வு எடுத்து புத்துணர்ச்சியுடன் மீண்டும் களமிறங்க ஹர்திக் திட்டமிட்டுள்ளதாக வெளியாகிய தகவல், அவரது டிரேடிங் வாய்ப்புகளை அதிகரித்துள்ளது. ஜபிஎல் 2027 தொடரில் சிறப்பாக விளையாடும் நோக்கில் அவர் தயாராகலாம் என்பதால், அவரை வாங்குவதற்கு அணிகளிடையே மீண்டும் போட்டி உருவாகி உள்ளது.
குறிப்பாக, சிஎஸ்கே மீண்டும் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியது. ஹர்திக்குக்கு மாற்றாக கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ் மற்றும் ரூ. 5 கோடி பணம் வாங்க முன்வந்ததாக கூறப்படுகிறது. தேவைப்பட்டால் கம்போஜுக்கு பதிலாக நேதன் எல்லிஸையும் வழங்க தயாராக இருப்பதாக சிஎஸ்கே தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை நெருங்கியதாக கூறப்பட்ட நிலையில், அக்டோபர் இறுதிக்குள் ஹர்திக் பாண்டியா சிஎஸ்கே அணிக்கு மாறுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
சிஎஸ்கேவை தவிர கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டெல்லி கேபிடல்ஸ் உள்ளிட்ட அணிகளும் ஹர்திக்கை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. இதனால், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தனது கோரிக்கையை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, ஹர்திக் பாண்டியாவை விடுவிக்க வேண்டுமென்றால், ஆயுஷ் மாத்ரே, ஷிவம் துபே, அன்ஷுல் கம்போஜ் ஆகிய மூன்று வீரர்களையும் வழங்க வேண்டும் என மும்பை நிர்வாகம் சிஎஸ்கேவிடம் வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இளம் வீரர்களை தக்கவைக்க சிஎஸ்கே திட்டமிட்டுள்ளது. மேலும், குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து வாஷிங்டன் சுந்தர் அல்லது சாய் கிஷோரை வாங்குவதற்கான முயற்சிகளிலும் சிஎஸ்கே ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த சூழலில், ஹர்திக் பாண்டியாவுக்காக மூன்று முக்கிய வீரர்களையும் ஒரே நேரத்தில் விட்டுக்கொடுப்பது அணியின் பலத்தை பாதிக்கலாம் என சிஎஸ்கே நிர்வாகம் கருதுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஹர்திக் டிரேடிங் தொடர்பான பேச்சுவார்த்தையை முழுமையாக கைவிடலாமா என்ற் ஆலோசனையில் சிஎஸ்கே இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால், ஹர்திக் பாண்டியா ஐபிஎல் 2027 சீசனில் எந்த அணிக்காக விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.